ஒரு துளியைச் சேமித்தால் பெருவெள்ளத்தை உருவாக்கலாம்!
ஏறுவது ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. அடிக்கடி தேர்தல்கள் வந்தால்
ஏற்றம் கொஞ்சம் நிறுத்தி வைக்கப்படலாம். மற்றபடி ஏற்றத்திற்கு வேகத்தடை என்பது எங்கே
இருக்கிறது?
ஒரு நேரத்தில் தக்காளி விற்ற விலையை வெளியில் சொல்ல முடியாது.
இப்போது தக்காளியைக் கிலோ பத்து ரூபாய்க்கு வாங்க முடிகிறது. வெங்காய விலையைப் பற்றி
வெளியில் சொல்ல முடியாத காலம் ஒன்று இருந்தது. வெங்காயத்திற்குப் பதிலாக முட்டைகோஸைச்
சமையலில் பயன்படுத்திய காலம் அது. இப்போது வெங்காயம் ஒரு கிலோ இருபது ரூபாய்க்கும்
கீழே கிடைக்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை வெங்காய, தக்காளி விலைகளோடு ஒப்பிட்டு
விட முடியாது. வெங்காயமும் தக்காளியும் ஒரு நேரத்தில் சிகரத்தைத் தாண்டி விடும் அளவுக்கு
விலை ஏறினாலும் பிறிதொரு நேரத்தில் பாதாளத்தில் கிடக்கும் விலையில் வாங்க முடியும்.
பெட்ரோல், டீசல் விலைகள் ஏறினால் ஏறியதுதான். அவற்றில் விலை இறக்கத்தைக் கனவு காணத்தான்
முடியும், நிஜத்தில் காண முடியாது.
பொதுவாக நாம் எதை அதிகம் பயன்படுத்துகிறோமோ அதற்குத்தான் விலையில்
கிராக்கி இருக்கும். நாடு முழுவதும் உள்ள மக்கள் பெட்ரோல் பயன்படுத்துவதை முற்றிலுமாக
நிறுத்தி விட்டால் பிறகு பெட்ரோல், டீசல் வாங்கி உபயோகப்படுத்துவதை ஊக்குவிக்கும் விதத்தில்
மானியங்களையும் விலைச் சலுகைகளையும் அரசாங்கங்கள் அறிவிக்கும்.
துரதிர்ஷ்டவசமாக நம்முடைய வாழ்க்கை அப்படியெல்லாம் பெட்ரோல்,
டீசலைப் புறக்கணித்து விட முடியாது அளவுக்கு அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்காமல் கூட ஒரு நாள் வாழ்ந்து விடலாம் போலிருக்கிறது. ஒரு
லிட்டர் பெட்ரோல் இல்லாமல் வாழ முடியாத நிலையை நோக்கி நாம் நகர்ந்து விட்டோம்.
மனிதர்களின் இயக்கத்தை மிக அதிக அளவில் தற்போது பெட்ரோலிய எரிபொருள்களே
தீர்மானிக்கின்றன. இரு சக்கர வாகனம் தொடங்கி, முச்சக்கர, நான்கு சக்கர வாகனம், வானில்
பறக்கும் விமானம் என்று அனைத்தும் பெட்ரோலிய எரிபொருளைச் சார்ந்தே இயங்குகின்றன. போக்குவரத்தின்
ரத்த ஓட்டமே பெட்ரோலியம் எனலாம். இரத்த ஓட்டம் இல்லாமல் இயங்குவது எப்படி?
மக்களின் இயக்கத்தோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் வரி வசூலின்
இயக்கத்தோடும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்புடைதாக இருக்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தின்
வரி வருமானத்தோடு மிக முக்கிய தொடர்புடையது பெட்ரோலியம்.
அரசாங்கத்திற்கு நான் வரியே செலுத்துவது இல்லை என்று நீங்கள்
மார் தட்டிக் கொண்டு விட முடியாது. நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் போதும்.
மத்திய அரசு, மாநில அரசு என்று அனைத்திற்கும் வரி செலுத்தியவர்கள் ஆவீர்கள். பெட்ரோல்
வாங்காவிட்டாலும் பெட்ரோலியத்தில் இயங்கும் வாகனத்தில் நீங்கள் பயணம் செய்தாலும் கூட
போதும். நீங்கள் செலுத்தும் வாகனக் கட்டணத்திலிருந்து வாங்கப்படும் பெட்ரோலியத்தைக்
கணக்கில் எடுத்துக் கொண்டால் எப்படியும் நீங்களம் வரி செலுத்தியவர்கள் ஆவீர்கள்.
பெட்ரோலியத்தில் நிரம்பிக் காணப்படும் வரிகள் மூலமாக அனைத்து
மக்களும் வரி விதிப்பின் கீழ் வந்து விடுகிறார்கள். இது தவிர வருமான வரி, சேவை வரி
மற்றும் சரக்கு வரி, சுங்க வரி, குடிநீர் வரி, சொத்து வரி, சாலை வரி, கல்வி வரி என்று
பல்வேறு வரிகளுக்கு ஆட்படுபவர்களும் உண்டு.
பெட்ரோலியம் போன்ற பொருட்கள் விலை ஏறுவதில் ஒரு பெருத்த லாபமே
அடங்கியிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாமல் மிகப் பெரிய பணப் பரிமாற்றம் நடைபெறுவதும்
அடங்கியிருக்கிறது. மக்களைக் கசக்கிப் பிழியாமல் வரியும் வசூலித்து, பொருள்களின் விலை
ஏறுவதால் அதனின்றும் அதிகமான வரி வருவாயைப் பெறும் மறைமுகப் பலன்கள் பெட்ரோலிய விலை
அதிகரிப்பால் உண்டு.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் மக்கள் விரும்பாவிட்டாலும் பணப்புழக்கத்தையும்,
பணப் பெருக்கத்தையும் விரும்புபவர்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தை உள்ளுர
விரும்பத்தான் செய்வார்கள்.
உங்களால் முடியுமானால் எப்படியெல்லாம் ஒவ்வொரு துளி பெட்ரோலை,
டீசலைப் பயன்படுத்த முடியாமல் இருக்க முடியும் என்று பாருங்கள். அதனாலென்ன பெரிய மாற்றம்
வந்து விடப் போகிறது என்று நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் சிறு துளி பெருவெள்ளம்
என்பது மழைக்கும் சேமிப்புக்கும் மட்டுமல்ல, பெட்ரோலியப் பயன்பாட்டுக்கும் சாலப் பொருந்தும்.
*****
No comments:
Post a Comment