1 Oct 2021

நாதப் பிரம்மம் எம்.எஸ்.விஸ்வநாதன்

நாதப் பிரம்மம் எம்.எஸ்.விஸ்வநாதன்

            அண்மைக் காலமாக இசையில் இசைந்தும் கரைந்தும் உறைந்தும் நிறைந்தும் கொண்டிருக்கிறது மனம். அன்றிலிருந்து இன்று வரை கேட்ட பாடல்களை நினைத்து நினைத்து அவற்றை மீண்டும் மீண்டும் கேட்டு குதூகலிக்கிறது. அந்த நினைவுகளையும் நினைவுகளோடு பறந்து வரும் பாடல்களையும் ரசித்து ருசிக்கும் போது வானத்தில் பறப்பது போலிருக்கிறது. அந்த அனுபவங்களைக் கொஞ்சம் பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் இந்தப் பத்தியை எழுதுகிறேன்.

            எம்.எஸ்.வி. என்பது எம்.எஸ். விஸ்வநாதன் என்ற பெயரின் சுருக்கம். எம்.எஸ்.வியைத் தெரியாத அறுபது, எழுபது, எண்பதுகளில் பிறந்தோர் இருக்க முடியாது. நான் எண்பதின் குழந்தை என்பதால் எம்.எஸ்.வி. எங்களின் ஆகப் பரிச்சயம். அப்போதெல்லாம் எங்கு ஒரு விஷேசம் நடந்தாலு எம்.எஸ்.வி.யின் பாடல் இல்லாமல் இருக்காது.

            “நான் ஆணையிட்டால்…” என்ற பாடலைப் பாடாத குழந்தைகளைப் அப்போது பார்க்க முடியாது. “இந்திய நாடு என் நாடு. இந்தியன் என்பது என் பேரு” என்ற பாடலையும் அவ்வளவு உற்சாகமாகப் பாடும் குழந்தைகள் வாழ்ந்த காலம் அது. “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”, “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி” என்ற பாடல்கள் இல்லாத ஆண்டு விழாக்களும் அப்போது கிடையாது.

            “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது” என்ற பாடலும் எம்.எஸ்.வி. ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்தப் பாடல்தான். விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து கொடுத்த பாடல்கள் காலத்தால் மறக்க முடியாதவை. அண்ணன் தம்பிகளாய்ப் பிறந்தவர்கள் முணுமுணுக்கும் “அண்ணன் என்னடா தம்பி என்னடா”, நல்ல மனதோடு இருந்து சோதனைகளை அனுபவிப்பவர்கள் முணுமுணுக்கும் “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது”, கடமையை நேசிக்கும் கண்ணியவான்கள் முணுமுணுக்கும் “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” ஆகிய பாடல்கள் இந்த இரட்டையர்கள் இசை பட்டு இசை (புகழ்) பெற்றவை.

            இந்த இரட்டையர்கள் சேர்ந்து இசையமைத்துத் திரையில் இடம் பெற்ற பாரதியார் மற்றும் பாரதிதாசனின் பாடல்களும் இருக்கின்றன. பாரதியின் “சிந்து நதியின் மிசை”, பாரதிதாசனின் “தமிழுக்கும் நிலவென்று பேர்” போன்ற பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்லாம்.

            மெல்லிசை மன்னர் என்ற பட்டம் எம்.எஸ்.வி.க்கு அவ்வளவு பொருத்தம். மக்கள் மனதிலே மன்னரைப் போலத்தான் அவர் இருந்தார்.

            எல்லாவற்றுக்கும் மேலாக நம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசை அமைத்ததும் எம்.எஸ்.வி.தான். மோகன ராகத்தில் அவர் இசையமைத்துக் கொடுத்த மெட்டில்தான் நாம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிக் கொண்டிருக்கிறோம்.

            கண்ணதாசனுக்கும் எம்.எஸ்.வி.க்கும் ஏகப் பொருத்தம் என்பார்கள். கண்ணதாசன் வரிகளுக்கு எம்.எஸ்.வி. இசையைப் போடுகிறாரா அல்லது எம்.எஸ்.வி.யின் இசைக்கு கண்ணதாசன் வரிகளைப் போடுகிறாரா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அப்படி இசையும் வரிகளும் கலந்து நம்மைக் கட்டிப் போடும்.

            “வாராய் என் தோழி வாராயோ” என்று அவர் இசையமைச்ச பாடலைக் கேக்காத கல்யாண விசேசங்களே அப்போ கெடையாது. அது வரைக்கும் கோரஸ் பாடிக் கொண்டு இருந்த எல்.ஆர். ஈஸ்வரி அம்மாவைப் பாடகராக உயர்த்தி வைத்து எம்.எஸ்.வி. பண்ணுன அற்புதம் அந்தப் பாட்டு. இந்தப் பாடலைக் கேட்க கீழே சொடுக்கவும்.


            “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாட்டு கேட்போரை அப்படி மயக்கும். அதுதான் வாணி ஜெயராம் எம்.எஸ்.வி.யின் இசையில பாடிய முதல் பாடல் என்று சொல்லுவார்கள். அந்தப் பாட்டு அப்படி மனசை மயக்கும் இப்போது வரைக்கும்.

            இவை எல்லாவற்றையும் தாண்டி “அல்லா அல்லா” என்ற பாட்டும் அதில் அவருடைய குரலும் அதுக்கு அவருடைய இசையும் எல்லாரையும் மதம் மறந்து பாடவும் கேட்கவும் வைக்கும்.

            “சொல்லத்தான் நினைக்கிறேன்” என்ற அவருடைய குரலில் அமைந்த இன்னொரு பாட்டைக் கேக்கும் போது அடடா அடடான்னு சொல்லிக் கொண்டே இருக்கலாம். அவருடைய இசையைத் தாண்டியும் அந்தப் பாடலில் அப்படி ஒரு மயக்கும் குரல். அந்தக் குரலில் அவர் என்னதை எதைச் சொல்ல நினைத்தாரோ அதைத்தாம் அவர் தன்னோட காலம் முழுதுக்கும் இசையாகக் கொடுத்தார் என்று நினைக்கிறேன்.

            “எழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்” என்கிற பாட்டும் அவர் இசையமைத்ததுதான். அந்தப் பாட்டு வரியைத் தன்னோட இசையால் நிரூபித்தவர் என்று அவரைச் சொல்ல வேண்டும்.

            “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்கிற புகழ் பெற்ற பாடலும் எம்.எஸ்.வி. இசையில் உருவான பாடல்தான்.

            இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். காசு, பணம் என்று பார்க்காமல் இசையை நேசித்து இசையாக மட்டும் வாழ்ந்தவர். இசையைத் தவிர வேறு வெளி உலகம் தெரியாத மனிதராக வாழ்ந்தவர் என்று அவரைப் பற்றிப் பலரும் சொல்வார்கள். இசையில் மேதை என்றாலும் அவர் ஒரு குழந்தையைப் போல வாழ்ந்தவர் என்றும் அவரைப் பற்றிச் சொல்வார்கள்.  அந்த வகையில் “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று” என்று அவர் இசையமைத்த பாடலும் அவருக்கு ஏகமாய்ப் பொருந்தும். அந்தப் பாடலுக்கு ஏற்றாற் போல குழந்தையாக இசை உலகின் தெய்வமாக அவர் இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

            எம்.எஸ்.வி.யின் இசையை இப்படி ஒரு பத்திக்குள் சுருக்கி விட முடியாது. வானத்தையும் கடலையும் படம் பிடித்தால் முழு வானத்தையும் முழு கடலையும் அதில் பிடிக்க முடியாது என்பது போலத்தான் இந்தப் பத்தியும். நான் பார்த்த வானத்தைக் கடலை அந்தப் படத்தில் காட்டலாம் என்பது போலத்தான் இந்தப் பத்தியையும் நீங்கள் கொள்ள வேண்டும். படத்தைத் தாண்டிப் பார்க்க வேண்டிய வானமும் கடலும் விரிந்து கிடக்கிறது என்பது போலத்தான் எம்.எஸ்.வி.யின் இசையும். நீங்களும் எம்.எஸ்.வி.யின் இசையுடனான உங்கள் அனுபவத்தைப் பதிவு செய்யும் போது ஓரளவு அதை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தலாம்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...