14 Apr 2022

நவீன வியாபார குயுக்திகள்

நவீன வியாபார குயுக்திகள்

            வியாபார யுக்திகள் சூட்சமமானவை. அவற்றை யுக்திகள் என்று சொல்வதா, குயுக்திகள் என்று சொல்வதா என்ற சந்தேகம் அவற்றின் சூட்சமங்களை அறிந்து கொள்ளும் போது உங்களுக்கு உண்டாகி விடும்.

            வியாபார யுக்தியின் சர்வாதிகார உச்சம்தான் ‘பேரம் பேசாதீர்கள்’ என்பது. வியாபாரங்களில் பேரம் பேசாத வியாபாரங்கள் உண்டா என்ன? வியாபாரிகளாகிய நாங்கள் பேசுவோம், வாடிக்கையாளர்கள் பேசக் கூடாது என்ற உரிமை பறிப்பின் சூட்சமம் அது.

            வியாபார முகத்தின் மென்மையான கோர முகத்தை நீங்கள் நகைக்கடைகளில் பார்க்கலாம். அவ்வளவு மென்மையாகப் பேசுவார்கள். அரிவாளால் வெட்டுவதை விட பிளேடால் கீறியபடி வெட்டுவது போன்ற சூட்சமம் அது.

            செய்கூலி, சேதாரம் என்று கணக்குப் போட்டு ஒரு விலையைச் சொல்வார்கள். அவர்களுக்கே அது அதிகப்பட்ச விலை என்று தெரியும். வாடிக்கையாளர்கள் விலையைக் கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள் என்றதும் வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க செய்து கொடுப்பது போலக் கொஞ்சம் விலையைக் குறைத்துச் சொல்வார்கள்.

            அவ்வளவுக்கு இருந்த விலையை இவ்வளவு குறைத்துச் சொல்கிறார்களே என்ற சந்தோசத்தில் வாடிக்கையாளரும் அந்த விலைக்கு இணங்கி விடுவார்கள். நகைக்கடைகள் எவ்வளவு விலை குறைத்தாலும் அவர்களுக்குத் தெரியும் அவர்களின் லாபத்திலிருந்து எள்ளளவும் விலை குறைக்கக் கூடாது என்பது.

            இது ஒரு யுக்தி. அதிகமாக விலை வைத்துக் குறைத்து விற்பது. உண்மையில் அவர்கள் தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள். இதே யுக்தியை தள்ளுபடி காலங்களிலும் மிக நேர்த்தியாகச் செய்வார்கள்.

            அவர்கள் வைப்பதுதான் விலை என்பதால் எவ்வளவு விலை வைத்து எவ்வளவு விலை குறைத்து அல்லது எவ்வளவு தள்ளுபடி செய்து விற்க வேண்டும் என்பது அவர்களுக்கு அத்துப்படி. பொய்யிலே அரைப்படி, புரட்டிலே அரைப்படி என்ற கணக்குதான் இது.

            சமீப காலமாக இந்த யுக்தியை மக்கள் நல நிறுவனங்களும் அமைப்புகளும் கையில் எடுத்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை. ஒரு ரூபாய் விலையேற்றி மக்கள் எதிர்ப்பு எழுந்ததும் ஐம்பது பைசா குறைக்கிறார்கள். உண்மையில் அந்த நிறுவனங்களின் மற்றும் அமைப்புகளின் இலக்கு ஐம்பது பைசா விலையேற்றி விற்பதுதான். அதற்காக விலையை வேண்டுமென்றே ஒரு ரூபாய் ஏற்றி ஐம்பது பைசா குறைக்கிறார்கள். மக்களும் ஐம்பது பைசா விலை குறைத்ததை நினைத்து ஏறியிருக்கும் ஐம்பது பைசா விலையைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.

            பெருநிறுவனங்கள் நூறு ரூபாய் விலையேற்றி விட்டு ஐம்பது ரூபாய் குறைப்பார்கள். ஐம்பது ரூபாய் குறைத்த சந்தோசம் நமக்கு. அவர்கள் ஏற்ற நினைத்த ஐம்பது ரூபாய் ஏற்றி விட்ட சந்தோசம் அவர்களுக்கு. இன்னும் பெரும் பெரு நிறுவனங்கள் என்றால் ஆயிரம் ஏற்றி ஐநூறு குறைப்பார்கள். அதற்கும் பெரிதென்றால் லட்ச ரூபாய் ஏற்றி ஐம்பதாயிரம் குறைப்பார்கள்.

            அபாரமாக விலையேற்றி அதில் பாதியை விலையைக் குறைத்தால் ஒரு பொருளின் நியாயமான விலை கிடைப்பதாக இன்றைய வியாபார தந்திரம் நிலைநிறுத்துகிறது. மக்களும் அதை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். ஏற்றியதில் பாதி குறைந்தால் ஐம்பது சதவீதம் லாபம் என்ற கணக்கு அவர்களுக்கு. ஒவ்வொருவரிடம் ஐம்பது சதவீதம் ஏற்றினால் பற்பல ஐம்பது சதவீதங்கள் லாபம் என்ற கணக்கு வியாபார நிறுவனங்களுக்கு.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...