21 Apr 2022

சென்னையில் நான் விரும்பும் இரு இடங்கள்

சென்னையில் நான் விரும்பும் இரு இடங்கள்

            அண்ணா அமர்ந்தபடி படித்த வண்ணம் இருக்கிறார். ஒரு நூலகத்தின் நுழைவுக்குப் பொருத்தமான வரவேற்பையும் லட்சிய நோக்கையும் அந்தத் தோற்றத்தின் மூலம் அண்ணா வழங்குகிறார்.

            பொது அமைப்புகள் நடத்தும் பல நிர்வாகங்களின் தூய்மை நாம் அறிந்ததே. அதற்கு மாறாக இருக்கிறது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம். கட்டுக்கோப்போடு ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் நிர்வாகம் போலிருக்கிறது நூலகத்தின் நிர்வாகமும் பராமரிப்பும் அத்துடன் அதன் தூய்மையும்.

            ஒரு நூலகத்திற்குள் நுழைந்து புத்தகங்களைப் பார்த்துப் படித்து உண்டாகும் சிலிர்ப்பையும் பிரமிப்பையும் நூலகத்தைப் பார்க்கும் போதே ஏற்படுகிறது என்றால் அதுதான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் எனலாம்.

            வெகு நேர்த்தியாக நூல்களை அடுக்கியிருக்கிறார்கள், வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு நூலகத்திற்குத் தேவையான பணியாளர்கள் இருக்கிறார்கள். நிறைந்த அன்போடு வழி நடத்துகிறார்கள். நூலகத்தின் பல்வேறு பகுதிகளில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்தும், படிக்க வேண்டிய நூல்கள் குறித்தும் அற்புதமாக வழிகாட்டுகிறார்கள்.

            குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நூலகப் பகுதி பெரியவர்களையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை மரம் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தை ஒரு கணம் என் நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது. குழந்தைகளுக்கான நூலகப் பகுதியில் அவர்களுக்கு ஏற்றவாறும் அவர்கள் விரும்புமாறும் இருக்கை வசதிகளைப் பார்த்த போது ‘அடேங்கப்பா’ என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

            ஒவ்வொரு தளத்திலும் நூல்களை வகைப்படுத்தியிருக்கும் பாங்கு அதிசயத்தைக் காண்பதைப் போல மீண்டும் மீண்டும் காணச் செய்கிறது. சில லட்சக் கணக்கான நூல்கள் அங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். வருங்காலங்களில் சில லட்சங்கள் பல லட்சங்கள் மாறுவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

            என்னைக் கேட்டால் சென்னைக்குச் சென்றால் தவற விடக் கூடாத இடங்களுள் முதன்மையானது என்று அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைச் சொல்வேன். நூலகத்தைப் பார்த்து விட்டு அப்படியே அருகில் இருக்கும் காந்தி மண்டபத்திற்கும் சென்று அமைதியைத் தரிசித்து விட்டு வரலாம். அங்குதான் காமராசர் நினைவு மண்டபம், பக்தவச்சலம் நினைவு மண்டபம், இரட்டை சீனிவாசன் மணி மண்டபம், மொழிப்போர் தியாகிகள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவு மண்டபங்கள் போன்றவை அமைந்திருக்கின்றன. 

            சென்னைக்குச் செல்பவர்கள் கோட்டூர்புரத்தைக் குறி வைத்துச் சென்றால் இந்த இரண்டு முக்கியமான இடங்களையும் பார்த்து விட்டு வரலாம் என்று சொல்வதை விட தரிசித்து விட்டு வரலாம் என்று சொல்லலாம்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...