23 Sept 2021

வாழ்க்கை ஒரு வளைகோடு

வாழ்க்கை ஒரு வளைகோடு

            எஸ்.கே.வுக்குச் சொன்னபடி நடக்கவில்லை என்றால் பைத்தியமே பிடித்து விடும் போலிருக்கிறது. சொன்னது சொன்னபடி நடப்பதற்கு மற்றவர்கள் ஒத்துழைப்பும் அவசியம். பெரும்பாலும் அந்த ஒத்துழைப்பு எஸ்.கே.வுக்குக் கிடைப்பதில்லை.

அவரவர்களும் மனம் போன போக்கில்தான் நடக்க இஷ்டப்படுகிறார்கள். ஒன்றைச் சொல்லி அதன்படி செய்வதென்றால் அது அவர்களுக்குப் பிடித்தமில்லாமல் போய் விடுகிறது. அதனாலேயே எதையாவது ஒன்றைச் சொல்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் எஸ்.கே.வை வந்து சூழ்ந்து விடுகிறது. இதனால் எஸ்.கே.வுக்குக் கோபம் கோபமாக வருகிறது. அதென்ன நேரத்திற்கு வரும் பேருந்தா? வந்த உடன் ஏறிச் செல்வதற்கு.

கோபம் என்றால் அளவிட முடியாத கோபம். அந்தக் கோபத்தில் எதைச் செய்தாலும் சரிதான் என்று தோன்றுகிறது. இப்படி எஸ்.கே.வைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவருக்கு ஒருங்கிணைந்து செயல்படுவர்களாக இல்லாமல் இருந்தால் அவர் என்ன செய்ய முடியும்? இதனால் எஸ்.கே. ஒரு புதிர் போல அவர்களுக்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியவராக இருக்கிறார். இதனால் ஏற்படும் இடர்கள் சொல்லும் தரமன்று.

எதையும் திட்டமிட்டால் செய்ய முடியாதோ என்ற மனநிலையைக் கூட எஸ்.கே. அடைந்திருக்கிறார். அந்த அளவுக்குத் திட்டமிடலை அவர்கள் சர்வ நாசம் செய்து விடுகிறார்கள்.

என்ன செய்வார் எஸ்.கே.? இதனால் சமயங்களில் அவர் மனமொடிந்துப் போய் விடுகிறார். எதிர்மறை உணர்வு கொண்டவராக மாறி விடுகிறார். எஸ்.கே.வுக்கு நன்றாகத் தெரியும். அனைவரோடு இணைந்தாற்போல் திட்டமிடக் கூடாது என்று. காரணம் ஒத்து வராமைத்தான். ஆனால் பொது காரியங்களில் இதை விட்டால் வேறு என்ன வழியிருக்கிறது?

இனிமேல் இந்தத் திட்டமிடல்கள் வேண்டாம் என்று கூட எஸ்.கே நினைத்திருக்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் மனம் போன போக்கில் நடக்கக் கூடியவர்கள். அவரவர் மனம் இசைந்தால்தான் அவரவரால் செய்ய முடியும்.

அவரவருடைய மனமும் இயல்பான வழக்கமான எதற்கும் இசைவதாகத் தெரியவில்லை. அது ஒரு விநோதமான வகையில் இசைவதாக உள்ளது. அதற்கு எஸ்.கே. என்ன செய்ய முடியும்? அதனதனோடு முரண்டுபிடித்து இனி முரண்பட்டு வருத்தத்தைச் சுமந்து கொண்டிருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

சரியாக இருக்க வேண்டும் என நினைப்பதுவே மன அழுத்தத்தை உருவாக்க கூடியதாக இருக்கும் போலிருக்கிறது என்று எஸ்.கே. சமீப காலமாக நினைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையும் அதுவாகத்தான் இருக்கிறது. சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்து நினைத்துதான் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் எஸ்.கே.

யாருமே சரியாக இருக்க விரும்பாத இந்தச் சமுதாயத்தில் எஸ்.கே. மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்? அல்லது சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? இது போன்ற சமூகத்தில் எல்லாம் அபத்தமாகத்தான் முடியும். அப்படித்தான் முடிகிறது. என்ன செய்வதென்றே பல நேரங்களில் புரிவதில்லை எஸ்.கே.வுக்கு.

            குழப்ப நிலையைப் பயன்படுத்தி ஆளாளுக்கு எஸ்.கே.வை அநியாயத்துக்குக் குழப்பி விடுகிறார்கள். அதாவது கண்டபடி யோசித்து, முன்னுக்கு முரணாகப் பேசிப் பல விதங்களில் குழப்பி விடுகிறார்கள். ஆனால் இதற்கிடையில் சரியானவர் போன்ற தோற்றத்தையும் உருவாக்கி விடுகிறார்கள் அந்தக் குழப்பவாதிகள். மிகவும் சிக்கலான மனிதர்கள்தான் அவர்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் எஸ்.கே. வாழ் சமூகத்தைச் சுற்றி எண்ணிறந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

            எஸ்.கே.வுக்கு எதற்கெடுத்தாலும் பேசிக் கொண்டிருப்பது ஒத்து வராது. அப்படிப் பேசிக் கொண்டிருப்பதில் அதிகம் ஈடுபடுத்தினால் எஸ்.கே.வுக்கு எரிச்சல்தானே ஏற்படும். அவருக்கு ஒத்து வருவது செயல்தான். செயலுக்கு உகந்தவாறுதான் பேச்சு இருக்க வேண்டும் என்று பிரியப்படுவார் அவர். ஆனால் அவரைச் சுற்றி செயலின்மையில் தள்ளும் பேச்சுகளாக நிறைந்து கிடக்கின்றன. இந்தப் பேச்சுகளை அவர் எதிர்க்கத்தான செய்கிறார். இந்தப் பேச்சை எதிர்க்கப் போய் அந்தப் பேச்சை பேசிய மனிதர்களையும் எதிர்ப்பது போன்ற சூழ்நிலைகள் அவருக்கு உண்டாகி விடுகின்றன.

எல்லா மனிதர்களும் எதிரியாகி விடும் போது அவசரப்பட்டு பல விசயங்களில் முடிவெடுத்து விடுகிறேனோ என்னவோ என்று கூட நினைத்து வேதனைப்படுகிறார் எஸ்.கே. முடிவெடுப்பது எல்லாம் தப்பாகவே சென்று முடிந்தால் அப்படி ஒரு நினைப்புதான் ஏற்படும். ஆனால் ஏதேனும் ஒரு முடிவெடுக்காமல் எதைச் செய்வது? அதுவும் வேண்டியதாக இருக்கிறது. அவசரமோ, நிதானமோ ஒரு முடிவு தேவைத்தான் படுகிறது.

முடிவெடுத்து ஒன்றை நிகழ்த்த முடியாமல் போகும் போது அதற்கான மன உளைச்சலை அனுபவிக்க வேண்டியதாகவும் ஆகிறது. எல்லாம் சரியாக நடந்திருந்தால் எஸ்.கே.வுக்கு எந்த விதமான மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை.

சரியாக நடக்காத போது அதற்கு எதிரான நடவடிக்கையை எடுக்கவும் எஸ்.கே.வால் முடிவதில்லை. அது ஒரு சிக்கலாக இருக்கிறது. எஸ்.கே.வை எல்லாரும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் யாரும் எஸ்.கே.வைச் சரியாக இருக்க விட மாட்டேன்கிறார்கள். மிகப்பெரிய இக்கட்டான  சூழ்நிலைதான் எஸ்.கே.வுக்கு. இதனால் மனசு நொந்துப் போகிறது எஸ்.கே.வுக்குப் பல நேரங்களில்.

இந்த மனிதர்கள் இப்படி அப்படி என்று முரண்பாடாக நடந்து கொண்டு எஸ்.கே.வை மன அழுத்தம் கொள்ள செய்து விடுகிறார்கள். எஸ்.கே.வால் முடிவதில்லை. அதாவது இவர்களை எதிர்கொள்ளவும் முடியவில்லை. இவர்களைச் சகித்துக் கொள்ளவும் முடியவில்லை. இவர்களோடு இருக்கவும் முடியவில்லை. எல்லா இடங்களும் முரண்பாடாகப் போய் முடிகின்றன.

இயல்பாக எஸ்.கே. தான் நினைத்த அளவுக்கு எதையும் செய்ய முடிவதில்லை என்ற மனச்சோர்விலும் மன உளைச்சலிலும் தாங்க முடியாமல் தவிக்கிறார். இதில் இது போன்ற மன அழுத்தங்களும் சேர்ந்தால் எஸ்.கே. என்ன செய்வார்?

நிஜமாகவே சொல்வதென்றால் இது போன்ற நிலைகளை எஸ்.கே.வால் தாங்க முடிவதில்லை. எஸ்.கே.வைப் போட்டு இவர்கள் டார்ச்சர் செய்வதைப் போல இருக்கிறது. இந்த டார்ச்சர் தாங்க முடியாமல் எஸ்.கே. தன்னைத் தானே டார்ச்சர் செய்து கொள்கிறார். நிலைமை மிகவும் விபரீதமாக இருக்கிறது. அப்படியும் நடக்குமோ என்றால் நடக்கிறதே.

என்ன செய்வதோ? என்ன சொல்வதோ? எதுவும் முடிவதில்லை. எல்லாம் தன் கெட்ட நேரம் என்று எஸ்.கே. நினைத்துக் கொள்வதோ? சரியாக இருக்க நினைப்பது ஒரு பாவமோ என்னவோ? எல்லாவற்றையும் விட்டு விட்டுக் கிளம்பி எங்கேயாவது ஓடிப் போய் விடலாமா என்று கூட எஸ்.கே.வுக்குத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு வெறுப்பாக உள்ளது.

முடிவில் எஸ்.கே.வுக்கு இப்படி ஒரு தெளிவு கிடைத்தாற் போல் இருக்கிறது. “எல்லாம் அதுவாக வருவதுதான். ஆனால் அதற்கான முயற்சி தேவைப்படும். அது இல்லையென்றால் நகர்வுகள் இருக்காது. அதுவாக வருகிறபடி வரட்டும். காத்திருப்போம் என்று நினைத்தால் எதுவும் நடக்காது. மன உளைச்சல் மன அழுத்தம் என்று பார்க்காது அப்போது எதையாவது செய்து தொலைய வேண்டியதாகத்தான் இருக்கிறது. அப்போது நிலைமை குழப்பமாகவும் எரிச்சல் தருவதாகவும் இருந்தாலும் பிறகு நிலைமை சுமூகமாக மாறினால் மகிழ்ச்சி வந்து விடுகிறது. எல்லாவற்றையும் சரியாக எதிர்பார்க்கவும் முடியாது, சரியாக நிகழ்த்த வைக்காமலும் இருக்க முடியாது. தப்புத் தப்பாகப் போகும் நிலைமைகளைத் தடுக்கவும் முடியாது. அதுதான் நிலைமை. நிலைமைக்கேற்றவாறு மனதிடம் சமாதானமாகவும் பிறரிடம் சாதுர்யமாக நடந்து கொண்டுதான் ஆக வேண்டும். காகிததில்தான் நேர்கோடு என்பதெல்லாம் சாத்தியம். வாழ்க்கையில் எல்லாம் வளைகோடுதான். கோணல் கோடு என்று சொன்னாலும் பிழையில்லை.”

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...