பரிசீலிக்க வேண்டிய கூறுகள்
ஏதாவதொரு கோட்பாட்டைக் கொடுத்து வாழ்க்கையை நெருக்கடியில் தள்ளிக்
கொண்டிருக்கிறார்கள் அறிவுஜீவிகள் எனப்படும் இலக்கியவாதிகள். ஒவ்வொருவரும் சுதந்திரமாக
வாழ்ந்துப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏன் அவர்கள் வழங்கக் கூடாது? அவர்கள் வாழ்க்கையை
வகை பிரித்துக் காட்டலாம். ஏன் வாழ்க்கை குறித்த முடிவைத் தருகிறார்கள்? ஒவ்வொருவரும்
தம் அனுபவத்தாலும் அறிவினாலும் அடைய வேண்டியது முடிவு. ஒருவரது முடிவு இன்னொருவருக்குப்
பொருந்தாது.
இலக்கியவாதிகள் அல்லது படைப்பாளர்கள் அல்லது எழுத்தாளர்கள் என்று
நீங்கள் எப்படி வைத்துக் கொண்டாலும் அவர்களுக்கு வாழ்க்கையைக் குறித்துச் சுவாரசியமாகச்
சொல்லத் தெரிகிறது அவ்வளவுதான். அதுவே வாழ்க்கைக் குறித்த முடிவைச் சொல்வதற்குப் போதுமான
தகுதி ஆகி விடாது. வாழ்க்கையை முழு முற்ற வாழ்ந்து பார்த்தவருக்கும் வாழ்க்கை குறித்த
எந்த ஒரு முடிவைச் சொல்லவும் தகுதி கிடையாது. முற்ற வாழ்ந்து பார்த்தவருக்கு அது நன்றாகவே
தெரியும்.
இலக்கியம் என்பது வாழ்க்கையை ரசனையோடு அணுகுவதற்கான ஒரு வெளிச்சத்தைக்
காட்டுகிறது. அந்த வெளிச்சத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இலக்கியவாதிகள்
எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
ஒவ்வொருவரும் அவரவர் நோக்கில் வாழ்க்கையை அணுகவும் வாழ்ந்து
பார்க்கவும் முழு உரிமை இருக்கிறது. விதவிதமாக வாழ்ந்து பார்க்கும் வகையில்தான் வாழ்க்கை
விரிந்து கிடக்கிறது.
உலகின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இலக்கியத்திலிருந்து மட்டும்
வந்து விடவில்லை என்பதை இலக்கியவாதிகள் உணர வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம்
என்று பல்வேறு துறைகளிடமிருந்து உலகம் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.
எழுதுவதற்கு முன் இலக்கியவாதிகள் தலைக்கனத்தைக் கழற்றி வைத்து
விட்டுதான் எழுத வேண்டும். ஆனால் இந்த இலக்கியவாதிகள் செய்வதென்ன? தமக்குத்தான் எல்லாம்
தெரியும் என்ற கோதாவுடன்தான் எழுதத் தொடங்குகிறார்கள். நீங்கள் பார்த்தீர்கள் என்றால்
உங்களுக்கே தெரியும் மொன்னையான தீர்வைத்தான் அவர்கள் சமூகத்தை வெறுக்கும் நோக்கில்
உக்கிரமான எழுத்துகளில் தருகிறார்கள்.
எழுத்து நகர்வதற்கான ஓர் உத்வேகத்தைத்தான் தருகிறது, வழியைத்தான்
காட்டுகிறது. அது எல்லாம் நல்லதுதான். ஆனால் ஓர் உத்வேகம், ஒரு வழி தவறாகவும் போக வாய்ப்புண்டு
என்பதை எழுதுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நடைமுறை எனும் உரைகல்லில் உரசிப்
பார்க்கும் போது ஒவ்வொரு காலத்துக்கு எது தேவையோ அதை அது தேவைப்படும் இடத்திலிருந்து
தேவையான அளவில் எடுத்துக் கொள்கிறது.
தற்போதைய காலத்துக்கான தீர்வு இலக்கியத்திலிருந்து தேவைப்படவில்லை
என்றால் காலம் இலக்கியத்தைத் தேர்வு செய்யாது. அதற்கான தீர்வு எங்கிருந்து எதிலிருந்து
கிடைக்குமோ அங்குப் போய் அதைத்தான் தேர்வு செய்யும்.
இலக்கியவாதிகள் வெகு நுட்பமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவர்கள் எழுதி விடுவதாலேயே எழுதுவதெல்லாம் இலக்கியமாகி விடாது. அப்படியே இலக்கியமானாலும்
உலகமும் காலமும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இடம், காலம் என்ற இரு வலிய கூறுகளில்
நிலைத்து நிற்கும் சிந்தனைகளைத் தரும் இலக்கியங்களே கண்டு கொள்ளப்படுகின்றன. மற்றபடி
இலக்கியவாதிகள் சமூகத்தின் மீதோ, சமூகத்தில் இருக்கும் மக்கள் மீதோ, அவர்கள் வழமையாகக்
கொண்டாடும் இலக்கியங்கள் மீதோ புதிய இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கோபம்
கொள்ளாமல் புழுதி வாரித் தூற்றாமல் இருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
*****
No comments:
Post a Comment