சப்பாத்திகள் பூக்கும் பாலை
காங்கிரீட்டிலும் செடிகள்
முளைக்கின்றன
பூ பூக்க கற்றுக் கொள்கின்றன
கனிகளையும் காய்களையும் தின்று
வாழ்ந்த பறவைகள்
எச்சங்களையும் மிச்சங்களையும்
உண்டு வாழப் பழகிக் கொள்கின்றன
காடு முழுவதும் உலாவி வேட்டையாடி
வாழ்ந்த மிருகங்கள்
கம்பிக் கூண்டுக்குள் உலாவி
வேளா வேளைக்கு வரும் உணவில்
வாழப் பழகிக் கொள்கின்றன
எல்லாம் பழகிக் கொள்வதில்
முடியும் இந்த வாழ்வில்
புதிதாய்ச் செய்ய என்ன இருக்கிறது
என்று
அதற்கேற்ப பழகிக் கொள்கிறார்கள்
மனிதர்கள்
எப்போதாவது மனிதாபிமானம்
தலைதூக்கும் போது
விநோத உயிரினத்தைப் பார்த்து
அஞ்சி
கொன்று விடுவதைப் போல
கொன்று விடுகிறார்கள்
அதற்காகப் பாலை நிலத்தில்
சப்பாத்திச் செடிகள் கூடவா
பூக்காமல் போய் விடும்
*****
No comments:
Post a Comment