5 Oct 2021

கடலின் நடுவிலொரு காடு

கடலின் நடுவிலொரு காடு

நடுக்கடலில்

அலைகள் காணாமல் போயிருந்தன

நீர் நிலம் போலிருந்தது

நிலமாகியிருந்த நீரில் நடக்க முடியுமா என்ற

சந்தேகம் எழுந்தபோது

கப்பல் சக்கரத்தால் ஊர்வது போலிருந்தது     

கடல் பெயல் நீர் போல மாறவிருக்கும்

பெய்யப் போகும் மழையை

நினைத்த போது நெஞ்சமெல்லாம் கருத்திருந்தது

நடுக்கடலின் நடுவில் ஒரு மரத்தை நட்டு விட்டால்

அதற்கு நிலத்தை ஊற்றுவது யார் என்று தோன்றுகிறது

இங்கே வளரும் மீன்கள் பிராணிகள்

அந்த மரத்தை நல்லவிதமாகப் பார்த்துக் கொள்ளும்

மரத்தை வெட்டும் கொலையை ஒரு போதும் செய்யாது

உதிர்ந்து விழும் இலைகளைப் படகாக்கி மகிழும்

பூக்களைத் தொட்டிலிட்டுத் தாலாட்டும்

என்ன ஒரு பயம் என்றால்

இந்தப் பிரதேசத்தில் மனிதர்கள் பிரவேசிக்காமல் இருக்க வேண்டும்

அல்லாது போனால்

காடொன்று உருவாகாது

காடொன்று உருவானால்

துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கும் அளவுக்கு

வீரப்பனோ பூலான் தேவியோ உண்டாகுவர்

கடற்கன்னிகள் அனைவரும் பலாத்காரம் செய்யப்படுவர்

நீதிக்காக அமைக்கப்படும் மன்றங்கள்

கடல் மேல் கட்டப் படும்

கடலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை

அழிந்து விட்ட கடலல்லாத உலகில் கேட்டுக் கொண்டே இருக்கும்

*****

No comments:

Post a Comment

உங்களுக்கும் இயந்திரங்களுக்குமான போராட்டம்!

உண்மைக்கும் போலிக்குமான போராட்டம் அல்லது உங்களுக்கும் இயந்திரங்களுக்குமான போராட்டம்! நமக்குத் தகவல்களை வாரி வழங்கியதே இந்தத் தகவல் தொழில...