
பிரியங்களின் வாயில்களை நோக்கி நடத்தல்
தூரம் கடக்க முடியாததாக இருக்கிறது
ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பதற்குள்
எழும் பெருமூச்சு முன்னோக்கி
எழுந்து
பின்னோக்கி மூன்றடி தள்ளுகிறது
பயணத்தின் சிரமங்களைக் கருத்தில்
கொண்டு
நிறுத்தி விடுவதற்கான ஆலோசனைகள்
காற்றில் பறந்து வருகின்றன
சமவெளியில் நகர்வதற்கு
மலையேறுதலின் பிரயத்தனத்தை
மேற்கொள்ள வேண்டியிருப்பதாக
புகார்கள் திசைகளில் கலந்து
கொண்டிருக்கின்றன
எந்த நொடியில் வேண்டுமானால்
எல்லாம் நிறுத்தப்படலாம்
என்ற
அச்சுறுத்தல்கள் கேட்டுக்
கொண்டிருக்கின்றன
என்ன செய்வது
துயரங்களைக் கணக்கெடுத்துக்
கொண்டு
பிரியங்களின் வாயில்களை நோக்கி
நடப்பதை
எப்படி நிறுத்துவது
*****
No comments:
Post a Comment