உங்களுக்குக் குடும்ப விவசாயி இருக்கிறாரா?
நம் சாப்பாட்டுக்கும் நம் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
சாப்பாட்டைப் பொருத்த மட்டில் அதிகமாகச் சாப்பிடுவதே ஒரு நோய்தான். குறைவாகச் சாப்பிடுவதும்
ஊட்டச்சத்து குறைபாட்டை உருவாக்கி விடும் வேறொரு வகை நோய்தான். அளவாகச் சாப்பிடுவது
முக்கியம்.
உடல் அளவெடுத்துச் செய்யப்பட்டது
போல இருக்க வேண்டும். குறிப்பாக வயிற்றுக்கு என்று ஓர் அளவு இருக்கிறது. அது அளவைத்
தாண்டினால் அதற்குப் பெயர் வயிறு அன்று. தொப்பை.
நாம் அளவாகச் சாப்பிடுகிறோமா,
அளவின்றிச் சாப்பிடுகிறோமா என்பதை அளவுகோல் கொண்டோ, தராசு கொண்டே கணக்கிட்டுக் கொள்ள
வேண்டியதில்லை. நம் வயிறே அதைக் காட்டும். தொப்பை இருக்கிறது என்றால் அளவைக் கடந்து
சாப்பிடுகிறோம் என்றுதான் பொருள்.
உடலைப் பார்த்தே சொல்லி விடலாம்
ஒருவரின் சாப்பாட்டு அளவை. உடல் இளைப்பாக இருப்பதையும் குண்டாக இருப்பதையும் சாப்பாடே
தீர்மானிக்கிறது. விசயம் அதுமட்டுமல்ல. உடலின் நோய்களையும் சாப்பாடே தீர்மானிக்கிறது.
உடல் எப்போதெல்லாம் நோய்வாய்ப்
படுகிறதோ அப்போதெல்லாம் சாப்பாட்டை இயற்கையான முறைக்கு மாற்றிக் கொள்வது முக்கியம்.
நோயாளிகளைப் பார்க்க நாம் நம்மை அறியாமல் பழங்களோடு செல்கிறோம். ஏனென்றால் பழங்கள்
இயற்கையான உணவு என்ற அறிவு நம்மை அறியாமலே நம்முள் பொதிந்து கிடக்கிறது.
இப்போது பிரச்சனை இயற்கையான
உணவிலும் இருக்கிறது. அதற்காகத்தான் இதை எழுதுகிறேன். இயற்கையான உணவுப்பொருள் எதுவும்
இயற்கையாக விளைவிக்கப்படுவதில்லை என்பதுதான் அது.
உரங்களும், பூச்சி மருந்துகளும்
தெளிக்கப்பட்டே நமக்கான உணவு விளைவிக்கப்படுகிறது. அளவோடு சாப்பிடுவது நோயைத் தடுக்கும்
மார்க்கம் என்றாலும் அளவோடு சாப்பிட்டாலும் வேதியியல் கலப்பில்லாத உணவைச் சாப்பிடுவது
முக்கியம்.
அளவோடு சாப்பிடுவோருக்கும்
இப்போது சர்க்கரை நோய் வருகிறது. கொழுப்பு நோய் வருகிறது. மாரடைப்பு நேர்கிறது. இரத்த
அழுத்தம் இருக்கிறது. இதை எங்கேப் போய் சொல்வது என்றால் விவசாயிகளிடம் போய்தான் சொல்ல
வேண்டும்.
நமது மருத்துவர்கள் என்று
நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நமது மருத்துவர்கள் அல்ல. நமது விவசாயிகள்தான் நமது
மருத்துவர்கள்.
நமக்கு என்னதான் மருத்துவர்கள்
மருந்து தந்தாலும் நம் விவசாயிகள் நமக்கு விளைவித்துத் தரும் உணவில் பிரச்சனை என்றால்
மருந்துகளாலும் மருத்துவர்களாலும் எந்த பயனும் இல்லை.
நாம் நமக்கென்று குடும்ப
மருத்துவர், குடும்ப வக்கீல், குடும்ப ஆடிட்டர், வாடிக்கையான உணவகம், வாடிக்கையான கடை
என்று வைத்துக் கொள்வதைப் போல குடும்ப விவசாயி அல்லது வாடிக்கையான விவசாயியை வைத்துக்
கொள்ள வேண்டும்.
நமது குடும்ப அல்லது வாடிக்கையான
விவசாயினிடம் சொல்லி இயற்கையான உணவை விளைவித்துத் தர அவருக்குத் துணை நிற்க வேண்டும்.
அதற்காகக் கூடுதலாக ஆகும் செலவை நாம் மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கூடுதல்
செலவும் கூடுதல் செலவல்ல. மருத்துவத்துக்காகச் செலவாகும் தொகையோடு ஒப்பிட்டால் பத்தில்
ஒரு பங்கு கூட வாராது.
இது இயற்கை வேளாண்மையை மீட்டெடுவதற்கு
ஒரு வழி என்பதோடு நம் உடல் நலத்தையும் நோயிலிருந்து மீட்டெடுப்பதற்குமான வழியும் கூட.
இந்த வழியைச் சொல்லும் போது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சொன்ன ஒரு வாக்கியம்தான்
என் நினைவில் வருகிறது. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? உங்களுக்கான குடும்ப விவசாயியை
நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது நீங்களே ஓர் இயற்கையான விவசாயியாக மாறினால்
அது இன்னும் உத்தமம். எப்படியோ இதில் ஏதோ ஒன்றைச் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
*****
No comments:
Post a Comment