சகுனங்கள்
ஒவ்வொரு பயணமும் தலைவலியைக்
கொணர்கின்றன
பயணங்கள் தவிர்க்க முடியாதன
பயணங்களின் தொடக்கத்தில்
சகுனம் பார்க்கிறாள் அம்மா
பதுங்கியிருக்கும் பூனைகள்
பாயும் நேரம்
பயணங்களைத் திசை மாற்றுகின்றன
ஓரிருவர் நடந்தும் கடந்தும்
போன தெருக்களில்
சில பல மனிதர்களோடு பல பல
வாகனங்கள்
காற்றில் அலையும் இரைச்சலாய்
பெருகிய போதும்
சகுனங்கள் அதற்கேற்ப உருப்பெருகின்றன
இப்போது சகுனங்களைப் பார்க்க
முடிவதில்லை
எமகண்டம் ராகுகாலம் என்று
எதையும் கணக்கில் கொள்ள முடிவதில்லை
அலைபேசியில் அழைப்பொன்று
வந்ததும்
நள்ளிரவு தூக்கத்தைப் போர்வையினின்று
வீசி எறிந்து விட்டு
ஆளரவமற்ற வீதியில் விசையை
முடக்க வேண்டியிருக்கிறது
கிளம்பும் முன் சகுனங்களைப்
பார்க்கும் அம்மா
அப்போது உறங்கிக் கொண்டிருக்கிறாள்
அநேகமாக அவள் காணும் கனவில்
என் பயணத்திற்கான சகுனங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்
*****
No comments:
Post a Comment