சிறிய வெளிச்சம் காட்டும் பெரிய பாதை
முன்பெல்லாம் பாலியல் புகார்களில் சிக்குபவர்கள் அரசியல்வாதிகள்,
சாமியார்கள் என்றிருந்தனர். தற்போது ஆசிரியர்களும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள்.
“உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும் அமைபவன் நூலுரை ஆசிரியன்னே” என்று நன்னூல் ஆசிரியர்
பவணந்தியார் அன்று சொன்னதைத்தான் இன்றும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
***
அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதை எப்படி அளவோடு நிறுத்திக் கொள்வது
என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு. ஓரளவு சாப்பிட்டதும் போதும் என்று எப்போது நீங்கள்
நினைக்கிறீர்களோ அப்போது எதைப் பற்றியும் நினைக்காமல் உடனே எழுந்துவிடுவதுதான் அதற்கான
எளிய வழி. எழுகின்ற அந்த நேரத்தில் அதிகம் பசிப்பது போலத் தோன்றும். பத்து நிமிடம்
ஆகி விட்டால் போதும் வயிற்றில் பசி போன இடம் தெரியாமல் போய் விடும். சம்பந்தப்பட்டவர்கள்
முயற்சித்துப் பார்க்கலாம்.
***
எப்படித் திட்டமிட்டாலும் திட்டமிட்டபடி எதையும் செயல்படுத்த
முடியவில்லை என்று வருத்தப்படுவர்கள் இருக்கிறார்கள். திட்டமிட்டதற்கு மாறாக செயல்பட
வேண்டியதாக இருப்பதாக அலுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வழி
இருக்கிறது. ஒட்டுமொத்தமாய்த் திட்டமிடுவதை நிறுத்துங்கள். திட்டமிடுதலின் கால அளவைக்
குறைத்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் திட்டமிட்டுக் கொண்டு செயல்பட்டுப் பாருங்கள்.
அதுவே அதிகம் என்றால் ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் திட்டமிட்டுக் கொண்டு செயல்பட்டுப்
பாருங்கள். மிகப் பெரிய பிரச்சனைகளைச் சிறிது சிறிதாகப் பகுத்துக் கொள்ளும் போது சிறிய
பிரச்சனையாகி விடும். பெரியதைப் பகுத்துக் கொண்டே போனால் சிறியதாகி விடும், சிறியதைச்
செய்வது எளிதாகி விடும் என்பதன் தத்துவம் இது.
***
கோபத்துக்கும் மன உளைச்சலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
கோபம் பலவிதமாக வடிவெடுக்கும். அதன் வடிவங்களில் ஒன்றுதான் மன உளைச்சலும். எதற்குக்
கோபப்பட வேண்டும்? எல்லாரும் நல்லவர்களே. அவர்களின் நேரமும் எண்ணமும் நமக்கு நல்லது
செய்ய முடியாமல் இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். யார் மீதும் கோபம் வராது.
நேர நெருக்கடியும் வேலை நெருக்கடியும் மன உளைச்சலுக்குக் காரணமாகச் சொல்லப்படுவதுண்டு.
நெருக்கடி என்பதை நோக்கினால் உங்களுக்கே ஓர் உண்மை புரியும். எல்லாரும் ஒட்டுமொத்தமாக
நுழையும் போதோ, வெளியேறும் போதோதான் நெருக்கடி ஏற்படும். ஒவ்வொருவராக நுழையும் போதும்,
வெளியேறும் போதும் நெருக்கடி ஏற்படாது. நேரத்தையும் வேலையையும் ஒவ்வொரு பகுதியாக அணுகும்
போது நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை. நேரத்தையும் வேலையையும் சிறு சிறு பகுதிகளாகப்
பகுத்துக் கொண்டு ஒவ்வொன்றாக அணுகும் போது ஆற்றோட்டம் போல் எல்லாம் நடைபெறும். வெள்ளமாகத்
திரண்டு கரையுடைக்காது.
***
யாருக்கும் எதையும் புரிய வைக்க முடியவில்லை என்பது தவறான அணுகுமுறை.
யாரையும் அல்லது எதையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் சரியான அணுகுமுறை.
ஒருவரைப் பற்றி அல்லது ஒன்றைப் பற்றி நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் ஒருவருக்கு
எதையும் நம்மால் புரிய வைக்க முடியாது. உங்களால் மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ள முடியும்
என்றால் நீங்கள் புரிய வைக்க நினைப்பதை அவர்களுக்குப் புரிய வைக்கவும் முடியும்.
***
No comments:
Post a Comment