14 Apr 2022

தமிழ்ச்சமூகத்தின் நகர்வுகளும் போக்குகளும்

தமிழ்ச்சமூகத்தின் நகர்வுகளும் போக்குகளும்

            ஒட்டுமொத்தமாகத் தமிழ்ச் சமூகம் எல்லாவற்றையும் ஒரு ஹாஸ்யமாகப் பார்க்கத் தொடங்கி விட்டது. எல்லாவற்றுக்கும் மீம்ஸ் வெளியிட்டுக் கலாய்த்துக் கொள்வதில் மனநிறைவு கொள்கிறார்கள்.

            மேலும் இந்தத் தமிழ்ச் சமூகம் வடிவேலு காமெடியின் பிரதிபலிப்பாக இருப்பதை அளவுக்கதிகமாக விரும்பவும் செய்கிறது.

            தமிழகத்தின் பொழுதுபோக்கு மனப்பான்மையைப் பற்றி இனிமேலும் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை. தாங்கள் பெற்ற பொழுதுபோக்கு மகிழ்ச்சிக்காக ஒரு முதல்வரை உருவாக்கவும் தமிழர்கள் தயங்கியதில்லை.

            ஒரு காலத்தில் வருமான வரிச் சோதனைகளைப் பயத்தோடு பார்த்த காலம் மாறி விட்டது. வருமான வரிச் சோதனையில் பொருட்கள் சிக்கினால் அதைக் கேவலமாகப் பார்த்த காலமும் உண்டு.

            தற்போது என்னவென்றால் வருமான வரிச் சோதனைகள் நடக்கும் நாட்களை பிரியாணி குவார்ட்டர் சகிதம் விருந்து வைத்தே கொண்டாடுகின்றனர். வருமான வரிச் சோதனைகள் நடப்பதை கௌரவமாகவும் கருதுகிறார்கள். ஒரு  வருமான வரிச் சோதனை நடக்குமளவுக்குச் சம்பாதிக்கவில்லையென்றால் அரசியலில் இருந்ததற்கு அர்த்தமென்ன என்று கேட்கவும் செய்கிறார்கள்.

            பொதுவெளியில் குடிப்பதையும் குடித்து விட்டுக் கூத்தாடுவதையும் ரகளை செய்வதையும் பிறப்புரிமை போல பேசுகிறார்கள். போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கண்டும் காணாமலும் சர்வ சாதாரணமாகக் கடந்து போகிறார்கள்.

            உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்குச் சென்று லட்ச கணக்கில் செலவிட்டு வருவதை அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

            வயிறு முட்ட விருந்துண்டு மாத்திரைகள் இட்டுக் கொள்வதை உலக வழக்கமென்று உளறி வைக்கிறார்கள்.

            ஓட்டுக்கு நோட்டு வாங்குவதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் உரிமை போலப் பேசுகிறார்கள்.

            வேலை செய்யாமல் சாமர்த்தியமாக ஏமாற்றிச் சம்பாதிப்பதைப் பெருமை பொங்க பேசிக் கொள்கிறார்கள். வியர்வை சிந்தி உழைப்பதை நகைச்சுவையாக்கி அசட்டையாகப் பேசிச் சிரிக்கிறார்கள்.

            எதை எப்படிப் பார்க்க வேண்டும்? எதற்கு எப்படி வினைபுரிய வேண்டும்? என்ற விவஸ்தைகளைத் தமிழகம் இழந்து வருகிறதோ என்று தோன்றுகிறது.

            பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்திற்காகத் தன்னியல்பாக எதிர்குரல்கள் எழும்பிய காலங்கள் காணாமல் போய் விட்டன. பெட்ரோலியப் பொருட்கள் விலையேறினால் அதற்காகப் போராட வேண்டியதும் எதிர்குரல் கொடுக்க வேண்டியதும் எதிர்கட்சிகளின் கடமை என்று நினைக்கிறார்கள். பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கிரிக்கெட் ஸ்கோர் போலப் பார்த்து வினைபுரியும் மனநிலையும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

            எல்லாவற்றையும் தீவிரமாகப் பார்த்தால் ரத்தக்கொதிப்பும், மன உளைச்சலும்தான் வளர்கிறது என்று சொல்வோரையும் நீங்கள் பார்க்கலாம். அதற்காக எல்லாவற்றையும் எந்தவிதமான தீவிரத்தன்மையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

            தீவிரமாகப் பார்க்க வேண்டியவற்றைத் தீவிரமாகத்தான் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் நகைச்சுவையாகப் பார்த்துக் கொண்டிருந்தால் நாளை நம்முடைய ஒட்டுமொத்த வாழ்வையும் உலகம் நகைச்சுவையாகப் பார்க்கும் காலம் நெருங்கி விடும்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...