7 Sept 2021

உணவு முறை மாறினால் மரங்கள் வளரும்

உணவு முறை மாறினால் மரங்கள் வளரும்

            நமது உணவு முறைக்கும் மரங்கள் வளர்வதற்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கிறது. நமது உணவு முறை மாறினால் மரங்கள் சூழ் உலகாக பூமி மாறி விடும். எப்படி என்கிறீர்களா? இதை முழுமையாகப் படித்தால் முடிவில் அது எப்படி என்பது உங்களுக்குப் புரிய வரும். அதற்கு முன் நாம் சில சங்கதிகளை மரங்கள் பற்றி மட்டும் அல்லாமல் நமது உணவு முறை மற்றும் உடல் நலத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

            சரியான உணவு என்பது சரிவிகித உணவு என்று பள்ளிக்கூடம் சொல்லிக் கொடுத்த சங்கதி. ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் நம் படிப்புக்கும் நம் வாழ்க்கைக்கும் எப்போதும் காத தூரம் இடைவெளி இருக்கும் இல்லையா? நாம் உண்ணும் உணவு ஒரே ஒரு விகித உணவுதாம். பெரும்பாலும் தானிய உணவுதாம்.

            வயிற்றுக்குச் சோறிட வேண்டும் என்று மகாகவி பாரதியின் வரியை அப்படியே பிடித்துக் கொண்டவர்கள் போல் சோறுக்கான நெல் தானியம் மட்டுமே இங்கு பல பேரின் உணவாக இருக்கிறது. இதில் கொஞ்சம் அதிகப்படியாகப் போனால் இட்டிலி, தோசை என்று பார்த்தால் அதுவும் நெல்லும் உளுந்தும் கலந்த தானிய வகையறாக்களாகவே அமைகின்றன.

            குழம்பில் அஞ்சறைப் பெட்டி வகையறாக்களோடு உப்பும் உரைப்புமாக சாம்பார் என்றால் பருப்பும் அத்துடன் கொஞ்சம் காய்கறிகளும் சேர்கின்றன. இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாம் உண்ணும் உணவில் தானிய உணவுதாம் மிகுதி என்று சொல்வதில் பொருட்பிழையோ, புள்ளிவிவரப் பிழையோ இருக்க வாய்ப்பில்லை என்று அடித்துச் சொல்லலாம். பிறகெப்படி நம் மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருக்கும்? போதிய ஊட்டச்சத்து இருக்கும்?என்று நாம் கேள்விகளை அடுக்கினால் நமது நோய்களின் தன்மையை நாமே உணர்ந்து கொள்ளலாம்.

            நம் மக்கள் உண்ணும் அடிப்படை உணவே அவர்களின் உடல்நலத்தை ஆட்டம் காண செய்யக் கூடியது. நம் மக்கள் சுவையாக உண்கிறார்கள் அல்லது சத்தற்ற உணவை உண்கிறார்கள் என்பது மாபெரும் உண்மை.

            நாம் அடுத்ததாக ஓர் உண்மையைப் புரிந்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது. குறைந்த செலவில் வயிற்றை அடைக்க தானிய உணவு வசதியாக இருக்கிறது. தானிய உணவே உணவு எனும் கருத்தாக்கமும் மனதில் ஊறிக் கிடக்கிறது. இதை நீங்கள் ஓர் எளிய சோதனையில் மூலம் அறிந்து கொள்ள முடியும். மதிய உணவு என்றால் டப்பாவில் அடைத்த தானிய உணவைக் கொண்டு வருபவர்களைத்தான் பார்க்க முடியும். பழங்களை உணவாக எடுத்துக் கொண்டு வருபவர்களைப் பார்க்க முடியாது.

            நமது குழம்புகள் அதை விட மோசம். பாயாசத்தில் கிடக்கும் முந்திரிகளைத் தேடுவதைப் போல காய்கறிகளைத் தேட வேண்டியிருக்கும். உரைப்பும் உப்புமாக ஒன்றை வைத்து விட்டால் அதில் காய்கறி இருக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லாமல் அதுவே குழம்பு என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.

            மூன்று வேளை உணவையும் தானிய உணவாக எடுத்துக் கொள்ளும் நாம் அதற்கிடையில் சிற்றுண்டிகளாக எண்ணெயில் பொறித்த வகையறாக்களைத்தான் எடுத்துக் கொள்கிறோம். சிற்றுண்டிகளையாவது பழங்களாகவோ, நிலக்கடலை, பட்டாணி போன்ற பருப்பு வகைகளாக எடுத்துக் கொள்ளலாம் என்றால் எடுத்துக் கொள்ள மாட்டோம்.

            ஒரு வாரம் நாம் தின்பதைப் பட்டியல் போட்டால் தெரியும், நாம் வெந்ததைத் தின்று விதி வந்தால் போய் சேர்கிறோம் என்பது. அப்படியானால் என்ன செய்ய வேண்டும் என்றால் வேகாததையும் தின்ன வேண்டும். வேகாததில் பழங்கள், கொட்டைகள், பச்சை காய்கறிகள் எல்லாம் வரும். வெந்ததைத் தின்பதில் நாம் காட்டும் பேரார்வத்தை வேகாததைத் தின்பதில் நாம் காட்டுவதில்லை.

            மூன்று வேளை உணவை ஒரு வேளை தானிய உணவு, ஒரு வேளை பழ உணவு, ஒரு வேளை பருப்பு வகையோடு காய்கறி உணவு என்று கூட வகைபடுத்திக் கொள்ளலாம். இப்படிச் செய்து கொள்ளும் போது மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவு பழமாக அமைவதால் சமைக்கும் வேலையும் அதற்கான நேரமும் மிச்சமாகும். அத்துடன் எரிபொருளும் மிச்சமாகும். இந்த எரிபொருள் மிச்சம் உலகம் வெப்பமயமாதல் வரை பலவகைச் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும். ஒரு நாளில் நாம் உண்ணும் உணவும் சரிவிகித உணவாக அமையும். உடல் ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பாற்றலும் மேம்படும்.

            இப்போது உங்களுக்கு மேலும் ஓர் உண்மை புரிந்திருக்கும். நமது விளைநிலங்கள் அனைத்தும் தானியங்களை விளைவிக்கும் நிலங்களாக இருக்கின்றன. இதற்குக் காரணமாக இருப்பதும் நமது உணவு முறைதாம். பழ உணவை ஒரு வேளை உணவாகக் கொள்ளும் போது விளைநிலங்களில் பழ மரங்கள் உண்டாக ஒரு வாய்ப்பும் கிட்டும். மரங்களை வளர்க்க வேண்டும் என்ற முழக்கம் இல்லாமல் மரங்கள் வளர்வதற்கும் அது ஒரு வாய்ப்பாக இருக்கும். உணவு முறை மாறினால் எப்படி மரங்கள் அதிகமாகும் என்றால் அது இப்படித்தான். நாம் உண்ணும் உணவு உலகில் இந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்றால், ஆம் அது நிச்சயமாக அப்படித்தான் ஏற்படுத்துகிறது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...