ஒவ்வொருவர் கையிலும் ஒரு திரை
படம் பார்ப்பதற்கென்றே தவமாய்த் தவமிருந்து தியேட்டர்களுக்குப்
போன காலத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படி ஒரு காலம் இருந்ததா என நினைக்கத் தோன்றுகிறது.
திருவிழாக்களில் திரை கட்டி படம் போடுவார்கள் என்பதால் ஒவ்வொரு
நாளும் ஐயனாரப்பரிடம் சீக்கிரம் உனக்குத் திருவிழா வர வேண்டும் என்று ஐயனாரப்பரிடமே
வேண்டிக் கொண்டதுண்டு.
குடும்பங்களில் ஏதேனும் விஷேசம் என்றால் டி.வி., டெக்கை வாடகைக்கு
எடுத்து வந்து படம் போடுவார்கள் என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளும் ஏதேனும்
ஒரு விஷேசம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு.
காலம் மாறிக் கொண்டிருந்த போது தூர்தர்ஷன் வந்ததும் ஞாயிற்றுக்
கிழமைப் படங்களுக்காக மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும்
சினிமா பாடல்களுக்காக ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சிக்காக அனைத்து வேலைகளையும் ஒத்தி
வைத்து விட்டுக் காத்திருந்ததும் உண்டு.
கேபிள் டிவிக்களின் வருகைக்குப் பின் சினிமா பார்ப்பது ஒன்றும்
பிரமாதான காரியம் இல்லை என்றாகி விட்டது. கேபிள் டிவிக்கள் தினம்தோறும் படங்களை ஒளிபரப்பிக்
கொண்டிருந்தன.
ஒரு கட்டத்தில் சினிமா படங்களைத் தூக்கி தூர எறிந்து விட்டு
அந்த இடத்தை மெகா தொடர்கள் பிடித்துக் கொண்ட போது, “இப்பிடித்தான் அந்தக் காலத்துல
விடிய விடிய பத்து நாளு, பதினைஞ்சு நாளு திருவிழாவுல நாடகம் நடத்துவாங்க. நாங்கல்லாம்
ஒரு நாளு விடாம பார்ப்போம்.” என்று ஊர்க்கிழவிகள் பேசிக் கொண்டனர்.
சினிமா பார்ப்பது, சீரியல் பார்ப்பது என்று விரிந்து காட்சி
உலகம் வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், டிக் டாக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் என விரிந்து
வலை பரப்பிய பிறகு இப்போதெல்லாம் ஒரு சினிமாவைப் பார்ப்பது பெரிய காரியமில்லை. யாரும்
மனம் ஒப்பி முழு சினிமாவைப் பார்க்கவும் தயாராக இல்லை. ஒன்று மாற்றி ஒன்றைப் பார்த்துத்
தொடுகறி கணக்காகப் படம் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
ஒவ்வொருவரின் காத்திருப்புகளையும் காட்சி ஊடகங்கள் நிறைத்துக்
கொண்டிருக்கின்றன.
அன்றொரு நாள் நண்பர் ஒருவருக்காக
மருத்துவரைப் பார்க்க செல்ல நேர்ந்தது. மருத்துவரைப் பார்க்க பெருங்கூட்டம் வந்து கொண்டிருந்தது.
மருத்துவருக்காகக் காத்திருப்போரை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அறைக்குள்
மிகப் பெரிய திரையில் திரைப்படக் காட்சிகள் விரிந்து கொண்டிருந்தன.
சுமார் நாற்பது பேருக்கு
மேல் மிகுந்திருந்த அறையில் யாரும் திரையில் ஒளிர்ந்த படத்தைப் பார்க்கவில்லை. எல்லாருக்கும்
பார்த்துக் கொள்ள அவரவர் கையில் திரையையும் ஒளியையும் ஒலியையும் கக்கும் அலைபேசி இருந்தது.
அவரவர் நோக்கத்திற்குத் தகுந்தாற்
போல் அலைபேசி திரையை இயக்கிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக எல்லாருக்காக ஒளிர்ந்து கொண்டிருந்த
திரை அதன் போக்கிற்குத் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது.
*****
No comments:
Post a Comment