உங்கள் மொழியில் இருக்கிறது உங்களுக்கான உயர்வு
எந்த மொழி வழிக் கல்வி பயில வேண்டும் என்ற வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது.
தாய்மொழி வழிக் கல்விதான் சிறந்தது என்பது அனைத்துத் தரப்பு அறிஞர்களாலும் முன்வைக்கப்படுகிறது.
முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் தாய்மொழி வழிக் கல்விதான் வழங்கப்படுகிறது. தாய்மொழி
வழிக் கல்வி கற்றவர்கள் இணையற்ற சாதனையாளர்களாக விளங்குவதும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
நிலைமை இப்படி இருக்க இன்னும் ஆங்கில வழிக் கல்வியின் மோகத்தைச் சிலாகித்துக் கொண்டிருக்க
முடியாது.
இணையத்தின் அபார வளர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த
நாட்களில் ஆங்கிலக் கல்வி என்ற பசப்பு வாதத்தைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்க
முடியாது. நமது அடிமை மனோபாவம் பசப்பு வாதத்தைத்தான் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறது.
இப்போதிருக்கும் தொழில்நுட்ப வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீங்கள்
எந்த மொழியில் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். தேவையானது ஆர்வமும் முயற்சியும் மட்டும்தான்.
வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பார்க்கும்
போது நமது சமூகம் எந்த மொழி வழிக் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறது என்பது விளங்கும்.
தமிழ் வழியும் அல்லாத, ஆங்கில வழியும் அல்லாத ஒரு வழியில் அது கல்வி பயின்று கொண்டிருக்கிறது.
தமிழ் வழியில் பயின்றோருக்கும் சரி, ஆங்கில வழியில் பயின்றோருக்கும்
சரி அவர்கள் பயின்ற மொழி வழி தொடர்ச்சியாக ஐந்து வாக்கியங்களை மொழிப்பிழையின்றிப் பேசுவதும்
எழுதுவதும் சவாலாக இருப்பதைக் காண முடிகிறது. இரு மொழிகளும் கலந்த இரண்டு கெட்டான்
மொழியில் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் தாய்மொழிக்கு எதிரான மட்டரகமான கருத்துகளையும்,
பிறமொழிக்கு ஆதரவான உயர்ரக கருத்துகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் தற்போதைய கலப்பு
மொழியில் பயின்ற ரெண்டுங்கெட்டான சிந்தனையாளர்கள்.
இந்தப் பிரச்சனையில் மற்றொரு மொழியை வேறு கூடுதலாக இணைத்துக்
கொள்கிறார்கள். மும்மொழிகளில் கல்வி பயின்றால்தான் பிள்ளைகள் சிறப்பாக வளர்ச்சி பெறுவார்கள்
என்கிறார்கள். மொழிக்கலப்பு செய்தாகி விட்ட பின் இரண்டைக் கலந்தாலென்ன, மூன்றைக் கலந்தாலென்ன
என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
மொழி எனும் தகவல் தொடர்பு சாதனத்தை இப்போதிருக்கும் தொழில் நுட்ப
வசதிகளைக் கொண்டு நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் கருத்துகளைப் புரிந்து கொள்ளலாம்,
உங்கள் கருத்துகளை வெளிப்படுத்தலாம். கூகுள் அதற்கான அத்தனை வாய்ப்புகளையும் உங்களுக்கு
வழங்குகிறது. சர்வதேச அளவில் செயல்படும் கூகுள் ஒவ்வொரு மொழிக்கும் தரும் முக்கியத்துவத்தைப்
பார்த்தால் நாம் நம் தாய்மொழிக்கு எவ்வளவு மோசமான இடத்தைத் தந்து கொண்டிருக்கிறோம்
என்பது புரிய வரும்.
தமிழ்நாட்டினர் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்று அம்மொழி பேசும்
மாநிலங்களில் வேலை பார்க்கப் போவதைக் கற்பனை செய்து தமிழ் மொழியைப் பின்னோக்கிய இடத்தில்
தள்ளிக் கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் முக்கியமாகக் கருதும் மூன்றாவது மொழி பேசும்
பலரும் இன்று தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்து இங்குதான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீக காலமாகத் தமிழர்கள் பொருளாதாரப் பித்தர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பதால் அவர்களின் பொருளாதாரப் பித்து அடங்கி விடுவதற்கான
சாத்தியக்கூறு இருப்பதாக நம்புகிறார்கள். அப்படி ஒரு சாத்தியக்கூறு நிச்சயமாக இருக்கிறதா
என்பது குறித்து அவர்கள் யோசிக்க மறுக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் பொருளாதாரத்தில்
வளர்ந்த நாடுகளில் கூட வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது என்பதை வசதியாக மறந்து
போகிறார்கள்.
பொருளாதார மேம்பாடு என்பது சரியாகச் சிந்திப்பதிலும் நேர்மையாக
உழைப்பதிலும் அடங்கியிருக்கும் ஒன்றாகும். இந்த இரண்டையும் ஒவ்வொருவருக்கும் அவரவர்
தாய்மொழிதான் வளர்த்துக் கொடுக்க முடியும்.
இன்றைய வீடுகளும் இன்றைய பள்ளிகளும் சிறைச்சாலைகளைப் போல மாறிக்
கொண்டிருப்பதால் நாம் அதிகம் கற்க வேண்டியது நம்மிடமிருந்தும் நம் சமூகத்திடமிருந்தும்தான்.
ஒவ்வொரு சமூகத்தையும் முழுமையாகக் கட்டமைக்கும் சாதனம் மொழிதான். நம் மொழிதான் நம்
சமூகத்தைக் கட்டமைக்கிறது. நம் மொழியின் மூலமாகக் கற்கும் போதுதான் நம்மைப் பற்றியு
நம் சமூகத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.
அவரவர் தாய்மொழி அவரவர்க்கும் நிறைய வழங்கக் காத்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் நினைக்கும் அளவுக்குச் சம்பாத்தியம், மகிழ்ச்சி, மனநிறைவு என அனைத்தும அவரவர்
தாய்மொழியில் இருக்கிறது. அதற்கான அத்தனை கருத்துகளையும் சிந்தனைகளையும் கொண்டதாக அவரவர்
தாய்மொழி விளங்குகிறது. அவரவர் தாய்மொழிக்குள் அவரவர் உயர்வுக்கான அத்தனை சாத்தியங்களும்
ரகசியமாகப் பொதியப்பட்டிருக்கின்றன என்பதை அவரவர் மொழியை நேசித்துக் கற்பதன் மூலமாகத்தான்
அறிந்து கொள்ள முடியும்.
*****
No comments:
Post a Comment