12 Mar 2022

பதுங்கிக் கொள்ளும் நெருப்பு

பதுங்கிக் கொள்ளும் நெருப்பு

தயாரிப்பைக் கைவிட்டு விட்ட ஒரு நிறுவனத்தின்

பழம்பெரும் இரு சக்கர வாகனத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்

நானும் அந்த முதியவரும்

அந்த முதியவரும் காலம் கைவிட்டு விட்ட

பொருளைப் போலத்தான் இருக்கிறார்

யார் எதைக் கைவிட்டாலும்

இருப்பு இருக்கும் வரை ஓடத்தானன்றோ வேண்டியிருக்கிறது

வாகனச் சத்தம் அகோரமாய் இருப்பதாகத் திட்டியபடி செல்பவர்கள்

முன்னகர்ந்து விரைந்து கொண்டிருக்கிறார்கள்

வாகனச் சத்தம் காற்றுப் பெருவெளியில் தேய்ந்து நிற்கும் போது

எரிபொருள் தீர்ந்திருப்பது பிரபஞ்சத்துக்குப் புரிகிறது

எங்கிருந்தோ உதவிக்கென வருபவர்

தன்னுடைய வாகனத்திலிருந்து

கொஞ்சம் எரிபொருளைத் தந்து அத்துடன்

கொஞ்சத்தினும் கொஞ்சமாக தீப்பொறியினையும்

தந்து விட்டுப் புறப்படுகிறார்

பற்றி எரியத் தொடங்கும் எரிபொருளுடன்

எங்கள் வாகனம் இயங்கத் தொடங்குகிறது

பார்ப்பவர்கள் எங்களை விநோதமாகப் பார்க்கிறார்கள்

என்றோ ஒரு நாள் எரிய வேண்டியவர்கள்தான் மனிதர்கள்

என்கிறார் பின்னால் அமர்ந்திருக்கும் முதியவர்

நெருப்பொன்றாவது தன்னைக் கைவிடவில்லை என்ற திருப்தியில்

பற்றி எறிந்த நெருப்பு

சாலையோர குளமொன்றைக் கண்டதும்

காலம் முழுவதும் எரிந்த வெம்மைக்குக் குளுமையைத் தேடியபடி

குபுக்கென்று பாய்ந்து அதன் அடி ஆழத்தில் பதுங்கிக் கொள்கிறது

வாகனத்தை நிறுத்தச் சொல்லி

நெருப்பைத் தேடியபடி குளம் முழுவதும்

தேடியபடி இருக்கிறார் முதியவர்

கரையோரத்தில் காத்திருப்பில் இயங்கியபடி

முதியவரை எதிர்நோக்கி நிற்கிறோம் நானும் வாகனமும்

*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...