மரணத்தைச் சிலாகிப்பவர்கள்
அவர் இன்னும் சொற்களைத்தேடியபடி
இருந்தார்
புதுப்புது வாசகங்களுக்காகத்
தவம் இருந்தார்
யாரும் அடைய முடியாத தரிசனங்களை
அடையப் போவதாக
அனுதினமும் பிரகடனங்களை முழங்கியபடி
இருந்தார்
மாறுபாடு அடைவதை மதிப்பாகக்
கூறினார்
வித்தியாசப்படுவதே சாதனையென
விளம்பினார்
எல்லாரையும் போல அவர் ஒரு
நாள் இறந்தார்
இரங்கல்களும் அஞ்சலிகளும்
குவிந்தன
நினைவை மீட்டெழும் கூட்டங்கள்
நடந்தேறின
ஒரு நாளும் இயல்பாக அவர்
உண்ணாததை
உடுத்தாததை சுவாசம் இயல்பாய்
இயங்காததை
நோக்காததை வாழாததை யாரும்
பேசவில்லை
அகவை நாற்பத்தைந்தில் சட்டென
அகால மரணம் தரித்ததை சிலாகித்ததோடு
அவரவர்களும் கலைந்து சென்றனர்
*****
No comments:
Post a Comment