நாடுகளின் நெருக்கடிகள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த இரண்டு நாடுகளுக்கும் ஏகப் பொருத்தமான சில
அம்சங்கள் இருக்கின்றன. அறமற்ற போர்களைத் துணிந்து நடத்துவதில் இரண்டு நாடுகளும் கில்லாடிகள்.
அத்துடன் குற்றசாட்டுகளை அதிகம் கொண்டிருக்கும் சுயநலமான தலைவர்களைக் கொண்ட நாடுகள்
என்பதையும் மறுக்க முடியாது.
தலைவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். தம்மைத் தேர்ந்தெடுக்காதோரையும்
காத்து நிற்கும் பொறுப்பும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. இலங்கையின் ராஜபக்சேக்கள்
அந்தப் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்பட்டவர்கள் கிடையாது. இன ஒழிப்பு பொரைத்
துணிந்து நடத்தியவர்கள். ஈழத்தமிழர்களை அவர்கள் மனிதர்களாக மதித்தவர்கள் கிடையாது.
ஆயுதங்கள் வாங்க நாட்டின் அந்நிய செலவாணி முழுவதையும் பயன்படுத்தியவர்கள். அப்படி வாங்கியதில்
கணிசமான ஊழலைச் செய்து அந்தப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பாதுகாப்பாக முதலீடும்
செய்தவர்கள்.
ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான திட்டவட்டமான
விதியைத் திருவள்ளுவர் வகுத்துச் சொல்லியிருக்கிறார். அதன்படி
“அல்லற்பட்டு ஆற்றாது அழுத
கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.” (குறள். 555)
என்கிறார் திருவள்ளுவர்.
இலங்கையில் தமிழர்கள் பட்ட அல்லல்கள் கொஞ்சமா என்ன? தமிழர்கள்
ஆற்றாது அழுத கண்ணீர் இந்தியப் பெருங்கடலை நிறைக்கும். அன்று ஈழத்தமிழர்கள் செல்வத்தை
எப்படியெல்லாம் பறி கொடுத்தார்களோ அப்படித்தான் இலங்கை தன் பொருளாதாரத்தைப் பறிகொடுத்து
விட்டு நிற்கிறது.
ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது அந்நாட்டின்
தலைவர்களின் சொத்துகளைக் கையகப்படுத்தினால் போதும் நிலைமையை வெகு எளிதாகக் கையாண்டு
விடலாம்.
தலைவர்களிடம் சொத்துகள் குவிந்து பொதுமக்களிடம் பணம் புழங்குவதில்
நிலவும் பற்றாக்குறைதான் ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம்.
தலைவர்கள் மக்களை அல்லல்படுத்தி ஆற்றாத கண்ணீரைச் சிந்த செய்து கசக்கிப் பிழிந்துச்
சொத்துக்களைச் சேர்க்கும் போது மக்கள் சிந்திய கண்ணீரே தலைவர்கள் சேர்த்த சொத்துகளை
தேய்க்கும் படையாகி விடுகிறது.
இலங்கைக்கு ஏற்பட்டது போன்ற ஒரு நிலை, பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது
போன்ற நிலை இந்தியாவுக்கும் ஏற்படுமா என்ற கேள்வி அண்மைக் காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
அது தலைவர்களைப் பொருத்த விசயம்.
எந்த நாட்டில் சுயநலமிக்க தலைவர்கள் பெருகுகிறார்களோ, பொதுநலமிக்க
தலைவர்கள் இல்லாமல் போகிறார்களோ அந்த நாடு எல்லாவிதமான நெருக்கடிகளுக்கும் ஆளாகும்.
நாடு என்பது நாணயமிக்க குடிமக்களால் மட்டுமன்று, நேர்மைமிக்க
தலைவர்களாலும் ஆக்கப்படுகிறது. அதையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்,
“ஆங்கமைவு எய்தியக் கண்ணும்
பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு.” (குறள். 740)
என்று.
இந்தியா போன்ற நாட்டில் நல்ல
தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் மகத்தான ஜனநாயக பொறுப்பு மக்களிடமும் இருக்கிறது. ஆகவே
இந்தியா போன்ற நாடுகளில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் அதற்கு சரிபாதி காரணம் மக்களும்
என்பதை மறுக்க முடியாது.
*****
No comments:
Post a Comment