நாம் ஏன் கைவிடப்பட்டோராய் ஆகிறோம்?
இன்றைய மனிதர்களிடம் சகிப்புத் தன்மை குறைந்து கொண்டே போகிறது
என்கிறார்கள். அது சரிதான். அதை அதிகமாக்குவதற்கு ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்றால்
இருக்கிறது. ஆனால் அந்த வழியில் பயணிப்பது இனி அவ்வளவு சுலபமானதல்ல என்றுதான் தோன்றுகிறது.
இன்றைய மனிதர்கள் சகிப்புத்தன்மையோடு இருப்பதற்கான அந்த வழிதான்
என்னவென்று கேட்டால் குடும்ப அளவில் மனிதர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ முயற்சிப்பதுதான்.
என்னைக் கேட்டால் கூட்டுக் குடும்பத்தை விட்டு வெளியேறும் மனிதன் எப்படி சகிப்புத்தன்மையோடு
இருப்பான் என்பதே? ஒரு குடும்பத்திற்குள் சகிப்புத்தன்மையோடு இருக்க முடியாதவன் சமூகத்தில்
எப்படி சகிப்புத்ன்மையோடு இருப்பான்?
கூட்டுக் குடும்பத்தில் சில சங்கடங்கள் உண்டாகின்றன என்றால்
கூட்டுக் குடும்பத்தை விட்டு வெளியேறும் போது அதை விட அதிகமான உளவியல் பிரச்சனைகள்
உண்டாகின்றன.
ஒரு குடும்பத்திற்குள் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் போது
கிடைக்கும் மன அமைதியை உலகில் வேறெங்கும் பெற முடியாது. ஒருவரையொருவர் அனுசரித்துக்
கொள்ளும் போது பெறும் உணர்வு சமூகத்தில் மிகச் சிறந்த இணக்கத்தை உண்டாக்கும்.
இந்த நூற்றாண்டில் மனிதர்கள் நிகழ்த்திய மிக மோசமான வன்முறை
என்றால் கூட்டுக்குடும்ப அமைப்பு முறையைப் பொருளாதார காரணங்களை முன்னிருத்தித் திட்டமிட்டுச்
சிதைத்ததுதான் என்று சொல்வேன்.
முதியோர் இல்லங்கள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்கள், குழந்தைகள்
காப்பகங்கள் போன்றவைக் கூட்டுக் குடும்ப சிதைவை மிகவும் வெளிப்படையாகக் காட்ட போதுமான
சான்றாதரங்கள்.
பேசவும் பழகவும் கருத்துகளைக் கலந்து கொள்ளவும் உரிமையோடு மறுக்கவும்
கூட்டுக்குடும்பங்கள் மிக அழகாகக் கற்றுக் கொடுத்து விடும். இதை இந்த மனிதர்கள் கூட்டுக்
குடும்பத்தைச் சிதைத்து விட்டு தகவல் தொடர்பு திறன்கள் என்று பணம் கட்டிப் படிக்கும்
படிப்புகளில் பெறவே விரும்புகிறார்கள்.
தாத்தா பாட்டிகள் உள்ள கூட்டுக்குடும்பங்களில் தாய் தந்தையரிடம்
வளரும் குழந்தையைப் பார்க்க முடியாது என்பது மற்றுமொரு வியப்பான ஒன்று. அதுவும் அத்தை
மாமா, சித்தப்பா சித்தி, பெரியப்பா பெரியம்மா என்று அமைந்து விட்டால் குழந்தைகளுக்கு
தங்களுக்குப் பிரியமானவர்களைத் தாங்களே தேர்ந்து கொண்டு அவர்களிடம்தான் வளரும். இளம்
பிரயாத்தில் கிடைக்கும் குறைவறக் கிடைக்கும் அந்த அன்பும் பாசமும்தான் வளர்ந்த பின்பு
அவர்களுக்கு எத்தகைய நெருக்கடியையும் தாங்கும் வலிமையைத் தரக் கூடியவை.
குழந்தைப் பிரயாத்திலேயே அவ நம்பிக்கையோடும் அன்பும் பாசமுமற்ற
சூழலில் வளரும் குழந்தைகள் வளர்ந்த பின்பு உளவியல் பிறழ்வோடு இருப்பதற்கான வாய்ப்புகள்
அதிகம்.
நம்மைச் சுற்றிலும் இன்று பிரச்சனைகளும் சவால்களும் அதிகம் என்று
சொன்னால் அதை உருவாக்கிக் கொண்டவர்களும் நாம்தான். கூட்டுக் குடும்பமும் கூட்டான வாழ்க்கை
முறையும் சமுகத் தகுதிக்கான பல குணாதிசயங்களைக் கற்பது தெரியாத வகையில் கற்பித்து விடக்
கூடியவை. சகிப்புத்தன்மையை அப்படித்தான் தன்னையறியாமல் மனிதர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
நாம் அதற்கான வாய்ப்புகளைச் சிதறடித்து விட்டு அதைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுத்
தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எல்லாவற்றையும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுத் தந்து விடலாம்தான்.
ஆனால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை நாம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால்
அதற்கான மனப்பான்மையை நிலைநிறுத்திக் கொள்வதை நாம்தான் செய்தாக வேண்டும். இல்லையென்றால்
நாம் கைவிடப்பட்டோராய் ஆவதை நம்மால் தடுத்துக் கொள்ள முடியாது.
*****
No comments:
Post a Comment