9 Sept 2021

பெண்ணே பெருந்தெய்வம்

பெண்ணே பெருந்தெய்வம்

            புலியைக் கண்டு பயந்தவளா இவள்? கையில் இருப்பது வாளில்லை, முறம் என்று தெரிந்தும் அதையே வாளாக நினைத்து அடித்துத் துரத்தியவள். அவளது நினைப்பினில் முறத்திற்கு வாளின் வலிமை வந்து விடுகிறது. அந்த வலிமை அவளது வாழ்வைப் புதிய அர்த்தத்தோடு எழுதிக் காட்டுகிறது.

            எத்தனை பெண்கள்! எத்தனை பெண்கள்! துணிவோடு வாழ்வை எதிர்கொள்ளும் பெண்கள் வானில் தோன்றும் வானவில்லைப் போல நம்மை அதிசயப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அபூர்வமானவர்கள் அல்ல. இந்த மரபின் தொடர்ச்சி. அவர்கள் அப்படித்தான் அபூர்வத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பார்கள். இதுநாள் வரை உள்ளுக்குள் இருந்த அந்த மரபின் தொடர்ச்சியான வீரத்தை ஒருநாள் வெளிப்படுத்தும் போது அதிசயத்தைக் காட்டுவதைப் போல வியப்பின் உச்சிக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.

            எழுத்தறிவு ஏதும் இல்லாமல் பட்டறிவால் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு குடும்பத்தையும் நிலைநிறுத்தும் பெண்களைக் காணும் போது அவர்களை வணங்கத் தோன்றுகிறது. அந்த அசாத்திய பொறுமையும் திண்மையும் ஆண்களுக்கு வாய்ப்பதில்லை. அதனைக் கற்பென்னும் திண்மை என்று திருவள்ளுவரும் குறிப்பிடுகிறார். அதனாலேயே பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற வினாவையும் எழுப்பி நம் புருவத்தை உயர்த்தச் செய்கிறார்.

            ஏதோ ஓர் உந்து சக்தி பெண்களை மேலெழுப்புகிறது. அந்தச் சக்தியால் அவர்கள் சுற்றத்தையும் சமூகத்தையும் காத்து நிற்கிறார்கள். அது இந்தச் சமூகத்திற்குத் தெரிகிறது. தெரிந்ததன் விளைவுதான் ஊருக்கு ஊர் காளியம்மனையும், பொன்னியம்மனையும், செல்லியம்மனையும், மாரியம்மனையும் வழிபடும் முறையை உருவாக்கியிருக்கிறது.

சிறுதெய்வ வழிபாட்டில் ஆணை விட பெண்ணுக்கே ஆதிக்கம். அங்கு பெண்ணே பெருந்தெய்வம். பம்மாத்துகள் நிறைந்ததாக இருந்தாலும் பெருந்தெய்வ வழிபாட்டிலும் விட்டுக் கொடுக்காமல் தாயராக அவர்களுக்கு ஒரு சந்நிதியைக் கொடுக்க வேண்டியதாக இருப்பதற்கு பெண்களது சக்தியே காரணம்.

            பெண்ணைத் தெய்வமாக்கி வழிபட வேண்டும் என்ற சிந்தனை மிக உயர்வானது. உலகெங்கிலும் பெண் தெய்வங்களுக்கு இருக்கும் ஆலயங்களைக் கணக்கிலிட்டால் தமிழகத்தில் இருக்கும் ஆலயங்கள் அதிகமாக இருக்கக் கூடும். அது நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கிடைத்த சிறப்பு. அவர்களின் திண்மையைப் போற்றும் மரபு.

            ஆண் என்பதற்காக எவ்வளவு வலிமை இருந்தாலும், சமூகத்தின் ஆதிக்க சக்தியாக இருந்தாலும் பெண்ணிடம் கட்டுப்பட வேண்டும், அவளுக்கொரு துன்பம் என்றால் அவளைக் காத்து நிற்க வேண்டும் என்ற உணர்வை இந்தத் தமிழ் நிலம் உருவாக்கியிருக்கிறதே. அதை எண்ணும் போது பெருமிதம் வரத்தான் செய்கிறது.

            எல்லாவற்றையும் விட அண்மையில் ஆண் சமூகத்தின் பெரும்பான்மை குடிகாரச் சமூகமாய் மாறி நிற்கும் நிலையில் தோள் கொடுக்க துணையில்லாத நிலையிலும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தன் உழைப்பாலும் மனத்திண்மையாலும் தாங்கி நிற்கும் பெண்களை எண்ணும் போதெல்லாம் அவர்களை உச்சி மேல் வைத்துப் புகழத்தான் தோன்றுகிறது. இந்தத் தாய் நிலம், தமிழ் நிலம் அப்படியொரு சமூகக் காப்பினைப் பெண்கள் மூலம் இந்தச் சமூகத்திற்காகச் செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியுமா என்ன?!

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...