காமெடியன்களாகி விட்ட பேய்களும் பிசாசுகளும்
காலந்தோறும் தமிழ் சினிமா தன்னை வெவ்வேறு விதமாகப் புதுப்பித்துக்
கொண்டு வருகிறது. கதை சொல்லல், திரைக்கதை உத்தி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
என்று அதன் முன்னேற்ற பாதையை மூன்றாகப் பிரித்து ஆராய முடியும்.
பக்தி, சமூகம், அரசியல், நகைச்சுவை, சாகசம், காதல், கற்பனை,
மாயாஜாலம் என்று அனைத்துப் பிரிவுகளிலும் தமிழ் சினிமா தன்னை வளர்த்துக் கொண்டு வந்திருப்பதைக்
காலந்தோறும் நோக்கும் போது அறிய முடியும்.
எதார்த்தத்தை முன்னெடுத்ததிலும் சமூக முன்னேற்றத்திற்கான கருத்துகளை
விதைத்ததிலும் தமிழ் சினிமா தன் பங்களிப்பை மிகச் சரியாகவே செய்திருக்கிறது. கேளிக்கை
நோக்கும், வியாபார நோக்கும் அதிகம் என்ற குற்றச்சாட்டும் தமிழ் சினிமாவுக்கு உண்டு.
கலைப்படங்களுக்கான சோதனை முயற்சிகளும் அவ்வபோது தமிழ் சினிமாவில்நடந்து கொண்டுதான்
இருக்கின்றன.
இவ்வளவு தனித்தக் கூறுகள் தமிழ்ச் சினிமாவிற்கு இருந்த போது
அதன் ஆகப்பெரும் சாதனையாக நான் கருதுவது காமெடியன் பட்டியலில் பேய்களையும் பிசாசுகளையும்
கொண்டு வந்து சேர்த்ததுதான். படைப்பாக்கத்தின் முதிர்ச்சியில்தான் இப்படிப்பட்ட முயற்சிகள்
நடக்க முடியும். தமிழ் சினிமா அதன் முதிர்ச்சியான நிலையை அடைந்திருப்பதற்கு இது ஒரு
சான்று எனலாம்.
*****
முகமும் பாராமுகமும்
தமிழ் சினிமா பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை வாசித்து
இருப்பீர்கள். அதில் ஒரு குறிப்பிட்ட நுட்பத்தை நீங்கள் உற்று கவனிக்கலாம். ஒரு படத்தில்
பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர் பற்றிய செய்தியையோ நேர்காணலையோ கட்டுரையையோ
திரையுலக நாயக நாயகியரின் படங்களாகப் போட்டு நிரப்பியிருப்பார்களே தவிர அந்தத் தொழில்நுட்பக்
கலைஞரின் படத்தைப் போட்டிருக்க மாட்டார்கள். அவரை நீங்கள் எழுத்துகளில்தான் வாசித்துக்
கொள்ள வேண்டும்.
என்னவோ இந்தப் பத்திரிகைகளுக்கு
எழுத்தாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கலைஞர்கள் மேல் அப்படி ஒரு பாராமுகம்
இருக்கிறது. அவர்களின் முகத்தை யாரும் பார்த்து
விடக் கூடாது என்ற அக்கறையும் இருக்கிறது.
இந்த உலகில் யாருடைய முகத்துக்கு
வியாபார மதிப்பு இருக்கிறதோ அவர்களுடைய முகம்தான் வெளியுலகுக்குக் காட்டப்படும். மற்றவர்கள்
தங்களுடைய முகத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்துக் கொள்வதோடு தங்கள் ஆசைகளைத்
தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான். அல்லது செல்பி எடுத்து அதை ப்ரொபைல் படமாக வைத்துக்
கொண்டும் தீர்த்துக் கொள்ளலாம். சமூக ஊடகங்களில் தங்கள் படத்தைப் பதிந்து கொண்டும்
பழி தீர்த்துக் கொள்ளலாம்.
*****
No comments:
Post a Comment