1 Oct 2021

எல்லாம் அதிகம் தேவைப்படுகிற போது அது மட்டும் எப்படிக் குறையும்?

எல்லாம் அதிகம் தேவைப்படுகிற போது அது மட்டும் எப்படிக் குறையும்?

            திரும்ப திரும்ப ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளைப் பற்றி எழுதுவதற்குக் காரணம் நாம் திரும்ப திரும்ப ஒரே மாதிரியான தவறைச் செய்து கொண்டிருப்பதால்தான்.

            லிட்டர் தண்ணீரைப் பாட்டிலில் இருபது ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் நாம் நீரின் அருமையை உணராமல் இருப்பது அதிசயம்தான்.

            ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளைப் பொருத்த வரையில் நம்முடைய காலங்களில் நாம் ஒன்றைக் கூட உருவாக்கவில்லை. எல்லாம் நம் முன்னோர்கள் உருவாக்கிக் கொடுத்து விட்டுச் சென்றவைதான். முறைப்படி பார்த்தால் அது நம்முடைய சொத்தே கிடையாது. முன்னோர்களின் சொத்து சந்ததிகளுக்கே. நாம் என்னவோ அது நம்முடைய சொத்து என்பதாக நினைத்துக் கொண்டு சூதாடியைப் போல அந்தப் பாரம்பரிய சொத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம். ஏறத்தாழ பாதிக்கு மேல் அழித்து விட்டோம்.

            மக்கள் அதிகமானால் உணவு, உடை, உறைவிடம் எல்லாம் அதிகமாகத் தேவைப்படுகிறது. அப்படியானால் தண்ணீரும் அதிகமாகத்தானே தேவை. அப்படிப் பார்த்தால் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி போல நீர் நிலைகளிலும் பெருக்கம் ஏற்பட்டு ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் எல்லாம் இரண்டு மடங்காகியிருக்க வேண்டும் அல்லவா.

            கொடுமை என்னவென்றால் இருந்த ஆறுகள் பல சாக்கடைக் கால்வாய்களாக மாறி விட்டன. குளங்கள், குட்டைகள் அனைத்தும் முக்கால்வாசிக்கு மேலாகத் தூர்க்கப்பட்டு விட்டன. ஏரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அரசாங்க கட்டடங்கள் வரை ஏரிகள் மேல்தான் இருக்கின்றன.

            ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் இல்லாத இடங்களில் பறவைகளுக்கும் மரங்களுக்கும் என்ன வேலை என்பது போல அவற்றின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து விட்டன. அதனால்தான் தற்போது பறவைகளுக்குப் பதிலாகக் கொசுக்கள் பெருகுகின்றன, மரங்களுக்குப் பதிலாக மின்சார கம்பங்களும், காங்கிரீட் வகையறா தூண்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

            நீரில்லாத நிலத்தில் எங்கிருந்தோ வரும் குழாய்களில் தண்ணீர் ஊற்றுகிறது. நமக்கு நீர் தரும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகளை விட இடங்களை எல்லாம் சிமெண்டைக் கொட்டி காங்கிரீட் காடுகளாக்கும் ப்ளாட்டுகள் முக்கியமாகிப் போய் விட்டன.

            கிராமங்களில் செத்துப் போய் விட்டதைப் ‘ப்ளாட் ஆயிட்டாம்’, ‘மௌத் ஆயிட்டாம்’ன்னு சொல்றதுண்டு. அப்படித்தான் எத்தனையோ ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் ப்ளாட் ஆகி ப்ளாட்டுகள் ஆகி விட்டன.

            ஒவ்வொரு ஊரிலும் இருந்த குளங்களையும் குட்டைகளையும் தொலைத்து விட்டுத் தண்ணீர் லாரிகளின் வருகைக்காக நாம் இலவு காத்த கிளிகளாய்க் காத்துக் கொண்டிருக்கிறோம்.

            நாம் ஒன்றும் இனிமேல் புதிதாகக் குளங்களை வெட்டவோ, ஏரிகளை உருவாக்கவோ மாட்டோம். அதற்கு வாய்ப்பும் இல்லை. இருக்கின்ற குளங்களை, ஏரிகளையாவது கொஞ்சம் மெனக்கெட்டுப் பாதுகாக்கலாம் என்று தோன்றுகிறது.

            ஏரியை வெட்டுவதும் குளங்களை வெட்டுவதும் புண்ணியம் என்று நம் முன்னோர்கள் அறிந்தோ அறியாமல் சொல்லவில்லை. ஏதோ ஒரு தீர்க்க தரிசனத்தில்தான் சொல்லியிருக்கிறார்கள். காலம் போகிற போக்கைப் பார்த்தால் அதை விடவும் புண்ணியமான செயல் இந்தப் பூமியில் வேறெதுவும் இருக்க முடியாது. புண்ணியம் தேடுபவர்கள் குளம், குட்டைகளைத் தேடலாம். அதைச் சீரமைக்கலாம், பாதுகாப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம். ஏனென்றால் குளம், குட்டைகளைப் பாதுகாப்பது மனித குலத்தைப் பாதுகாப்பது போன்றது.

            தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். வாழும் மனிதர்களின் வயிற்றுக்கு எல்லாம் சோறிட வேண்டும் என்பதுதான் மகாகவியின் பெருங்கனவும். உணவுதான் மனிதர்களுக்கு எல்லாம் என்றால் உணவென்றால் என்ன என்பதைச் சங்கப் புலவர் இப்படித்தான் சொல்கிறார்,

“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே”           (புறநானூறு, 18 : 4)

ஆக நீர் நிலைகளைப் பாதுகாப்பது மனிதர்களுக்கு உணவிடுவதைப் போன்றதுதான் இல்லையா!

*****

No comments:

Post a Comment

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

திராவிடமா? தமிழ்த் தேசியமா? ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கத்திற்கான வலுவான அடிப்படை கருத்தியல்தான். அந்தக் கருத்தியல் அடிப்படையில்தான் தங்கள்...