25 Feb 2022

மனப்படகின் பயணம்

மனப்படகின் பயணம்

வார்த்தைகளுக்குக் கட்டுபடாமல் நீள்கின்றன முடிவுகள்

மனதுக்கு ஒவ்வாது கசப்பைச் சுமந்த வண்ணம் நகர்கின்ற

வாழ்க்கை நதியைத் திசை திருப்ப முடியாமல்

அல்லாடுகின்றன தள்ளாடும் நம்பிக்கைகள்

எண்ணங்களின் இழுவிசை ஒவ்வொருரையும்

வெவ்வேறு விதமாய்க் கவர்ந்திழுக்க

ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் மீதும் காட்ட விழையும்

அளவிடற்கரிய அக்கறையைத் தாங்க இயலாது

மிதந்தும் மூழ்கியும் மெலெழுந்தும் ஆழ அமிழ்ந்தும்

அலைவுறுகிறது பயணித்துக் கொண்டிருக்கும் மனப்படகு

பயணங்களின் முடிவில் மற்றொரு பயணம் துவங்கும் எனினும்

ஒரு பயணத்தின் இலக்கு ஒவ்வொரு பயணத்தையும்

ஒரே மாதிரியாய் மாற்ற முனைகிறது

ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மாதிரியானது என்பதறியாது

ஒரு பயண அனுபவம் எல்லா பயணங்களையும்

ஒருமையாய்த் தீர்மானித்து அதிகாரமிடுகிறது

ஒரு பயணத்தில் நேர்ந்து விடும் விபத்து

ஒவ்வொரு பயணத்தையும் அதீத பயத்தோடு துவக்கச் செய்கிறது

நதியும் பயணமும் யாருக்கும் கட்டுப்படாமல்

நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன

ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டும்

பின் யாதொன்றுக்கும் கட்டுப்படாமலும்

திசை தெரிந்தும் திசை தப்பியும்

பலவிதமாய்ப் பயணித்துக் கொண்டிருக்கிறது மனப்படகு

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...