2 Apr 2022

பெரிய மனிதத்தனங்கள் தேவையில்லாத வாழ்வு

பெரிய மனிதத்தனங்கள் தேவையில்லாத வாழ்வு

            வயது ஆனாலும் பெரிய மனிதர் என்ற தோரணையெல்லாம் என்னிடம் இருந்ததில்லை. இன்னும் குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் அவர்களை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

            குழந்தைகளை மட்டுமல்ல, இளைஞர்களையும்தான். அவர்கள் புகைக்கிறார்கள், மது அருந்துகிறார்கள், அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள், விழாக்களில் பிரச்சனை செய்கிறார்கள் என்று ஆயிரம் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது வைக்கப்பட்டாலும் அவர்கள் மேல் எனக்கு எவ்வித கோபமும் எப்போதும் எழுந்ததில்லை.

            இளைஞர்களின் சக்தி எனக்கு எப்போதும் பிரமிப்பூட்டும் வகையில்தான் இருக்கிறது. அவர்களைப் போல புதுமையாகச் சிந்திப்பதற்கு எப்போதும் பூமியில் ஆள் இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

            நீதி, நியாயம் பேசும் பெரிய மனிதர்கள் எவரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டாலோ, விபத்தில் மாட்டிக் கொண்டாலோ துணை நிற்க முன் வர மாட்டார்கள். அவர்கள் அப்போதும் எந்த நீதி, எத்தகைய நியாயம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, உதவியைச் செயலில் காட்ட ஒரு போதும் முன் வர மாட்டார்கள். ஆனால் அவர்களால் அராஜகமாக நடந்து கொள்வதாகச் சொல்லப்படும் இளைஞர்கள்தான் ஆபத்து நேரங்களில் ஆபத்பாந்தவராக உதவ முன் நிற்கிறார்கள்.

            அவர்களிடம் பேசும் ஒவ்வொரு பொழுதும் நான் மிகுந்த உற்சாகமாக உணர்கிறேன். உண்மையில் சொல்லப் போனால் என்னுடைய உற்சாகம் அனைத்தும் அவர்களிடம் கடன் வாங்கியதுதான். அவர்களைப் பார்த்துதான் உற்சாகமாக இருக்கும் எழுச்சியைப் பெறுகிறேன்.

            இளைஞர்களின் யோசனைகளை, சிந்தனைகளை, பேச்சுகளை அவர்களிடம் நிகழ்த்த வேண்டிய உரையாடல்களை மூத்த சமூகம் தங்கள் வயது மற்றும் பெற்றுள்ள அனுபவங்களைக் காட்டி முட்டுக்கட்டைப் போட்டு தடுத்து நிறுத்துகின்றன.

            ஒரு நாகரிக சமூகத்தில் அனைவருக்கும் பேச உரிமை இருக்கிறதுதானே! தங்கள் தரப்பு நியாயங்களைக் கூடவோ, குறைவோ எடுத்து வைக்க இடம் இருக்கிறதுதானே! அதைக் காது கொடுக்க கேட்க தயாராக இல்லாத போது அவர்கள் முதிய சமூகத்துக்கு எதிராக மாறி நிற்கிறார்கள்.

            பெரியவர்களால்தான் சடங்குகள், சம்பிரதாயங்கள் சரியாக நடப்பதாகச் சொல்கிறார்கள். இளைஞர்கள் இல்லாமல் எந்தச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லை. ஏனென்றால் அவர்கள்தான் அவற்றை நிகழ்த்துகிறார்கள். அவற்றை நிகழ்த்துவதற்கான சக்தி அவர்களிடம்தான் இருக்கிறது. அந்தச் சக்தியை நம்பித்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

            உழைப்பாளிகளின் வியர்வை உறிஞ்சும் சில முதலாளிகளைப் போலத்தான் ஒட்டுமொத்த பெரிய மனிதர்களின் தொகுப்பும் நடந்து கொள்கிறது. அவர்களது அளப்பறிய சக்தியை அவர்களுக்குத் தகுந்தாற் போல செயல்படுத்த மட்டும் ஆசை கொள்கிறார்கள் அந்த பெரிய மனிதர்கள். இளைய சமூகத்தின் விருப்பங்களையும் உரையாடல்களையும் புறந்தள்ள நினைக்கிறார்கள்.

            பெரிய மனிதர்கள் ஆடி அடங்கி விடுகிறார்கள். ஆடி அடங்கிய ஆட்டத்திற்குள் இளைஞர்களையும் ஆடச் சொல்லிப் பார்க்கிறார்கள். எந்தப் பெரிய மனிதர் அப்படி இளைய பருவத்தில் ஆடி அடங்கிய ஆட்டத்திற்குள் ஆடியிருப்பார்?

            இப்போது வேண்டுமானால் நீங்கள் செல்லை நோண்டிக் கொண்டிருக்க வேண்டாம் என்று அறிவுரை சொல்லும் நிலையில் இருக்கலாம். ஆனால் தொலைக்காட்சி ஆக்கிரமித்த அந்த ஆண்டுகளில் நீங்கள் தொலைக்காட்சிகளில் மூழ்கிக் கிடந்தவர்கள் என்ற உண்மையை எந்த வரலாற்றில் இல்லையென்று சொல்வீர்கள்?

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...