வானத்தைப் போலல்லாத வாழ்க்கை
அடுத்து என்ன நடக்கும் என்கிறாய்
வானம் வானை எப்படிக் கலைத்துப் போடும்
என்பதை வானமே அறியும்
கோபப்பட்டும் பேசலாம்
அன்பாகக் கொஞ்சலாம்
கோபத்தை மறைத்து வேஷம் போடலாம்
நிர்சலனமாய் கிடக்கும் வானத்தை
யார் கவனிக்கிறார்கள்
இடியும் மின்னலும் வானத்தை நினைக்க
வைக்கிறது
எப்போதே வரும் வானவில் ரசிக்க வைக்கிறது
மற்றபடி நிலா காய்ந்தும் நட்சத்திரங்கள்
உதிர்ந்தும் விடுகின்றன
ஏதும் செய்யாத மௌனியாகி விடுவதில்
தியானி ஆகி விடுவதில் விருப்பமில்லை
என்பதால்
மனதைக் கலைத்துக் கலைத்து விளையாடிப்
பார்க்கிறேன்
சீட்டுக் கட்டைக் கலைத்து விளையாடுவது
போல்
லாபமும் இருக்கலாம் நட்டமும் இருக்கலாம்
இரண்டும் கலந்த வாழ்க்கைக்கு
இரவும் பகலும் போல கால பிரக்ஞை கிடையாது
தன்னைக் கலைத்துப் போட்டுக் கொண்டு
ஒழுங்கில் இயங்கும் வானம் போலல்லாது
என்னை ஒழுங்கின்மையின் ஒழுங்கில் வைத்து
வாழ்க்கையைக் கலைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன்
கோபுரம் ஏறுவதோ குழியில் விழுவதோ விசயமில்லை
ஏறுவதும் விழுவதும் சாசுவத விளையாட்டுகள்
விளையாட்டின் சுகம் இருக்கும் வரை
காயமோ வலியோ கண்ணுக்கு தெரிவதாயில்லை
எதுவும்
*****
No comments:
Post a Comment