கடல் தாயின் முன் சிறு குழந்தை நான்
சென்னையில் எனக்குப் பிடித்த இடங்கள் இரண்டு. ஒன்று கடற்கரை.
மற்றொன்று நூலகம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கடலைப் பார்த்துக் கொண்டே, கடல் அனுப்பும்
அலைகளை ரசித்துக் கொண்டே இருக்க முடியும். கடலைப் போலத்தான் நூலகமும். எவ்வளவு நேரம்
வேண்டுமானாலும் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்க முடியும்.
இந்தப் பத்தியில் கடலைப் பற்றியும் அடுத்த பத்தியில் அண்ணா நூற்றாண்டு
நினைவு நூலகத்தைப் பார்த்த அனுபவத்தையும் எழுத விருப்பம்.
என் அத்தானின் மகனும் மகளும் என் விருப்பங்களை நிறைவேற்றுவதில்
தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இருவரும் என்னை முதலில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு
அழைத்துச் சென்றார்கள். அவர்கள் அழைத்துச் சென்ற போது இரவு ஒன்பது மணி இருக்கும். அந்த
இரவில் கடலைப் பார்ப்பது மயக்கும் மாய மோகினியைப் பார்ப்பது போலிருந்தது.
கொஞ்ச நேரம் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த நான் மணலில் அப்படியே
மல்லாக்கப் படுத்து விட்டேன். படுத்தால் வானில் நிலவு. அதைப் பால் போன்ற நிலவு, பொங்கி
வரும் பொங்கலைப் போன்ற நிலவு என்றெல்லாம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். உவமிக்கவோ
உருவகிக்கவோ தொடங்கினால் அது முடிவிலியாக நீண்டு கொண்டே இருக்கும் போல. எவ்வளவு வர்ணித்தாலும்
வர்ணனையின் ஆசையானது நிரப்ப முடியாத பாத்திரத்தைப் போல அடங்காது போல. அடங்கா ஆசையோடு
பார்த்துக் கொண்டே இருந்தேன்.
மனதில் இருந்த அத்தனை அழுத்தங்களையும் இறுக்கங்களையும் கடலும்
நிலவும் உள்ளிழுத்துக் கொண்டது போன்ற உணர்வு. கடலில் அப்படியே மிதப்பது போலும் வானில்
பறப்பது போலும் விசித்திரமான உணர்வுகள் எழுந்து என்னை பரவசத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.
என்னை விட என் மகள் கடலை ரசித்தாள். அவள் அலைகளில் கால் நனைத்து
விளையாடிக் கொண்டிருந்தாள். மனைவி கூட கால் நனைத்து விட்டுதான் வந்து உட்கார்ந்தாள்.
எனக்கென்னவோ அலையில் கால் நனைக்கத் தோன்றவில்லை. அலைகளைக் காலால் மிதித்து விடத் தோன்றவில்லை
என்றும் சொல்லலாம். கடலோரத்தில் அமர்ந்தபடி மாறி மாறி அலைகளையும் நிலவையும் பார்த்துக்
கொண்டிருந்தேன்.
நிலவு பார்க்கிறதே என்பதற்காக அலைகள் இப்படி நடனம் ஆடிக் கொண்டிருக்கிறதோ?
அலைகள் இப்படி ஆடியாடி ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கத்தான் நிலா இப்படிக் கொட்ட கொட்ட
விழித்துக் கொண்டிருக்கிறதா? என்று இருவேறு வினாக்கள் மேலெழும்ப நிலவையும் அலைகளையும்
நான் வியந்து வியந்து பார்த்தேன்.
எப்போது கடலைப் பார்த்தாலும் சிறு குழந்தைப் போலக் கடலைப் பார்ப்பதை
என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. கடலின் முன் நான் சிறுகுழந்தையாகி விடுகிறேன்.
அப்போதெல்லாம் கடல்தான் மனிதச் சமூகத்தின் முதல் தாய் என்பதாக உணர்வுகள் எழுந்து திளைக்கிறேன்.
*****
No comments:
Post a Comment