எப்படி இருப்பது என்பதில் எந்தக் குழப்பமுமில்லை
நத்தையைப் போல மெல்ல நகர்வதா
நாயைப் போல விருட்டெனப் பாய்வதா
ஆமையைப் போல அமைதியாகச் செல்வதா
அணிலைப் போலத் துறுதுறுவென
இருப்பதா
வாழ்க்கைக்குத் தேவை
வேகமும் விவேகமும் என்பாரும்
உண்டு
அமைதியும் நிதானமும் என்பாரும்
உண்டு
எப்படி இயங்குவது என்பதில்
எந்தக் குழப்பமும் எப்போதும்
இருந்ததில்லை
தன்னுடைய வேகத்தில் சுழல்கிறது
பூமி
தன்னுடைய அச்சில் சுழல்கின்றன
கிரகங்கள் ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு
வேகம்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு
இயல்பு
யாரும் யாருடைய வேகத்தைப்
பழிப்பதுமில்லை
எதுவும் எதனுடைய இயல்பைக்
குறை கூறுவதுமில்லை
நத்தையின் இயல்பு மெதுவானது
என்றால்
நாயின் இயல்பு வேகமாக இருந்து
விட்டுப் போகட்டும்
உன்னுடைய இயல்பு என்னவோ
அப்படியே இருந்து விட்டுப்
போகலாம் நீயும்
*****
No comments:
Post a Comment