நடிகர்களின் பிம்பச் சித்திரங்கள்
பொதுவாக இந்த நடிகர்கள் எளிமையாக இருப்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் எளிமையானவர்கள் இல்லை. நடித்து நடித்து அவர்களுக்கு எளியைமாக இருப்பது
போல நடிப்பதும் ஒரு பழக்கமாகி விடுகிறது.
நடிகர்கள் எளிமையாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏன் எளிமையாகச்
சம்பளம் வாங்க மாட்டேன்கிறார்கள் என்பதை எப்போதும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்குப்
பலவிதங்களிலும் விளம்பரம் தேவைப்படுகிறது. எளிமையாக இருப்பது போலக் காட்டிக் கொள்வது
நவீன காலத்தின் மாபெரும் விளம்பர யுக்தி. அந்த யுக்தியைக் கையாளாத நடிகர்கள் இருக்கின்றார்களா
என்ன?
நடிகர்களால் வாழ்க்கை குறித்த தத்துவத்தையோ, சித்தாந்ததையோ வடிவமைத்துக்
கூறி விட முடியாது. அவர்கள் பொதுவாகத் தன்னியல்பில் இல்லாதவர்கள். தாங்கள் ஏற்று நடிக்கப்
போகும் பாத்திரத்தின் கனவுகளில் நினைவுகளில் இருப்பவர்கள். தன் நிலையில் ஒரு போதும்
இருந்திராத மனிதரால் வாழ்க்கைக் குறித்த தீர்க்கமான ஒரு முடிவுக்கு எப்படி வர முடியும்?
நடிகர்கள் பல விதமாக மக்களைக் கவர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
மக்கள் நடிகர்களை மறந்து விட்டால் அவர்களுக்கு வேலை இல்லை. எப்படியெல்லாம் மக்கள் மனதில்
இடம் பெறலாம் என்று அவர்கள் சதா அலைபாய்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு அவர்களைப்
பொருத்த வரை மக்களுக்குப் பிடித்தமான ஒன்றை அவர்களுக்கு மேலும் பிடித்தவிதமாக வழங்குவது
எப்படி என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். வாழ்க்கை அப்படியா? பிடிக்காத கூறுகளைக் கூட
வாழ்க்கை இழுத்துக் கொண்டு வரும்.
வாழ்க்கையின் பிடிக்காத சவால் விடும் கூறுகளை நடிகர்கள் தங்களின்
சாகசங்களால் எதிர் கொள்வார்கள். எதார்த்தத்தில் அப்படி எதிர்கொள்ள முடியாது. இந்த எதார்த்த
மறுப்பைத் தன் சாமார்த்தியமான பாவனைகளாலும் வசனங்களாலும் மறைக்கும் வேலையை ஒரு நடிகர்
எப்போதும் செய்து கொண்டிருக்க வேண்டும்.
எதார்த்தத்தை விலக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கும் நடிகர்கள்
காட்டும் வாழ்க்கை என்பது பொது மக்களுக்கு எப்போதும் பயன் தராது. அவர்களைப் பொருத்த
வரையில் அவர்கள் தொழில் முறையில் நடிகர்கள். அவர்கள் தங்கள் பிழைப்பிற்காக நடிக்கிறார்கள்.
அவர்களின் பிழைப்பை மேலும் விரிவுபடுத்தி அதிகம் சம்பாத்தியம் பார்க்க அவர்கள் மேட்டிமைத்
தன்மையோடு அவ்வபோது எளிமை என்பதையும் முரண் தரும் சுவாரசியத்தைப் பெருக்குவதற்காகக்
கையாள்கிறார்கள்.
தொழில்முறையில் சம்பாத்தியத்தைப் பெருக்கிக் கொண்டும், சம்பாத்தியத்தைப்
பெருக்கிக் கொள்வதற்கான விளம்பரங்களை வளர்த்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத்
தெரியும்.
வாழ்க்கைக்கான கோட்பாடுகளைக் காட்ட வேண்டும் என்று நடிகர்கள்
நினைத்தால் அவர்களின் நடிப்பிலிருந்து அவர்கள் வெளி வந்தாக வேண்டும். வெளிவராத வரை
அவர்களின் பிம்பங்களே அவர்களைப் பிணித்திருப்பதை அதிலிருந்து வெளிவர முடியாத தன்மைகளை
உருவாக்கிக் கொண்டிருப்பதை அவர்கள் உணர வேண்டும்.
*****
No comments:
Post a Comment