கண்டவர்கள் விண்டதில்லை
தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதற்கான
முன்னேற்பாடுகளை
திட்டமிட்டுச் செய்கிறவர்கள்
அதற்காக மூளையைக் கசக்குவதையும்
பிழிவதையும்
பெருமகிழ்ச்சியுடன் பெருமுயற்சி
எடுத்துப் புரிகிறார்கள்
குரூர பூரிப்பை முகத்தில்
மறைத்தபடி
ஒன்றும் அறியாதவர்கள் போல்
எதிர்பாராது சந்தித்து ஆறுதல்
சொல்வதைப் போல்
சங்கடத்தின் வீரியத்தை நாடி
பிடித்துப் பார்க்கிறார்கள்
வீரியம் போதாதென்று தோன்றும்
போது
விஷத்தைக் கூடுதலாகச் சேர்ப்பது
குறித்து
விகற்பம் இல்லாமல் முடிவெடுத்துச்
செய்து முடிக்கிறார்கள்
செத்த பிணத்தைக் குத்திக்
கொல்ல நினைப்பவர்கள்
இருக்கும் உலகில்
எச்சரிக்கையாகச் சாக முடியாது
என்றெப்படிச் சொல்ல முடியும்
எப்படி வேண்டுமானால் இயங்கும்
மனம் படைத்தவர்கள்
காரணம் சொல்வதில் கஞ்சத்தனம்
காட்ட மாட்டார்கள்
விஷம் கொன்றதினும் வஞ்சகம்
கொன்றது அதிகம்
எமனின் பேரேட்டில்
வஞ்சகர்கள் கவர்ந்த உயிர்கள்
அநேகம் என்ற குறிப்பை
கண்டவர்கள் விண்டதில்லை
*****
No comments:
Post a Comment