2 Oct 2021

செய்திகளின் வெர்ஷன்கள்

செய்திகளின் வெர்ஷன்கள்

            ஊரு சனமே ரேடியோவுல சேதி கேக்கணுமேன்னு சாயுங்காலம் ஆறு மணியான்னா கட்ட கோனாரு வீட்டை நோக்கித்தாம் ஓடும். அவரு அப்போ வைஸ் பிரசிடென்ட். பஞ்சாயத்து ரேடியோ அவரு வீட்டுலத்தாம் இருந்துச்சு. அதெ கேக்கத்தாம் சனங்க ஓடுனது.

            ரேடியோவுல செய்தி கேக்குறது அப்போ ரொம்ப பெரிய விசயம். எல்லா வீட்டுலயும் அப்போ ரேடியோ கெடையாது. இப்போ வீட்டுக்கு நாலு டிவிங்க இருக்குற காலத்துல அப்போ ரேடியோ கெடையாதுங்ற சங்கதிய நம்புறதே கஷ்டமாத்தாம் இருக்கும்.

            டீக்கடையில பேப்பர் படிக்கணும்ங்றதுக்காகவே டீக்குடிக்க போன ஆளுங்க உண்டு. கடனுக்கு டீயைக் குடிச்சிப்புட்டு ஓசியில பேப்பர்ர படிச்சிட்டு வந்துடுறது. டீக்கடைக்காரருக்குப் பேப்பரு படிக்கத் தெரியாதுன்னாலும் பேப்பரு வாங்காத டீக்கடைகளப் பாக்க முடியாது அப்போ. கடைக்கு நாலு பேர்ர டீக்குடிக்க வர்ற வைக்குற பேப்பரு மறுநாளு பஜ்ஜி, போண்டா வடை மடிக்குறதுக்கு வசதியா இருக்கும்.

            பஞ்சாயத்து டிவி வந்த பெற்பாடு சனங்க செய்தி கேக்குற மனநிலையிலேந்து மாறி ஒளியும் ஒலியும் பாக்குற மனநிலைக்கு வந்துடுச்சுங்க. என்னைக்காவது முக்கியமான சேதின்னா மட்டும் அன்னைக்கு சேதிகளக் கேக்க உக்காந்துடும். அப்பையும் முக்கியமான சேதியச் சொல்லாம என்னத்தையோ வச வசன்னு சொல்லிட்டு இருக்காம் பாருன்னு செய்தி வாசிக்குறவங்கள கொறைச் சொல்லிட்டு இருக்கும்ங்க.

            இப்போ சேதின்னா வாட்ஸ் அப்புன்னு ஆச்சு. பேஸ்புக், டிவிட்டர் பாக்காத ஆளுங்க கூட வாட்ஸ் அப் வெச்சிப் பாக்குறாங்க. இதுல என்னா ஒரு வேதனைன்னா வாட்ஸ் அப்புல வரலன்னா அது செய்தி இல்லன்னு மக்கள் நம்புறதுதாம். நீ சொல்றதெ எப்படி நம்புறது? வாட்ஸ் அப்புல வந்திருக்கா என்ன? அப்படின்னுத்தாம் இப்போ கேள்வியே கேக்குறாங்க. டிவியில செய்தி பாக்குறதெல்லாம் இப்போ அவுட் ஆப் வெர்ஷன் ஆயிட்டு. நெட்டு எதுக்கு இருக்கு? அதெ நொட்டுன்னு போட்டு சட்டுன்னு சேதியச் சொல்லுங்ற வெர்ஷன்தான் இப்போ ஓடிட்டு இருக்கு.

*****

No comments:

Post a Comment

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

திராவிடமா? தமிழ்த் தேசியமா? ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கத்திற்கான வலுவான அடிப்படை கருத்தியல்தான். அந்தக் கருத்தியல் அடிப்படையில்தான் தங்கள்...