பிழைப்பு
பத்து ரூபாய் கூடுதல் விலை
வைத்து விற்பவர்
வயிற்றுப் பிழைப்புக்காக
என்கிறார்
வாங்குகிறவரின் வயிற்றை மறந்தபடி
வயிற்றுக்கெனக் கேட்பவரிடம்
எப்படி மறுப்பதென
வாங்குபவர் வாங்கிக் கொள்கிறார்
ஒரு பத்து பல பத்துகளாய்ப்
பெருகியதும்
மாளிகை போன்ற வீடு நோக்கி
விற்றவர் விரைகிறார்
வகை தொகையின்றி பரிமாறப்பட்டிருக்கும்
தொடுகறிகளோடு வயிற்றை நிரப்பிக்
கொண்டு
சர்க்கரைக்கென மாத்திரைகளை
போட்டுக் கொள்கிறார்
வாங்குபவரும் வீடு திரும்புகிறார்
பத்து ரூபாய்க்கு நான்கு
இட்டிலிகள் தரும் கடையில்
கடன் சொல்ல மனமின்றி
அந்த இரவின் வயிற்றில்
பட்டினியைப் போர்த்திக் கொண்டு
உறங்கப் போகிறார்
*****
No comments:
Post a Comment