5 Sept 2021

மரம் எங்கோ போனது! குளம் எங்கோ போனது!

மரம் எங்கோ போனது! குளம் எங்கோ போனது!

            மரம் வளர்ப்பும், நீர் பராமரிப்பும் நம் மரபோடு பொதிந்து விட்ட அம்சங்கள். அரசாணைக்கால் இல்லாத திருமணங்களைப் பார்க்க முடியாது. நீர் நிலைகளை வழிபடுவதற்கும் கொண்டாடுவதற்கும் என இருக்கிறது ஆடி பெருக்கு விழா.

            என் வீட்டிற்குக் கிழக்கே ஒரு குட்டை,மேற்கே ஒரு குளம், தெற்கே ஒரு குட்டை என்று நீர் நிலைகள் சூழ்ந்ததாக உள்ளது. மழையெனும் நீரை வழிபடுவதற்கென மாரியம்மன் தெய்வம் வீட்டிலிருந்து கிழக்கே குடி கொண்டு இருக்கிறது.

            நாம் வாழ்க்கையில் பெருக்கிக் கொண்ட வசதிகள் மரம் வளர்ப்பையும் நீர் பராமரிப்பையும் கேள்விக் குறியாக்கி விட்டன.

            வீட்டுக்கு வீடு தண்ணீர் குழாய்கள் இல்லாத காலத்தில் குளத்தில்தான் குளிக்க வேண்டியிருந்தது. குளத்தை நன்முறையில் பராமரிக்க வேண்டிய தேவை அப்போது இருந்தது. இப்போது அந்தத் தேவை இல்லை. மீன் வளர்ப்பதற்கு மட்டும் குளங்களையும் குட்டைகளையும் பயன்படுத்துகிறார்கள். அநேகமாக அனைத்து வீட்டின் கழிவு நீரும் அருகில் உள்ள குளம் அல்லது குட்டை அல்லது ஆறில்தான் சென்று முடிகின்றன.

            சிறு புல் பூண்டு கூட முளைக்க முடியாத அளவுக்கு வீட்டைச் சுற்றி சிமெண்ட் பரவி விட்ட பிறகு மரம் வைப்பதற்கான இடம் அநேகமாக மறுதலிக்கப்பட்டு விட்டது.

            அண்மையில் ஒரு திருமணத்துக்குச் சென்ற போது அரசாணைக்காலை மண்டபத்தில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் கட்டி நிறுத்தியிருந்தார்கள். பெரும்பாலான மண்டபங்களில் தகர டின்னில் மண்ணை நிரப்பி அதில் நிறுத்தியிருப்பார்கள். ப்ளாஸ்டிக் நாற்காலியைத் தாங்கலுக்காக நிற்பதற்கேற்ப கட்டி நிறுத்தியிருந்தது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.

திருமணம் ஆகப் போகும் மணமக்கள் அந்த அரசாணைக்காலை எங்கு நடுவார்கள் என்று யோசனையாக இருந்தது. எனக்குத் தெரிந்து அவர்களின் இரு குடும்பங்களும் இருப்பது வாடகை வீடுகளில். அவர்கள் இருக்கும் வாடகை வீடுகளில் மண்ணைத் தப்பித் தவறியும் பார்க்க முடியாது. சுற்றிலும் சிமெண்டும் சிமெண்ட் சூழ்ந்த உலகம் அது. சம்பிரதாயத்தை எப்படி விடுவதென்று மஞ்சள் பூசி மாவிலைகளைச் சுற்றி பூவோடும் சிவப்புத் துணியோடும் கட்டப்பட்டு அந்த இரு அரசாணைக்கால்களும் நின்றிருந்தன.

திருமணம் முடிந்த பிறகு எல்லாரும் மண்டபத்தைக் காலி செய்து கிளம்பிய பிறகும் அந்த அரசாணைக் கால்கள் அங்கேயே நின்றிருந்தன. ஒருவேளை அடுத்த திருமணத்திற்கும் அந்த அரசாணைக் கால்களைப் பயன்படுத்திக் கொள்வார்களோ என்னவோ?

வெயிலின் அருமை நிழலிலே என்ற சொலவம் என் மனதுக்குள் வந்துப் போனது. நமக்கு ஏன் இனி நிழலின் அருமையோ குளிர்ச்சியோ தேவைப்படப் போகிறது? அதற்கேற்றாற்போல்தான் ஏ.சி. இருக்கிறது. ஆகவே மரங்களைப் பராமரிக்க வேண்டும் என்ற அவசியமே நமக்கு இல்லை என்றுதான் சொல்வேன்.

சுத்தமான தண்ணியைத் தருவதற்கென்றே குழாய்கள், சுத்தகரிப்பு எந்திரங்கள், குடுவையில் அடங்கிய நீர்ப் புட்டிகள் இருக்கின்றன. ஆதலால் நாம் இனி நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றுதான் சொலவேன்.

நமக்குத் தேவை இருந்தால் பராமரிப்பது என்பதுதான் மனித புத்தி என்பதால் நாம் சடங்குகளுக்காகவும் சம்பிரதாயத்துக்காகவும் எல்லாவற்றையும் பேருக்கு சுரத்தையின்றிச் செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மரம் நடுதலை யாரும் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. ஒவ்வொரு திருமணத்தின் போது நடப்பட்டிருக்கும் அரசாணைக்கால்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் போதும் தமிழ்நாடே சோலைவனமாகியிருக்க வேண்டும். நமக்குத்தான் அரசாணைக்கால்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய் விட்டதே!

அங்கங்கே இருக்கும் நீர்நிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் நீர்ப்பஞ்சம் ஏற்பட வாய்ப்பே இல்லை. நமக்குத்தான் நீர் நிலைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் போய் விட்டதே!

ஏதோ ஒரு காலத்தில் மரங்களையும் நீர் நிலைகளையும் பராமரிக்க வேண்டிய தீவிர அவசியம் உண்டாகலாம். அப்போது நம்மிடம் மரங்களும் நீர் நிலைகளும் இருக்குமா என்பது குறித்து யோசிக்க வேண்டியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...