10 Sept 2021

பேசினால் பிரச்சனைகள் தீருமா?

பேசினால் பிரச்சனைகள் தீருமா?

            பேசினால் எல்லா பிரச்சனைகளும் சரியாகி விடும் என்கிறார்கள். எனக்கென்னவோ அதில் அவ்வளவாக உடன்பாடில்லை. பேசப் பேச பிரச்சனைகள் வளர்ந்த கதைகள் அநேகம் என் கண் முன்னே நிற்பதால் உண்டாகும் உடன்பாடு மறுப்பு அது.

            நான் கேட்ட வகையில் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காட்டுப் பேச்சுகள் அவர்களின் தன்முனைப்பைப் பேசுவதுதாகத்தான் இருக்கின்றன. தன்முனைப்பைத் தங்களது மனமாக நினைத்துப் பேசிக் கொண்டு இருப்பார்கள். பொதுவான அனுபவத்தின்படி பார்க்கும் போது யாருக்கும் யாருடைய தன்முனைப்பும் பிடிப்பதில்லை. தன்முனைப்பு உடையவர்கள் பேசுவதைத்தான் விரும்புகிறார்களே தவிர காது கொடுத்து கேட்பதை விரும்ப மாட்டார்கள்.

            என்னிடம் பலரும் பேசிய அனுபவத்தை வைத்துச் சொன்னால் மணிக் கணக்கில் என்னிடம் பேசுவார்கள். நான் அவர்களிடம் நிமிடக் கணக்கில் அதுவும் ஒரு சில நிமிட கணக்கில்தான் பேசியிருப்பேன். அந்த ஒரு சில நிமிடப் பேச்சும் ‘ம்’, ‘அப்படியா’, ‘சொல்லுங்க’, ‘ஏன் இப்படி ஆச்சு?’ என டெம்ப்ளேட் வடிவத்திற்குள் இருக்கும். பொறுமையைச் சோதிக்கும் வகையில் ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் வரை பேசியவர்களைப் பார்த்திருக்கிறேன்.

            ஒருவரே தொடர்ந்து பேசுவதைக் கேட்க மாபெரும் சகிப்புத்தன்மை வேண்டும். அந்தச் சகிப்புத்தன்மை இல்லாமல் முகம் சுளித்துப் போனவர்கள் அதிகம். எனக்கு அப்படி முகம் சுளித்து விடத் தோன்றாது. பேசியதைப் பேசினாலும் ஒவ்வொரு பேச்சையும் கேட்கும் போது எனக்குத் தோன்றும் சுவாரசியம் அன்றிலிருந்து இன்று வரை அடங்கவில்லை. அதனால் எவ்வளவு பேசினாலும் கேட்டுக் கொண்டிருப்பேன்.

            பேசியதை எல்லாம் பேசி விட்டு ‘நீங்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும். சொல்லுங்க.’ என்று சொல்லி விட்டு என்னை எதுவும் சொல்ல விடாமல் தொடர்ந்து பேசி விட்டு அதற்குப் பின்பும் என்னிடம் எதுவும் கேட்காமல் எழுந்து சென்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது இவர்கள் பேச்சைக் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் குறைத்துக் கொள்ளுங்கள் வாய் விட்டுச் சொன்னதில்லை. சொன்னால் மறுமுறை முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார்கள்.

            பிற்பாடு எனக்குக் கிடைத்த விசித்திரமான செய்தியிலிருந்து நான் மேலே குறிப்பிட்டதிலிருந்து ஒரு மாறுபட்ட முடிவுக்கும் வர நேர்ந்தது. அது என்னவென்றால் என்னிடம் அதிகம் பேசியவர்கள் எல்லாம் என்னிடம் மட்டும் அதிகம் பேசியிருக்கிறார்கள் என்பதும் பிறரிடம் பேசியதே இல்லை என்பதும்தான் அது. இதிலும் மற்றொரு பக்கம் இருக்கிறது. ஒருவரின் பேச்சை எல்லாரும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதுதான். நான்கு பேர் முகம் சுளித்து விட்டால் அதற்கப்புறம் ஐந்தாவதாக ஒரு நபரிடம் பேசிப் பார்க்கும் மனநிலை அடியோடு போய் விடும். ஆக இதன் ஒட்டு மொத்த அடிப்படையில் பேசினால் பிரச்சனை சரியாகி விடும் என்று கூறி விட முடியாது. நாம் எவ்வளவு பேச வேண்டும், எதைப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டுதான் பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் அபாயங்கள் கம்மியாக இருக்கும். இல்லையென்றால்பேச்சினால் உண்டாகும் அபாயங்களைச் சமாளிக்க முடியாது. என்னிடம் அப்படியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். தனிப்பட்ட முறையில் நான் ஒவ்வொருவரின் பேச்சையும் அவ்வளவு ரசிக்கிறேன். என்ன ஒரு குறை என்றால் ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணி நேரம்தான் இருக்கிறது. நான் நாற்பத்தெட்டு மணி நேரம் கேட்க தயாராக இருக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...