21 Jan 2022

நோக்கு முறை

நோக்கு முறை

            எல்லாவற்றிற்கும் எல்லாரும் ஒரு கருத்தைக் கொடுப்பார்கள். கருத்துகளைச் சொல்வது அவரவர் சுதந்திரம். அவர்கள் ஒரு கருத்தைத்தான் சொல்கிறார்கள். சரியான கருத்தைத்தான் சொல்கிறார்கள் என்ற அர்த்தமில்லை. சரியான கருத்தை நாம்தான் தேடிக் கண்டடைய வேண்டும்.

            கருத்துகளைப் புரிந்து கொள்வதும் அவற்றை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதும் முக்கியம். ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நோக்கமில்லாத கருத்துகள் என்று எதுவுமில்லை. ஒரு கருத்தின் நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக அக்கருத்திற்கு நோக்கமில்லை என்றாகி விடாது.

            நம் பழக்கம்தான் கருத்துகள் குறித்த முடிவுக்கு வருவதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாம் கருத்துகளை எப்படி உள்வாங்கிப் பழகியிருக்கிறோமோ அப்படித்தான் கருத்துகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். கருத்துகளைப் புரிந்து கொள்வதில் இப்படி ஒரு சார்பு நிலை இருக்கிறது. சார்பற்ற நிலையில் நின்று நோக்கியும் கருத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கருத்துகள் குறித்த முழுமையான புரிதலுக்கு வர இது அவசியம்.

            சரியான புரிதலுக்கு வர ஒரு கருத்தை அனைத்து நிலைகளில் நின்று கோக்க வேண்டும். இதற்குப் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவை. பொறுமை இல்லாத போது ஒரு கருத்தை முழுமையாக உள்வாங்கி முடிப்பதற்குள் வேறொரு கருத்தைப் புலப்படுத்தி வெளிப்படும் கருத்தின் உள்நோக்கத்தை வெளிவர விடாமல் செய்து விடுவதற்கு நாமேபோதுமானது. சகிப்புத்தன்மை இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். எதிர்தரப்பிலிருந்து வெளிவரும் கருத்துகள் நம் புரிதலுக்குள் இறங்கவே இறங்காது.

            கருத்துகளை முழுமையாக நோக்கிப் புரிந்து கொள்ளும் போது உண்டாவதுதான் தெளிவு. தெளிவை அடைவதற்கு முன்பு வரை கருத்துகள் வெறும் கருத்துகள்தான். கருத்துகளிலிருந்து முடிவுக்கு வருவதை எப்போதும் தவிர்க்க வேண்டும். தெளிவிலிருந்துதான் முடிவைக் கைக்கொள்ள வேண்டும்.

            ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள முடியாத போது பொறுமை மிக அவசியம். ஏனென்றால் கால அவகாசம் புரிந்து கொள்ள முடியாத கருத்துகளையும் புரிந்து கொள்ள செய்து விடும். அவசரம் புரிய வேண்டிய கருத்துகளையும் புரிந்து கொள்ள முடியாமல் செய்து விடும். மனநிலையை மாற்றி வேறொரு கோணத்தில் பார்க்க செய்யும் ஆற்றலுக்கும் காலத்திற்குத்தான் உண்டு. பொறுமையாகக் காத்திருப்பவர்களால்தான் கருத்துகளின் மறுபக்கத்தைக் காணவும் முடியும்.

            கருத்துகளுக்குப் பொருந்தும் இந்நோக்குகள் நிகழ்வுகளுக்கும் பொருந்தும். வாழ்வில் எவ்வளவோ நிகழ்வுகள் நடக்கின்றன. அவ்வளவு நிகழ்வுகளுக்கும் நாமாகக் கொடுக்கும் அர்த்தமும் புலப்பாடுமே அவற்றிற்குரிய அர்த்தமோ புலப்பாடோ ஆகாது.

            ஒரு நிகழ்வின் காரண காரியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முன்னும் பின்னும் ஆகிய இரு கால நிலைகளிலும் நின்று நோக்க வேண்டும். காலத்தின் முன்னை மட்டும் நோக்கி பின்னால் பார்க்காமல் இருந்து விடக் கூடாது. பின்னால் மட்டும் நோக்கி முன்னை நோக்காமல் இருந்து விடக் கூடாது. முன்னைக் காலத்தை நோக்கும் கவனமும் பின்னால் நடக்கப் போகும் காலத்தைக் காத்திருந்து நோக்கும் பொறுமையும் தேவையானது. பல நிகழ்வுகளை இப்படி நோக்கும் பயிற்சியே அனுபவமாக உருப்பெறும்.

            முதிர்ச்சியான அனுபவங்களைப் பெறுவதற்குப் பல நிகழ்வுகளை நோக்கியிருந்திருக்க வேண்டும். முதிர்ச்சியான அனுபவத்தை அடைவதற்கு முன்பாக நிகழ்வுகளை அவசர அவசரமாக அர்த்தப்படுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

            சமூகத்தில் வழக்கில் இருக்கும் கருத்துகளும், முன்னோர்களின் அனுபவங்களும் நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற்கான வழிகள். பல வழிகளுள் அவையும் வழிகளேயன்றி அவையே முழுமையான வழிகளல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். சரியான கருத்தை நாம்தான் தேடிக் கண்டடைய வேண்டும் என்பது போல சரியான வழியை நாம்தான் தேடிக் கண்டடைய வேண்டும்.

            நம்மைச் சுற்றி வழங்கப்படும் கருத்துகளானாலும் நிகழும் நிகழ்வுகளானாலும் அது குறித்த சரியான நோக்கிற்கு வர வேண்டிய பொறுப்பும் கடமையும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தவறான நோக்குகளை வெளிப்படுத்தி விடக் கூடாத சமூக அக்கறையும் சமூக பொறுப்பும் கூடவே இருக்கின்றது.

            கருத்துகளையும் நிகழ்வுகளையும் நாம் எப்படி உள்வாங்குகிறோம், சமூகம் எப்படி உள்வாங்குகிறது, உள்வாங்கிய கருத்துகனையும் நிகழ்வுகளையும் நாம் எப்படி நோக்குகிறோம், சமூகம் எப்படி நோக்குகிறது என்பதை நோக்கி நாம் பயணப்பட ஆரம்பித்தால் அவரசப்பட்டோ உணர்ச்சிவசப்பட்டோ எதையும் புலப்படுத்தி விட மாட்டோம். ஆய்வுக்குப் பின் வரும் முடிவுகள் முதிர்ச்சியும் நுண்ணுணர்வும் கொண்டிருப்பதே அதற்குக் காரணம். இந்நோக்கு யாவர்க்கும் பயிற்சியினாலும் பொறுமையினாலும் கூடி வரக் கூடிய ஒன்று என்பதால் உலகுக்கு நலம் புரிய நினைக்கும் அனைவரும் இந்நோக்கைக் கொள்வதன் அவசியம் நோக்கத்தக்கது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...