டக் டக் கதைகள்
டக் டக்கென்று படிக்கும் கதைகள் எழுதி நாளாகி விட்டதல்லவா! டக்
டக் கதைகள் என்பன சில நொடிகளில் படித்து விடக் கூடிய கதைகள். ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.
டக்கென்று தோன்றி மறையும் மின்னலுக்கு ஒரு வசீகரம் இருப்பது போல இந்தக் கதைகளுக்கும்
ஒரு வசீகரம் இருக்கிறது.
என்னால் ஒரு நாவலைப் படித்து முடிக்கவில்லையே, ஒரு சிறுகதையைக்
கூட ஒரு பக்கம் முழுசா வாசிக்க முடியவில்லையே, ஒரு பக்க கதையின் நாலு வரிகளைக் கூட
வாசித்துப் பார்க்க தோண மாட்டேங்குதே என்று வருத்தப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அவர்களுக்காகத்தான் இந்த
டக் டக் கதைகள். இந்தக் கதைகளை வாசித்துப் பார்க்க முடியவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.
சில நொடிகள் போதும் வாசித்து முடிப்பதற்கு. வாசித்துப் பாருங்கள்.
அப்புறம் நானும் கதைகள் எல்லாம்
வாசிக்கிறவனாக்கும் என்று நண்பர்கள் மத்தியில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சொல்லுங்கள்.
பிறகு இந்த டக் டக் கதைகளை வாசித்துப் பார்த்து விட்டு நீங்களும் டக் டக் கதைகள் எழுத
தொடங்குங்கள்.
இந்தக் கதைகளுக்குத் தலைப்பு அவசியம் இல்லை. வேண்டுமானால் தலைப்பு
இட்டுக் கொள்வதிலும் பிழையில்லை.
கிரகவாசி
பிரபஞ்சத்திலிருந்து சுதந்திரமாக இந்தியா வந்த ஏலியன்கள் டோல்கேட்டில்
மாட்டிக் கொண்டன.
விநோதம்
உப்புமாதான் பிடிக்கும் என்ற தன் காதலியை விநோதமாகப் பார்த்தான்
பிரியாணி மாஸ்டர் ரகு.
ஆவலாதி
மழை வரும் போதெல்லாம், “லீவு விடுவாங்களாப்பா?” என்று கேட்ட
பிந்து குட்டி, “எப்பப்பா ஸ்கூல் திறப்பாங்கப்பா?” என்கிறாள் கொரோனா வந்த பிறகு.
நிவாரணம்
“சார் நீங்களுமா?” என்ற படியே ஓடிப் போய் காரின் கதவைத் திறந்தார்
கொரோனா நிவாரணம் இரண்டாயிரம் வாங்க வந்த தண்டபாணி.
காசு
“எந்தக் கட்சிக்கும் ஓட்டுப் போட மாட்டேன்னு பிடிவாதமா சொன்னீங்களே?”
என்றதும், “கை நீட்டி காச வாங்கிட்டேன்பா!” என்று பரிதாபமாகச் சொன்னார் தர்மராஜன்.
*****
No comments:
Post a Comment