பின்தங்கும் பிரயாணங்கள்
தொலைவுகள் இழுத்துக் கொண்டு
செல்கின்றன
நிறைவுறும் எல்லை தட்டுப்பட்டுக்
கொண்டே போகிறது
இழுவையில் இயங்கிக் கொண்டு
இருக்கின்றன சக்கரங்கள்
சக்கரங்களுக்கு வாராத அலுப்பும்
சலிப்பும்
வாகனத்தில் ஒட்டிக் கொள்ளும்
அழுக்கும் தூசியுமென
மனம் முழுவதும் அடர்ந்து
படர்ந்து ஒட்டிக் கொள்கின்றன
நேரச் சுருக்கத்தை வேண்டும்
ஆசைகளுக்கு
தூரப் பெருக்கத்தைப் புரிந்து
கொள்வது ஆயாசத்தை உருவாக்குகின்றன
இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறதென
வெளிப்படும்
சிறுகுழந்தையின் கேவலென கெஞ்சத்
தொடங்கும்
அலுங்கிக் குலுங்கிய உடலுறுப்புகள்
வலியை வெளிப்படுத்துகின்றன
தொட்டு விடும் தொலைவில் இருப்பதாய்
நட்சத்திரத்தைக் காட்டி
தொடுவானத்தை நோக்கி நீள்கின்றன
பயணங்கள்
வழியின் இரு மருங்கிலும்
இருக்கும் வேடிக்கைகளைப் புறந்தள்ளி
தூரக்கணக்கையும் நேரக்கணக்கையும்
விகிதாசாரத்தில் பொருத்தி
முன்பையும் பின்பையும் முடிச்சுப்
போட்டுக் கிடக்கிறது
வழிதவறி ஓய்வின் ஏக்கப் பள்ளத்தில்
விழுந்து விட்ட அடிமனசு
*****
No comments:
Post a Comment