3 Oct 2021

அவசரம்

அவசரம்

            டிரான்ஸ்பர் ஏற்பாடு செய்து தர வேண்டுமானால் ஐந்து லட்சம் பணம் கேட்டான் மணி. ரொம்ப நம்பகமான ஆள்தான். பார்க்க வேண்டிய ஆளைப் பார்த்து பணத்தைக் கொடுத்து டிரான்ஸ்பர் ஆர்டருடன் வந்து விடுவான். இப்போது மணியை நம்புவதை விட சுமந்துக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. கடந்த ஒரு வருடமாகவே தாங்க முடியாத மன உளைச்சல் சுமந்தை இந்த முடிவுக்குத் தூண்டியிருந்தது.

            மன உளைச்சல் அதிகமாகி ராகவியைக் கொலை செய்து விடுமோ என்று கூட பயமாக இருந்தது சுமந்துக்கு. அதுக்குப் பேசாமல் இப்படி ஒரு டிரான்ஸ்பரை வாங்கிக் கொண்டு தற்காலிகப் பிரிவை ஏற்பாடு செய்வது கூட நல்லதெனத் தோன்றியது.

            மற்றொரு வழியாக சுமந்துக்கு ராகவியை விவாகரத்துச் செய்து விடலாமா என்றும் தோன்றியது. காதல் திருமணம் இப்படியா விவாகரத்தில் சென்று முடிய வேண்டும் என்று நினைத்த போது அந்த முடிவு அவனுக்கு வேதனையைத் தருவதாக இருந்தது.

            இரண்டு வருடங்களுக்கு முன்பாக ராகவியை ஒரு பார்ட்டியில் பார்த்தது, இருவரும் ஒரே மாதிரியான பேங்க் வேலையில் பக்கத்துப் பக்கத்துத் தெருவில் இருந்தது, விசயம் அறிந்து ரசனை பேசி பரிமாறிக் கொண்டதும் காதலில் விழுந்தது, கட்டினால் அவளைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்றது எல்லாம் நினைவில் வந்து வங்கக் கடலின் அலைகள் போல மோதின சுமந்துக்கு.

            கல்யாணம் பற்றிய பேச்சேடுத்த போது சுமந்தின் அம்மாவுக்கு ராகவியைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. “வேண்டாம்டா இந்தப் பொண்ணு. நல்ல பொண்ணா பாத்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இவளப் பாத்தா நல்ல பொண்ணாவே தெரியல. இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னால அவ கூட குடித்தனம் பண்ணவே முடியாது!” என்று எவ்வளவோ அம்மா சபிப்பதும் கண்டிப்பதும் போலச் சொல்லிப் பார்த்தாள். அப்பா ஒன்றும் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார்.

            ராகவி குடும்பத்திலும் ஏக எதிர்ப்பு. ராகவியின் அப்பாவுக்கு சுமந்தை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. “இவனெ கட்டிக்கிட்டா பாதியில உன்னைய கழட்டி விட்டுட்டுப் போயிடுவாம்மா. பாத்தா சுழி நல்லா இருக்குறவன் மாதிரியே தெரியல.” என முகத்து நேராகத் தாட்சண்யம் இல்லாமல் பேசினார். எல்லாவற்றையும் ஒரு வழியாகச் சமாளித்துச் செய்த கல்யாண நாளை நினைத்த போது உயிர் போய் உயிர் வருவதைப் போலிருந்தது சுமந்துக்கு.

            விவாகரத்தா, டிரான்ஸ்பரா என்ற மனசஞ்சலம் ஆட்டிப் படைத்த போது, கொஞ்ச நாள் பிரிந்திருத்தால் நிலைமை சரியாகலாம் என்ற நம்பிக்கையில் டிரான்ஸ்பர் பரவாயில்லை என்று பட்டதால் அதை டிக் அடித்து உடனே பெர்ஷனல் லோனுக்கு விண்ணப்பித்து மணியிடம் ஐந்து லட்சத்தைக் கொடுத்துக் காரியத்தை முடுக்கி விட்டான் சுமந்த்.

            சரியாக ரெண்டு வாரத்தில் டிரான்ஸ்பர் ஆர்டரை சுமந்தின் கையில் திணித்தான் மணி. அதை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான் சுமந்த்.

            ராகவி ஹாலில் சோகமாக உட்கார்ந்திருந்தாள். சுமந்த் மனதுக்குள் இருந்த சந்தோஷத்தை மறைத்த வண்ணம் சோக மயமாக்கிக் கொண்டு டிரான்ஸ்பர் விசயத்தைச் சொல்ல வாயெடுத்தான். ராகவி முந்திக் கொண்டாள், “உன்னை ரொம்ப மிஸ் பண்ணப் போறேன்டா சுமந்த். இத்தனை நாள் சண்டை போட்டதையெல்லாம் நெனைக்கிறப்போ ரொம்ப வருத்தமா இருக்குடா. எங்க ஆபீஸ்ல என்னை நார்த் இந்தியாவுக்கு டிரான்ஸ்பர் பண்ணிருக்காங்கடா. நாளைக்கே கிளம்பியாவணும். உன்னால நான் இல்லாம இருந்துட முடியுமாடா?”

            ஐந்து லட்சத்தைக் கொடுத்து அவசரப்பட்டு விட்டோமோ எனத் தலை சுற்றியது சுமந்துக்கு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...