15 Sept 2021

நீ அதிர்ஷ்டசாலி என்றால் ஏ.டி.எம்.மில் பணம் இருக்கும்!

நீ அதிர்ஷ்டசாலி என்றால் ஏ.டி.எம்.மில் பணம் இருக்கும்!

            ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கப் போகிறோம். பணத்தை எடுத்து விட்டால் அந்த நாள் இனிய ஓர் இனிய நாள். நரி முகத்தில் முழித்த நாள். என் வாழ்க்கை வரலாற்றில் ஒவ்வொரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் போதெல்லாம் பணம் கிடைத்துவிட்டால் அதை ஒரு மிகப் பெரிய சாதனையாக உணர்கிறேன். தவறாமல் அந்தச் சாதனை நாளை என் நாட்குறிப்பிலும் பதிந்து வைக்கிறேன். இது போன்ற நேரங்களில்தான் வருங்கால தலைமுறைக்கான வரலாற்றின் தேவையையும் அவசியத்தையும் உணர்கிறேன்.

            ஒருவரிடம் கடன் கேட்டுச் செல்கிறோம். கொடுத்தால்தான் உண்டு. இல்லையென்றால் அவரிடம் கோபித்துக் கொள்ள முடியாது அல்லவா. ஏ.டி.எம்மும் அப்படித்தான். ஏ.டி.எம்மில் எடுப்பது நம் கணக்கில் உள்ள பணம், அது நம் சொந்தப் பணம், அது கடன் வாங்கும் பணமாகாது என்றெல்லாம் நீங்கள் சொல்லாம். ஏ.டி.எம். கொடுத்தால்தான் உண்டு. கொடுக்காவிட்டால்…

            ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க செல்கிறேன். அதில் பணமிருக்காது. இதில் கொடுமை என்னவென்றால் அடுத்து நான் பணம் எடுக்க செல்லும் நான்கைந்து ஏ.டி.எம்.களிலும் பணம் இருக்காது. டிராபிக்கில் ஒரு சிக்னலில் சிக்கியவர் தொடர்ச்சியாகச் சிக்னலில் சிக்குவார் என்பது போலத்தான் இது. இதற்காக வெறுத்துப் போய் நான் சண்டை போட்டதில்லை. ஆனால் ஜோசியரிடம் சண்டை போட்டிருக்கிறேன். என் ஜாதகத்தில் இப்படியெல்லாம் இருக்கும் என்பதை ஏன் கணித்துச் சொல்லவில்லை என்று.

            நான் இதில் மிகைப்படுத்தி எதையும் சொல்லவில்லை. உண்மையில் அப்படித்தான் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் தரிசனம் போல்தான் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதும். பெருமாள் நினைத்தாலன்றி அவரை நம்மால் தரிசனம் செய்ய முடியாது என்பார்களே. ஏ.டி.எம்.மும் அப்படித்தான். அதுவாக நினைத்தாலன்றி அதிலிருந்து அவ்வளவு சுலுவாகப் பணத்தை எடுத்து விட முடியாது. அது நம் பணம் என்றாலும் நமக்குக் கொடுக்கும் மனம் அதற்கு வர வேண்டும், அந்த எந்திரத்திற்கு வர வேண்டும்.

            ஏ.டி.எம்.மின் பணப் பிரச்சனை நீதிமன்றம் வரை போயிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இனி ஏ.டி.எம்.மில் பணம் இல்லையென்று வாடிக்கையாளர்கள் திரும்பினால் அபராதம் விதிக்கப்படும் என்று உச்சநீதி மன்றமே எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை ஆகி விட்டது.

            ஏ.டி.எம்.மில் பணம்தான் இல்லை என்பது ஒரு பிரச்சனை என்றால் அண்மைக் காலமாக அதில் ஏ.சி. இல்லை, தூய்மை இல்லை, பாதுகாப்பு காவலர்கள் இல்லை என்று ஏகப்பட்ட இல்லைகள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. அதனாலென்ன என்கிறீர்களா?

            ஏ.டி.எம்.களுக்குப் பணம் எடுக்கப் போனால் அந்தப் பத்துக்குப் பத்து சதுர அடி இடத்திற்குள் புழுங்கி வேகுகிறது. குற்றால அருவி வழிவது போல வியர்வை வழிகிறது. முடிவில் பணம் கிடைக்காமல் நயாகரா நீர் வீழ்ச்சி போல் கண்ணிலிருந்து கண்ணீர் வழிகிறது.

ஏ.டி.எம். இருக்கும் இடத்தின் சுத்தம் இருக்கிறதே. தூசும் காகிதக் குப்பைகளுமாய் நூற்றாண்டுகளுக்கு முன் சுத்தம் செய்தது போல இடமே பாழடைந்து கிடக்கிறது.

சமயத்தில் ஏ.டி.எம். பணத்தைக் கொடுப்பது போல வந்து கொடுக்காமல் போய் விடும் சந்தர்ப்பங்களும் நடந்திருக்கின்றன. அப்போது மனம் பக் பக் என்று அடித்துக் கொள்ளும் பாருங்கள் தலை வெட்டுப்பட்ட பிராய்லர் கோழியைப் போல. அப்போது ஆறுதல் சொல்வதற்காகப் பாதுகாப்பு காவலர்கள் கூட இல்லாத ஏ.டி.எம்.கள்தான் நாட்டில் அதிகம்.

            ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதில் இவ்வளவு அவஸ்தைகள் இருந்தாலும் வருடா வருடம் ATM CUM DEBIT CARD CHARGES என்று பணத்தைப் பிடித்து விடுகிறார்கள். எதற்கு இந்தப் பிடித்தம்? ஏ.டி.எம். ஏ.டி.எம்.மாகக் கால் கடுக்க அலைந்து தேவுடு காத்ததற்காகவா? நாம் அலைவதற்காக நாமே அபராதம் செலுத்துவது போலத்தான் இருக்கிறது நிலைமை.

            ஏ.டி.எம். அறையில் ஒரு புகார் பெட்டியும் வைத்திருக்கிறார்கள். ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்ப நேரமில்லாதவர்களுக்கு இந்தப் புகார் பெட்டியைப் பார்க்கவா நேரமிருக்கும் என்று நினைத்து நான் எதையும் எழுதிப் போட்டதில்லை.

            இதைப் பேசிக் கொண்டிருப்பதற்குப் பேசாமல் ஜி பே, போன் பே, ஆன்லைன் டிரான்ஸாக்ஸன் என்று மாறிக் கொள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்தானே. அப்படி பலர் மாறியதால்தான் இந்த ஏ.டி.எம். பிரச்சனைப் பெரிதாகப் பிரதிபலிக்கவில்லை என்னவோ! அல்லது எல்லாரும் அப்படி மாற வேண்டும் என்பதற்காகத்தான் ஏ.டி.எம். பிரச்சனைப் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லையோ என்னவோ!

            சங்க காலதில் பொருள் தேடி தலைவன் செல்வதைப் போல இந்தக் காலத்தில் எந்த ஏ.டி.எம்.மில் பணம் இருக்கிறது என்று தேடி செல்ல வேண்டியதாக இருக்கிறது. பொருள் தேடி சென்ற தலைவன் கார் காலத்தில் திரும்பி விடுவான். நான் யார் காலத்தில் திரும்புவேன் என்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறேன்.

அது சரி. உங்களுக்கும் இதில் ஓர் அனுபவம் இருக்கும். அதைச் சொல்லுங்கள். ஒருத்தருக்கொருத்தர் சொல்லி மனதை ஆற்றிக் கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம் இருக்கிறது இதில்.

*****

2 comments:

  1. Replies
    1. என்ன செய்வது? இது போன்ற நிதர்சனங்களுக்கு மத்தியில்தான் நம் சனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆபத்துக்கு உதவாத நட்பும் பணமும் எதற்குப் பயன்படப் போகிறது என்பார்கள். அதனோடு அவசரத்துக்கு உதவாத ஏ.டி.எம்.மையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

      Delete

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...