22 Sept 2021

தலைவாவும் தலைவியும்

தலைவாவும் தலைவியும்

            பயோபிக் படங்கள் ஒரு நல்ல முயற்சி. சாவித்திரியின் வாழ்க்கையைச் சொல்லும் மகாநடியைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கையைச் சொல்லும் ‘தலைவி’ தற்போது வந்துள்ளது. இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். தலைவர் என்ற தலைப்பில் அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது என்று சொல்லலாம்.

            ஏ.எல். விஜய் முன்பு இயக்கியது ஆணைத் தலைவராக வைத்து என்றால் தற்போது இயக்கியுள்ளது பெண்ணைத் தலைவராக வைத்து. முந்தைய படம் விஜயை முதலமைச்சராக நிலைநிறுத்துவதற்கு ஏற்ப எடுக்கப்பட்ட படம் என்றால் தற்போதைய படம் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

            இதில் கவனிக்க வேண்டிய அம்சம் இன்னொன்றும் உள்ளது. அவரது இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘தலைவா’ படம் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதுதான் வெளியிட முடியாமல் சிரமங்களைச் சந்தித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவின் படத்தை எடுத்து ‘தலைவி’ என்ற பெயரில் தற்போது வெளியிட்டுள்ளார்.

            விஜயை வைத்து ஏ.எல். விஜய் இயக்கிய ‘தலைவா’ படத்தில் நாயகன் படத்தின் தாக்கம் நன்றாகத் தெரியும். நாயகன் படத்தில் காட்பாதர் என்ற படத்தின் பாதிப்பு தெரியும். இது போன்ற தாக்கங்கள், பாதிப்புகள் தெரியக் கூடாது என்றவகையில் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஏ.எல். விஜய் எடுத்துக் கொண்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

ஜெயலலிதாவுக்கு இப்படி பயோபிக்காக வந்துள்ள இப்படம் அவரது பிம்பத்தின் மேல் இருக்கும் கவர்ச்சியைக் காட்டுகிறது. முறைப்படி பார்த்தால் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு படம் வந்திருக்க வேண்டும். மணிரத்தினம் ‘இருவர்’ என்ற படம் மூலமாக எம்.ஜி.ஆரையும் கலைஞரையும் திரைப்பதிவாகக் காட்ட முனைந்திருப்பார். மகாபாரத்த்தின் தழுவலாக தளபதி என்ற படமும், ராமாயணத்தின் தழுவலாக ராவணன் படமும் அமைந்தது போல ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில்தான் அப்படங்களை அமைத்திருப்பார் மணிரத்னம். தலைவி படம் ஜெயலலிதாவின் பயோபிக் எனத் தெரியும் அளவில் இருவர் படத்தைக் கொள்ள முடியாது.

தலைவி படத்தில் எம்.ஜி.ஆரும் இருக்கிறார்.எம்.ஜி.ஆரின் வாழ்க்கை தனியொரு படமாக எடுக்கப்பட வேண்டும். அவரது ஆளுமையும் கவர்ச்சியும் திரைப்பதிவாக அறியப்பட வேண்டியதுதாம்.

            தமிழ்த் திரைப்பட வரலாற்றைக் காண்கையில் கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், காமராசர், பெரியார், பாரதியார் போன்றோரின் வாழ்க்கை வரலாறு படமாக நீண்ட காலம் பிடித்தது. ஜெயலலிதாவின் படம் அவர் இறந்த குறுகிய ஆண்டுகளுக்குள்ளாகவே வெளிவந்து விட்டது. இது ஒரு வகை புதிய நிலைதான். வெகு குறுகிய காலத்தில் இப்படி அரசியல் பிரபலங்களுக்குப் படம் வருவதைப் பார்த்திராத தமிழகம் இதை ஆச்சரியத்துடன்தான் பார்க்கிறது. கூடிய விரைவில் மற்ற தலைவர்களும் திரையில் பயோபிக்காக வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...