மனதோடு போடும் குஸ்தி
மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பார்கள். அந்த மனமே ஒரு
குப்பை என்பதுதான் என் அபிப்ராயம். ஆழமான யோசனைக்குப் பிறகு நீங்கள் அந்த முடிவுக்குத்தான்
வந்தாக வேண்டும்.
மனம் என்பது நாமே உருவாக்கிக் கொண்டது. அல்லது நமக்குள் உருவாக்கப்பட்டது.
நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று உங்கள் மனதால் நீங்கள் யோசித்தால் நீங்கள் உருவாக்கப்பட்ட
மனதால் வார்க்கப்பட்டு இருக்கிறீர்கள். நான் இப்படி இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும்
என்றால் உங்களுக்குள் நீங்கள் உருவாக்கிய மனதில் இருக்கிறீர்கள்.
மனதை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும், அப்படி மாற்றிக் கொள்ள
வேண்டும் என்று பல யோசனைகளைக் கூறுவார்கள். என்னைக் கேட்டால் மனதைப் பொருத்த வரையில்
நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்றுதான் கூறுவேன். ஏனென்றால் மனமே பல விதமாக மாறக்
கூடியதுதான். மாறாமல் இருப்பது அதற்கு அலுப்பு தரும் விசயம். நீங்கள் மாற மாட்டேன்
என்று கங்கணம் கட்டிக் கொண்டால் உங்களை மாற்றிப் போட்டால்தான் மனதால் இயைபாக இருக்க
முடியும். இதனால் மனதை நீங்கள் கிறுக்குப் பிடித்த ஒன்று குறிப்பிடலாம். ஒரு வித கிறுக்கின்
கிறக்கத்தில் இயங்கினால்தான் மனம் இயல்பாக இருக்கும் என்பது ஒரு வேதனையான உண்மை.
இப்படியான வேதனைகளுக்கு எல்லாம் தீர்வில்லையா என்றால் நீங்கள்
அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் இருப்பதுதான் தீர்வு. அதெப்படி யோசிக்காமல் இருப்பது
என்றால்… அதை விளக்குவது சிரமம். நீங்கள் யோசிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கலாம்.
ஆனால் உங்கள் மனம் உங்களை விடாது. அதற்காக அந்த முயற்சியை விட்டு விட முடியாது. முயற்சியின்
ஒரு கட்டத்தில் உங்களுக்கும் உங்கள் மனதுக்குமான உறவு அறுந்து படும். அதுவரை இந்தப்
பூமியில் பிறந்த யாவரும் மனதோடு குஸ்திப் போட பிறந்தவர்களே.
*****
No comments:
Post a Comment