இந்தியப் பொருளாதாரம் உத்வேகம் எடுக்க…
பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் என்பது வெறுமனே பெட்ரோலியப்
பொருட்களின் விலையேற்றம் மட்டுமல்ல. ஒவ்வொரு முறை பெட்ரோலியப் பொருட்களின் விலையேறும்
போதும் பெட்ரோல், டீசல் எரிபொருட்களில் பயணித்து வரும் கனரகப் பொருட்கள் தொடங்கி காய்கறிகள்
வரை அனைத்தும் விலையேறுகின்றன.
பெட்ரோலும் டீசலும் விலையேறும் போது ஆட்டோ கட்டணத்தைக் குறைத்துக்
கொடுக்க முடியுமா? வாகனங்களில் வீட்டுக்குக் கொண்டு வந்து பொருட்களைத் தரும் அண்ணாச்சியிடம்
விலையைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று பேரம் பேச முடியுமா?
இரு சக்கர வாகனத்தில் வந்து பாலும் செய்தித்தாளும் போடும் தம்பியிடம்
மாதாமாதம் விலையேறிக் கொண்டே போகிறதே என்று கோபப்பட முடியுமா?
தங்கம் விலையேறுவதை மலைப்போடு பார்த்துக் கொண்டிருந்த காலம்
போய் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தை மலைப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் காலம்
வந்து விட்டது.
டீக்கடையில் குடிக்கும் டீ, காபியிலிருந்து ஆன்லைனில் வாங்கும்
பொருட்கள் வரை விலையேறுவதில் பெட்ரோலியப் பொருட்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
நம்மை வந்தடையும் அனைத்துப் பொருட்களும் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பப்பட்ட வாகனங்களில்
வந்து சேர வேண்டியிருப்பதால் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் அனைத்துப் பொருட்களின்
விலைகளையும் மிகவும் நேரடியாகப் பாதிக்கும்.
போன மாதம் வரை ஆயிரத்துக்கு பெட்ரோல் நிரப்பி ஓடிய இரு சக்கர
வாகனம் இந்த மாதத்திலிருந்து ஆயிரத்து இருநூறு கேட்கிறதென்றால் அதற்குக் காரணம் பெட்ரோலியப்
பொருட்களின் விலையேற்றம்தான்.
வணிக மற்றம் நுகர்வுப் பொருட்கள் மட்டுமன்றி ஒவ்வொரு தனிமனிதரையும்
பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் மறைமுகமாகவெல்லாம் அன்றி நேரடியாகவே பாதிக்கும்.
சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையேறும் போது பெட்ரோலியப்
பொருட்களின் விலையை உயர்த்தாமல் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். சர்வதேச அளவில்
பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் போது ஏன் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவதில்லை
என்று நாம் யாரைக் கேட்பது?
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் பெட்ரோலிய
நிறுவனங்கள் பாதிக்கப்படாதா என்றும் நீங்கள் கேட்கலாம். தேர்தல் நடைபெறும் காலங்களில்
எந்தப் பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துகின்றன? அப்போது
அந்த நிறுவனங்கள் பாதிக்கப்படாமலா இருக்கும்?
அரசாங்கங்கள் நிறுவனங்களின் லாபங்களை மட்டும் கருத்தில் கொள்ளக்
கூடாது. சாமானிய மக்களின் வாழ்வாதாரம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில்
கொள்ள வேண்டும்.
அரசாங்கத்திற்கு எவ்வளவோ வகையில் வரி வருவாய் வருகிறது. சரக்கு
மற்றும் சேவை வரியால் ஏகப்பட்ட வருவாய் வருகிறது. ஆண்டுக்காண்டு வருமான வரி வசூலும்
அதிகரித்துக் கொண்டே போகிறது. அன்றிலிருந்து இன்று வரை பெட்ரோலியப் பொருட்களின் மீது
விதிக்கப்படும் வரியால் ஏகப்பட்ட வருவாய் வருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையில்
பாதிக்கு மேல் வரியாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க அரசாங்கம் இரண்டு விதமான நடவடிக்கைகள்
குறித்துப் பரிசீலிக்கலாம்.
1.
பெட்ரோலியப் பொருட்களை நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படாமல் அடக்க
விலையில் விற்பது.
2.
பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியை அதிகபட்சமாக எவ்வளவு குறைக்க
முடியுமோ அவ்வளவு குறைப்பது.
இந்த இரண்டு விதமான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டால்
இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது அடித்தட்டு முதல் மேல்தட்டு வரை முழுமை பெற்ற பொருளாதார
வளர்ச்சியாக அமையும். மேலும் இந்த நடவடிக்கைகள் முடங்கிக் கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை
முடுக்கி விடும் காரணிகளாகவும் அமையும். இந்தியப் பொருளாதாரம் உத்வேகம் எடுக்க வேண்டுமானால்
இவ்விரு நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.
*****
No comments:
Post a Comment