இதோ சில ரகசியங்கள்
எல்லாவற்றிலும் மெய்மையை நோக்கி நகர்வதற்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது.
சுவாரசியம், ஆச்சரியம் என்று எல்லாம் முடிவுறும் இடத்தில் நகர வாய்ப்புள்ள இடம் அது.
அதை நோக்கி நகர்வது அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் நகர முடியாத இடம் என்று எந்த
இடத்திலும் சோர்ந்து விட வேண்டாம். அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு மெய்மையை நோக்கி
முன்னேறுங்கள். ஞானத்திற்கான திசை நோக்கி நீங்கள் நகரத் தொடங்கும் இடம் அது. அந்த அற்புதமான
இடத்தைக் காட்டிய வெறுமைக்காகவும் சலிப்புக்காகவும் நீங்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும்
தகும். அந்த இடத்தில் வேறொன்றுமில்லை, மெய்மையைத் தவிர என்று அறியும் போது நீங்கள்
அடையும் பரவசத்துக்கும் பேரானந்தத்துக்கும் அளவே இல்லை.
ஒன்றைக் கண்டுபிடிக்கும் போது அடையும் பரவசத்துக்கு அளவேயில்லை.
கண்டுபிடிப்புகள் என்பது பிரச்சனைகளில்தான் நிகழ்கின்றன. அதனால் பிரச்சனைகளைக் கண்டு
பின்வாங்காதீர்கள் மற்றும் அலைவுறாதீர்கள். உங்கள் கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டிய
நேரம் வந்திருப்பதை உணர்ந்து அதற்கு உங்கள் நன்றியையும் நேசத்தையும் சொல்லுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு
உங்கள் கண்டுபிடிப்பு தாமதமாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்தப் பிரச்சனைக்கு மீண்டும் மீண்டும்
உங்கள் நன்றிகளையும் நேசத்தையும் வெளிப்படுத்துங்கள். தாமதமாகும் கண்டுபிடிப்புகள்
மகத்தான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இணைகின்றன.
வாழ்க்கை என்பது நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதுதான்.
மற்றபடி வாழ்க்கையில் மகிழ்ச்சி, துக்கம், நல்லது, கெட்டது என்று எதுவுமில்லை. நீங்கள்
பார்க்கும் பார்வையால் மகிழ்ச்சி துக்கமாக மாறக் கூடும். துக்கம் மகிழ்ச்சியாக மாறக்
கூடும். நல்லது கெட்டதாக ஆகக் கூடும். கெட்டது நல்லது ஆகக் கூடும்.
ஒரு கோர விபத்தில் இழந்ததைப் பொருட்படுத்தாது நீங்கள் தப்பியதை
நினைத்து நன்றி சொல்லும் போது நீங்கள் துக்கத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்கிறீர்கள்.
நினைத்ததை அடைந்த மகிழ்ச்சியான தருணங்களில் அடைய முடியாதவற்றை
நினைத்து வருந்துவீர்களானால் நீங்கள் மகிழ்ச்சியைத் துக்கமாக மாற்றிக் காண்கிறீர்கள்.
புயலின் சேதங்களைப் பொருட்படுத்தாமல் மழை தந்தப் புயலுக்காக
நன்றி சொன்னால் நீங்கள் கெட்டதிலும் நல்லதைப் பார்க்கிறீர்கள்.
மண்ணைக் குளிர்விக்க வந்த மழையை நினைக்காமல் மழை உங்களை நனைப்பதால்
உண்டாகும் வருத்தத்தில் மழையைத் திட்டினால் நீங்கள் நல்லதிலும் கெட்டதைக் காண்கிறீர்கள்.
காண்பது உங்கள் வசம். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் காண உங்களுக்கு உரிமை இருக்கிறது.
ஆக உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான். நீங்கள் நோக்கும் பார்வையில்தான் இருக்கிறது.
*****
No comments:
Post a Comment