23 Jan 2022

வன்மங்கள் பலவிதம் (சிறுகதை)

வன்மங்கள் பலவிதம்

(சிறுகதை)

விகடபாரதி

            யார் எவ்வளவு பேசினாலும் அதைப் பொறுமையாக நீண்ட நேரம் கேட்கும் தன்மை என்னை அறியாமல் என்னிடம் ஒட்டிக் கொண்டிருந்தது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து என்னிடம் தங்கள் சந்தோஷக் கதைகளை, சோகக் கதைகளைக் கொட்டலாம். தங்கள் கதைகளைக் கொட்ட என்னிடம் வருபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அப்படி என்னிடம் சேர்ந்து கிடக்கும் கதைகள் அநேகம்.

            அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அருகிலுள்ள ஊரில் உள்ளவர்கள் என்று என்னிடம் வந்த நிலை போய் என்னைப் பற்றி விசாரித்த வகையில் அறிந்து கொண்டு என்னிடம் வருபவர்கள் அண்மை காலமாக அதிகமாக இருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்தும் வருகிறார்கள் என்பதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. எனக்குச் சங்கோஜமாகத்தான் இருக்கிறது. வந்தவர்கள் யாரையும் கதை கேட்காமல் ஏமாற்றத்தோடு திருப்பி அனுப்பியதில்லை. சிலரின் கதைகள் நள்ளிரவு வரை கூட நீண்டிருக்கிறது. அவ்வளவு நேரம் கதையைச் சொல்லி விட்டுப் புறப்படுபவர்கள் முகத்தில் அமைதியையும் நிம்மதியையும் பார்த்திருக்கிறேன். அதைப் பார்த்த பிறகு நான் வெளியூரிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வேலை மெனக்கெட்டு கதை சொல்ல வருபவர்களை எப்படி திருப்பி அனுப்ப முடியும்.

            நான் கேட்கும் கதைகள் பெரும்பாலானவை சோகக்கதைகள்தான். அரிதாக சந்தோஷமான கதைகளும் உண்டு. சந்தோஷமான கதைகளைச் சொல்ல யாரும் பிரியப்படுவதில்லை. சந்தோஷம் என்றால் அதை அனுபவிக்க வேண்டும். அதை ஏன் கதையாகச் சொல்ல வேண்டும் என்று சொல்லுங்கள். தவிரவும் சந்தோஷமான வாழ்க்கையில் அதை அனுபவிக்கத் தோன்றுமே தவிர அதை வரி வரியாக வடித்து கதையாகச் சொல்ல தோன்றவே தோன்றாது.

            அன்று நான் கேட்ட கதை சந்தோஷமான கதையா, சோகக்கதையா என்று தெரியவில்லை. சந்தோஷப்படுவதற்கான சோகக்கதையா, சோகப்படுவதற்கான சந்தோஷக்கதையா என்றும் புரியவில்லை. அந்தக் கதையை அதாவது கதையாகச் சொல்லப்பட்ட அந்தக் கதையை உங்களிடம் சொன்னால் நீங்களே ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.

            ஞாயிற்றுக் கிழமையின் மதியம். போன வாரம் நடந்த சம்பவம்தான். ஜனவரியின் மத்தியில் வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு அதிக வெப்பம் இருப்பதில்லை. காலையில் இருந்த கடும் குளிருக்கு மதிய வெயில் ஒத்தடம் கொடுப்பது போலத்தான் இருந்தது. இன்னும் நாட்கள் கடக்கும் போதுதான் மதிய வெயிலின் உக்கிரம் உரைக்கத் தொடங்கும்.

            ஞாயிற்றுக் கிழமைகள் ஒரு விதப் பழக்கத்தை வழக்கில் கொண்டு வந்துவிட்டன. மதிய உணவை முடித்தவுடன் ஒரு மெல்லிய தூக்கத்தைக் கொண்டு வந்து விடுகின்றன. அதுவும் இந்த கொரோனா வந்ததற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஞாயிற்றுக் கிழமையைப் போலத்தான் மாறி விட்டன. எல்லா நாள்களும் மதிய உணவிற்குப் பிறகு ஒரு மென்தூக்கத்தோடுதான் கடந்து செல்கின்றன.

            மதிய உணவை முடித்து அரை மணி நேரம் வரைக்கும் உறங்கியிருப்பேன். கண்கள் அசந்த தூக்க நிலைக்குச் சென்றிருந்தேன் என்று சொன்னால் அதுவும் சரிதான். மனைவி என்னைப் போட்டு குலுக்கி எடுத்துதான் எழுப்ப வேண்டியிருந்தது. மிகவும் அலுத்துக் கொண்டுதான் எழுந்தேன். திடீரென்று எழுப்பியதில் மனைவி மேல் எரிச்சலும் வந்தது.

            “நீங்கள் தேடி வைத்திருக்கும் வினை வீடு தேடி வரும் போது நான் என்ன செய்ய?” என்று அவள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.

            தூக்கக் கலகத்தில் எழுந்து முகத்தை அலம்பிக் கொண்டு திண்ணைக்குச் சென்றேன். பெஞ்சில் கம்பீரமான ஆஜானுபாகுவான தோற்றத்தோடு ஒருவர் அமர்ந்திருந்தார். வயது அறுபதைக் கடந்திருக்கலாம். பார்ப்பதற்கு நாற்பதை நெருங்குபவர் போல்தான் இருந்தார்.

            என்னைப் பார்த்ததும் “தூக்கத்தைக் கலைச்சிட்டேனா?” என்றார் சங்கடப்படும் தொனியில். என் முகத்தில் தூக்கம் இன்னும் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

            “அப்படில்லாம் இல்ல!” என்று நான் சொன்னது சம்பிரதாயத்துக்குத்தான் என்பது அவருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் அவர் என்னோடு பேசப் போகும் தருணங்களை மிகுந்த ஆவலோடு எதிர்நோக்குபவராக இருந்தார்.

            “சாப்டீங்களா?” என்றேன்.

            “ம்!” என்றார்.

            “தண்ணீர் கொண்டு வரச் சொல்லட்டா?” என்றேன். அவர் தன் பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலைக் காட்டியவாறே வேண்டாம் என்பதைப் போல தலையசைத்தார்.

            “சொல்லுங்க!” என்றேன். அந்த வார்த்தைக்காகக் காத்திருந்தவரைப் போல அவர் ஆரம்பித்தார்.

            “உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இந்தக் காலத்துல இப்படி ஒரு ஆசாமியா? தன்னோட வேலைகளையெல்லாம் விட்டுப்புட்டு கதைகளைக் கேக்குறதுல ஒரு மனுஷர் ஆர்வமா இருக்கார்ங்றதே ரொம்ப அதிசயமான சங்கதித்தாம். ஆரம்பத்துல இப்படில்லாம் ஒரு மனுஷப் பொறப்பு இந்தப் பூமிக்குத் தேவையில்லங்றதுதான் என்னோட நெனைப்பு. நீங்கள்ல்லாம் இந்தப் பூமிக்குப் பாரம்தான்னு நெனைச்சிட்டு இருந்தது நெசம். தலைவலியும் கால் வலியும் தனக்கு வந்தாத்தானே தெரியும்பாங்க இல்லையா. அப்படித்தான் ஆச்சு இப்போ என்னோட நெலமையும். என்னோட மனசுல உள்ளதெ யாருகிட்டயாச்சும் கொட்டித்தாம் ஆவணும். ஆனா யாருகிட்டெ கொட்டுறது சொல்லுங்க? யாருகிட்டெ கொட்டுனாலும் விசயம் வெளியாயிடும். வெளியாயிடுச்சுன்னா என்னை யாரும் பெரிய மனுஷரோட பட்டியல்ல சேத்துக்கிட மாட்டாங்க. பெறவு எம் பொண்டாட்டி கூட என்னை மதிப்பாளாங்றது சந்தேகந்தாம்.” என்று சொல்லிவிட்டு அண்ணாந்து பார்த்து வெறித்தார். இந்த இடத்தில் நான் எதாவது சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பார் போல.

            நான் எதையும் சொல்லவில்லை. கதை கேட்கும் போது எந்த விதமான உணர்ச்சிகளையும் நான் காட்டுவதில்லை. காட்டக்கூடாது என்பதில்லை. எந்த விதமான உணர்ச்சியும் என் முகத்திலிருந்து வெளிவந்து தொலையாது. எதையாவது சொல்லித் தொலைப்போம் என்றால் வார்த்தைகளும் வாயில் வந்து தொலையாது. அவர் சொல்ல ஆரம்பித்த பீடிகையைப் பார்த்த போது கடந்த காலத்தில் அவர் ஏமாற்றிய காதலியைப் பற்றிச் சொல்வாரோ என்ற ஓர் எண்ணம் மட்டும் மனதில் ஏற்பட்டது. பல கதைகளைக் கேட்டதால் உண்டான முன்கணிப்பு என்னை அப்படி மட்டும் யோசிக்க அனுமதித்தது. நான் அந்த யோசனையை வார்த்தைகளால் காட்டிக் கொள்ளவில்லை.

            “எனக்கு ஒரு மகள். மனைவியும் ஒண்ணுதான். கண்டதும் கொண்டதும் அவ ஒருத்திதான்.” என்று அவர் சொன்ன பிற்பாடு அவரிடம் கடந்த காலக் காதல் கதைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்.

            “கல்யாணம் பண்ண அடுத்த வருஷத்திலேயே பொறந்த பொண்ணு. இன்னொரு புள்ளை பெத்துக்கணும்ன்னு தோணல. என் மனைவிக்கு ரொம்ப விருப்பம், வீடெல்லாம் புள்ளைகளா விளையாடணும்ன்னு. இன்னொரு பிள்ளைக்கு நான் கண்டிப்பா மறுத்திட்டேன். அதுல அவளுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஒத்த புள்ளைன்னு ஆனதால பத்துப் புள்ளைங்க மேல காட்ட வேண்டிய பாசத்தை அந்த ஒத்தப் புள்ளை மேல காட்டுனா. ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு நானும் அப்படித்தான். அவள டாக்டராக்கணும்ன்னு கங்கணம் கட்டிட்டுப் படிக்க வெச்சேன் பாருங்க.” என்று சொல்லி நிறுத்தினார்.

            கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருந்த தூக்கம் கலைந்து நான் ஆர்வமான நிலைக்கு வந்திருந்தேன். என் முகத்தில் ஒரு பொலிவை அவர் பார்த்திருக்க வேண்டும்.

            “என் மகள் டாக்டர் ஆகலன்னு நெனைக்கிறீங்களோ?”ன்னு என்னைப் பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார். என் முகம் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல தயார் இல்லை என்பதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் போலும். என்னிடமிருந்து எதாவது அறிகுறிகள் வெளிப்படும் என்று எதிர்பார்த்து ஏமாந்து அவரே தொடர்ந்தார்.

            “அவ நல்லாத்தான் படிச்சா. ஆனா பாருங்க டாக்டர் சீட் கிடைக்குற அளவுக்கு மார்க் வாங்கல. ஒரு பொண்ண பெத்துக்கிட்டு அதுவும் கங்கணத்தெ கட்டிக்கிட்டு டாக்டருக்குப் படிக்க வைக்காம இருக்க முடியுமோ சொல்லுங்க. இருந்த சொத்தையெல்லாம் வித்து பிரைவேட் மெடிக்கல் காலேஜ்ல பேமெண்ட் சீட்ல படிக்க வெச்சேன் பாருங்க. என் பொண்ணை டாக்டராக்கி அவ்வெ மொதெ ஊசி போட்டப்போ என் கண்ணுல வழிஞ்ச தண்ணி இருக்கு பாருங்க. அது என்னோட கண்ணு தண்ணி இல்ல. என்னோட உயிர். என் உயிர்தான் அன்னிக்குத் தண்ணியா வழிஞ்சது. சாம்பசிவம் நெனைச்ச மாதிரி பொண்ணப் படிக்க வெச்சு டாக்டராக்கிட்டான்னு ஊரெல்லாம் பேச்சு. சொல்ல மறந்துட்டேன் பாருங்க. எம் பேரு சாம்பசிவம்.” அவர் தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தார்.

            எல்லாம் நல்லவிதமாகப் போவதால் இது ஒரு சந்தோஷமான கதைதான் என்று நினைத்தேன். இனிமேல் திருப்பம் வர இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று தோன்றியது எனக்கு. கதையும் ஒரு சில வாக்கியங்களில் முடிந்து விடும் என்று நினைத்தேன்.

            “என் பொண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை பார்த்தேன். டாக்டர் மாப்பிள்ளை சார். ஊரு உலகத்தை அப்படியே சல்லடைப் போட்டு சலிச்சுப் பார்த்த மாப்பிள்ளை. ஆசை ஆசையா பார்த்த மாப்பிள்ளைப் பத்தி போன்ல சொன்ன மறுநாள் எம் பொண்ணு மாலையும் கழுத்துமா வந்து நின்னா சார். சரித்தான் கட்டுனவ கட்டுனா ஒரு டாக்டரைக் கட்டிருக்கலாமில்லையா. என்ஜினியரைக் கட்டிட்டு வந்து நின்னா. சரித்தான் என்ஜினியரைக் கட்டுனா. தமிழ்நாட்டு ஆளாப் பாத்துக் கட்டியிருக்கலாம்ல. வடநாட்டுப் பையனக் கட்டிட்டு வந்து நின்னா. என்னத்தெ சொல்றது?” கதையை இப்படித் திருப்புவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இனி அவர் சொல்லப் போகும் கதையில் துயர அத்தியாயம் ஆரம்பிக்கப் போகிறது என்று நினைத்தேன்.

            “என்ன சார் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்றீங்க? பெத்த வயிறு எப்படி இருக்கும் சொல்லுங்க? எரியுது, கொதிக்குது, வெடிக்குது, துடிக்குது, என்னென்னமோ செஞ்சது. இந்தப் பொண்ணுக்காக இன்னொரு புள்ளைக் கூட பெத்துக்காதவன் சார். படிப்புக்காகச் சொத்தெ அழிச்சவன் சார். பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு தங்கமான மாப்பிள்ளைய தகுதி கொறையாம பாத்து வெச்சவன் சார். என்னோட நெலமை எப்படி இருக்கும் சொல்லுங்க? அவுங்களப் பாத்தப்போ எத்தனை நாளு நீங்க சேர்ந்து வாழ்ந்திடப் போறீங்கன்னு நெனைச்சேன் சார். அப்படித்தான் சார் எனக்கு நெனைப்பு வந்துச்சு. அன்னிக்குத் தெய்வத்துக்கிட்டே வேண்டிக்கிட்டேன், ரெண்டு பேரையும் பிரிச்சி விட்டுடுன்னு. பாழாப் போன தெய்வம் விடல சார். நல்லா ஒட்டிக்கிட்டெ மாதிரி சேத்து வெச்சிட்டு சார்.” அவர் தேம்பத் தொடங்கினார். அவரைப் பாவமாய்ப் பார்ப்பதைப் போல ஒரு பார்வையை என்னிடம் எதிர்பார்த்திருப்பார். என் முகம் யார் கதையோ கேட்பதற்கு நான் ஏன் உணர்ச்சிவசப்பட வேண்டும் என்பது போல இருந்தது.

            “எம் பொண்ணு. ஆசையா வளர்த்தப் பொண்ணு. அவனுக்கு அதாங் அந்த மாப்புள்ள பையனுக்கு வெளிநாட்டுப் புராஜெக்ட்ன்னு அவனோட வெளிநாட்டுக்கும் கிளம்பிப் போனா. அப்படிப் போறப்போ பிளைட் வெடிச்சிடக் கூடாதான்னு கூடநெனைச்சேன். ஆனா வெடிக்கல சார். அங்கே போயி அந்தப் பயெ எவளெ ஒருத்திய பாத்துட்டு பின்னாடியே போயிட்டான்னா எம் பொண்ணு எங் கூட வந்துடுவான்னு நெனைச்சேன். அப்படியும் நடக்கல. ஆறு புள்ளைங்களப் பெத்துகிட்டு நாற்பது வயதுக்கு அப்புறமா நாடு திரும்புனா. அது வரைக்கும் ஸ்கைப்புல பேசுன ஒவ்வொரு நாளும் உசுரோட எரிஞ்சிக்கிட்டு இருந்தேன் சார் நான். நான் நெனைக்கிற எதுவுமே நடக்க மாட்டேங்குதுன்னு நெருப்பா கொதிச்சுக்கிட்டு இருந்தேன் சார்.” சொல்லிவிட்டு தண்ணீர் பாட்டிலை வாய்க்குள் கவிழ்த்தார். பாட்டில் காலியானதும் தாகம் அடங்காதவரைப் போல, “கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்றார்.

            “அனு! கொஞ்சம் தண்ணி கொண்டாயேன்.” நான் உள்ளே குரல் கொடுத்தேன். ஒரு செம்பு நிறைய தண்ணீரை வாங்கிக் குடித்தவர் இன்னும் கொடுத்தாலும் குடிப்பவர் போல இருந்தார்.

            “தாகம் அடங்குன மாதிரி தெரியலையே. வெக்கை தணியுறப்பத்தாம் நீர்ர உள்வாங்கும்ங்றாப்புல மனப்புழுக்கம் வெளியேற வெளியேற தண்ணிய குடிச்சுத் தணிச்சுக்கிறாப்புல தெரியுது. நீங்க பேசுங்க. இன்னொரு செம்புல தண்ணி கொண்டாந்து வெச்சிட்டு நான் கௌம்பிடறேன்.” என்றாள் என் மனைவி.

            “சம்சாரங்களா! நீங்களும் கேக்குறதுன்னா கேக்கலாம்.” என்றார் அவர்.

            “நாலு பேரு கதையக் கேட்டா நல்ல தூக்கம் வராதுங்க. நமக்கு ஆவாதுங்க இது.” என்றபடியே என் மனைவி உள்ளே போக எத்தனித்தாள்.

            “அப்போ எங் கதைய கேக்குற இவுங்களுக்கு ராத்தூக்கம் செல்லாதுங்களா?” என்றார் அவர்.

            “ராத்தூக்கம் பத்தாதுன்னு இப்போ மத்தியான தூக்கம் வேற. லட்சம் பேர்ரோட கதையக் கேட்டாலும் எனக்கென்னன்னு தூங்குற மனசு. நமக்கெல்லாம் அப்படியா இருக்கு? தட்டானப் பிடிச்சுப் பிய்ச்சிப் போட்ட கதையக் கேட்டாலும் தூக்கம் பிடிக்க மாட்டேங்குது.” என்றபடியே உள்ளே போனாள் என் மனைவி.

            “உங்களுக்கும் சேர்த்து உங்க வீட்டுக்காரவுங்க பேசுவாங்கப் போலருக்கே!” என்றார் அவர். அதற்கும் என் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

            “எங்க கதைய கேக்குற நீங்க ஒங்க வீட்டுக்காரவுங்ககிட்டெ கதெ கேக்குறதுண்டோ?” என்றார் அவர் இப்போது என்னைப் பார்த்து.

            எனக்குப் பதில் சொல்ல தோன்றவில்லை. அதைப் பார்த்ததும், “ஒத்த வார்த்தை சொல்லலாம்ல!” என்றார் அவர்.

            “நான் கேட்ட மொத கதையே அவ சொன்னதுதான்.” என்றேன் நான். இப்போது அவர் கதை கேட்கும் ஆவலுக்கு வந்ததைப் போலத் தெரிந்தது. நானோ எனக்குக் கதை சொல்வதிலெல்லாம் விருப்பம் இல்லாதது போல முகத்தை வைத்துக் கொண்டு உங்கள் கதையைச் சொல்லுங்கள் என்பது போலப் பார்த்தேன்.

            “ஆங்… கதைய விட்டுப்பிட்டேன் பாருங்க. வெளிநாட்டுல நல்லா சம்பாதிச்சிப்புட்டு நாடு வந்து சேர்ந்தாங்க. வந்தவங்க எங்கேயாச்சும் போயித் தொலைய வேண்டியத்தானே? நான் இருக்குற ஊருக்கே வந்து எடத்தை வாங்கிக்கிட்டுப் பக்கத்துத் தெருவுல வீட்டைக் கட்டிக்கிட்டு இருந்தாங்க பாருங்க. என்னோட ஆத்திரம் அதிகமாகிப் போச்சு. கடைசி காலத்துல எங்களுக்குத் தொணையா இருக்குறதா இங்கேயே வந்துட்டதா சொன்னாங்க. அவுங்க அப்படி வந்தததுல என்னோட வீட்டுக்காரிக்குச் சந்தோசம்ன்னா சந்தோசம். என்னால சந்தோசமா இருக்க முடியல. அவுங்களுக்கு எதாச்சும் கெடுதல் நடக்கக் கூடாதான்னு நெனைச்சேன். ஒண்ணும் நடக்கல சார். புருஷன் பொண்டாட்டின்னா அப்படி ஒரு அன்னியோன்யம் சார். அதாங் எம் பொண்ணுக்கும் மருமவனுக்கும் சொல்றேன் சார். நம்ம ஊர்ல படிச்சவங்க எத்தனைக் கொழந்தைங்க பெத்துக்குவாங்க சார்? ரெண்டைத் தாண்டுமா? தாண்டாதுல்ல. டாக்டருக்குப் படிச்ச மகள் ஆறு கொழந்தைங்க பெத்துக்கிட்டா. ஆமாம் எனக்கு ஆறு பேரக் குழந்தைங்க. அதாங் முன்னமே சொன்னேன்ல்ல. அதுல ஒண்ணாச்சும் சோடை போகணுமே. போகலே. எல்லாம் நல்லபடியா படிக்குதுங்க. வெளிநாட்டுல வளர்ந்திருந்தாலும் பெத்தவங்களைப் பெரியவங்களை மதிக்குதுங்க. இதுல எதுவும் எனக்குப் பிடிக்கலே சார். எத்தனை நாள்தான் இதெ தாங்க முடியும் சொல்லுங்க. பழகுறப்போ இதையெல்லாம் பிடிச்சாப்புல பழகுறேன். மனசுக்குள்ள வெறுப்புன்னா வெறுப்பு வேப்பஞ்சாற்றைப் பிழிஞ்சு ஊத்துனாப்புல.” அவர் முடிவுக்கு வந்தவரைப் போல நிறுத்தினார். நான் எதையாவது கேட்பேன் என்று எதிர்பார்த்தார்.  எனக்குக் கேட்கிறப் பழக்கத்தைத் தவிர எதிர் கேள்வி கேட்கிற வழக்கம் இல்லாததால் ரொம்பவே ஏமாற்றமாகிப் போனார்.

            சில நிமிடங்கள் எங்களிடையே மௌனம் நீடித்தது. மௌனத்தை உடைத்துக் கொண்டு நான் பேசுவேன் என்று எதிர்பார்த்தார். நான் எந்தக் காலத்தில் பேசினேன். கல்லு பிள்ளையார் கணக்காய் உட்கார்ந்திருந்தேன். மௌனத்தின் அமைதியைப் பொறுக்க முடியாமல் அவரே உடைத்தார்.

            “அந்த ஆண்டவன்கிட்டெ சொல்றதெ போல இருக்கு சார். நான் ஏன் இப்படி இருக்கேன்னு ஒரு கேள்வியாச்சும் கேட்பீங்கன்னு பார்த்தேன். கேட்க மாட்டேங்றீங்களே? நானே சொல்றேன். நான் பார்த்து கட்டி வைக்காத என் மகளோட வாழ்க்கையில எதாச்சும் தப்பா நடக்கணும்ன்னு எதிர்பாக்குறேன் சார். அப்படி ஒண்ணு நடந்து ஒங்க பேச்ச மீறிக் கல்யாணம் நடந்ததாலத்தாம்ப்பா இவ்வளவும் நடந்துச்சு. என்ன மன்னிச்சிடுங்கன்னு எம் மகள் என் கால்ல விழுந்து கதறி அழணும் சார். அதெ நான் கண்குளிர பாக்கணும் சார். அதுக்குத்தான். எல்லாம் அதுக்குத்தான். அப்படி நடக்கணும்ன்னு பாக்குறேன். நடக்க மாட்டேங்குது. நான் கண்ணை மூடுறதுக்குள்ளாச்சும் அப்படி நடக்கணும்ன்னு பாக்குறேன். ம்ஹூம் நடக்குறாப்புல தெரியல. நெனைக்குறதுக்கு நேர்மாறத்தான் நடக்குது. அதெ என்னால தாங்க முடியல. இன்னும் எத்தனை நாளுக்கு இந்தச் சோதனைன்னு தெரியல. இதெ யார்கிட்டெ சொல்றதுண்ணும் தெரியல. விசயம் வெளியில தெரிஞ்சா யாரு சார் என்ன மதிப்பான்? என் நெனைப்பு தப்புன்னு எனக்கே தெரியும். அதுக்கு யாரும் எனக்கு விளக்கம் கொடுக்கத் தேவையில்ல. புத்திமதி சொல்லவும் வேண்டியதில்ல. ஆன்னா நான் தப்பா நெனைச்சாலும் அதுதாங் என்னைப் பொருத்தமட்டில சரி. அப்படித்தாம் நடந்தாவணும். அதாங் என் ஆழ்மனசோட விருப்பம். அப்படி ஒண்ணு நடக்காமப் போயி நான் செத்தேன்னா எங் கட்டெ வேகாது. மனசெ ரொம்ப நாளா இது உறுத்திக்கிட்டெ இருக்கு. இனுமேலும் யார்கிட்டாச்சும் சொல்லலன்னா மனசு வெடிச்சிடும் போல இருக்கு.அதாங் உங்களப் பத்தி கேள்விப்பட்டதும் ஓடோடி வந்தேன்.” அவர் சொல்லி முடித்ததும் மூச்சு இரைத்தது. செம்பிலிருந்த தண்ணீரை எடுத்து ஒரு மடக்குக் குடித்தார்.

            என்னை அவர் இப்போது மிகுந்த ஏக்கத்தோடு பார்க்க தொடங்கினார். “எதாச்சும் சொன்னா தேவல. மனசுல பாரம் எறங்குனாப்புலத்தாம் இருக்கு. இருந்தாலும் ஒங்க வார்த்தை முழுசா என்னை சரி பண்ணிடும்ன்னு தோணவும் செய்யுது. எதாச்சும் சொல்லலாங்களா?” என்றார் அவர்.

            “எனக்குக் கேக்கத்தான் தெரியும். சொல்லத் தெரியாது. இன்னும் சொல்றதுக்கு எதாச்சும் இருந்தா சொல்லுங்க.” என்றேன் நான்.

            அவர் என்னை வெறித்துப் பார்த்தார். எதுவும் சொல்லாமல் எழுந்து கேட்டைக் கடந்து வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார். நான் அங்கேயே அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் என் மனைவி வந்தாள்.

            “என்ன இன்னிக்குச் சீக்கிரமே கதை முடிஞ்சிடுச்சுப் போல. எங்கே அவரு? டீ போட்டுட்டு வரலாமேன்னு பார்த்தேன். ஆளைக் காங்கலையே?” என்றாள்.

            “கௌம்பிட்டார்.” என்றேன் நான்.

            “நல்ல மனுஷன்தான் இல்ல. இங்க கதை சொல்ல வந்த யாரும் எங்கிட்டெ ஒரு வார்த்தை பேசுனதில்ல. இவர்தான் பேசுனார். அவர்கிட்டெ நாலு வார்த்தைப் பேசி உட்கார வெச்சிருக்க மாட்டீங்களே? அப்படியே உட்கார்ந்திருப்பீங்களே! நல்ல மனுஷன் போங்க. அந்த நல்ல மனுஷனாவது சித்தெ நேரம் உட்கார்ந்துட்டுப் போயிருக்கலாம். நல்ல மனுஷங்களப் பார்க்க நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதாம் போல.” என்றாள்.

            நான் பேசாமல் இருக்க, “என்ன பேச்சக் காணும். நான் கண்டுபிடிச்சது சரிதானே. நல்ல மனுஷன்தான் இல்லையா?” என்றாள்.

            “ரொம்ப நல்ல மனுஷன்” என்று சொல்லியபடி நான் உள்ளே எழுந்து சென்றேன்.

*****

 

4 comments:

  1. வாழ்த்துகள். பாத்திர வார்ப்பு பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் ஐயா.

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றிகள் ஐயா!

      Delete

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...