14 Sept 2021

சமூக அக்கறை எனும் போலிவாதங்களின் பின்னணிகள்

சமூக அக்கறை எனும் போலிவாதங்களின் பின்னணிகள்

சமூக அக்கறை என்பது சமூகத்தில் இருக்கும் நமக்காக நாம் கொள்ளும் அக்கறைதான். ஆனால் சமூகம் என்பது தனியாக இருக்கின்ற ஒன்று போலும் அதற்காக நாம் அக்கறை கொள்ள வேண்டும் என்பது போன்ற ஓர் உணர்வு வார்ப்பு அண்மைக் காலமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த புரிதல் இல்லாத நிலை ஒவ்வொன்றையும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போலப் பிரித்துக் காட்டி விடக் கூடியது. சமூக அக்கறையோடு ஒரு சிலர் செய்வதாகக் கூறும் செயல்கள் அவர்களுக்கும் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் அற்ற தன்மையைக் காட்டுவதாக உள்ளதை மிக நேரடியாகவே அவதானிக்க முடிகிறது.

இன்றைய சமூகத்தில் காணப்படும் சமூக அக்கறை என்பது ஒரு வித லட்சியவாதப் போலித்தன்மை உடையது என்பதைத் துணிந்து கூறலாம். நீங்கள் ஒரு தனித்த அமைப்பிலிருந்து சமூக நன்மைக்காகப் பாடுபடுவதாகச் சொல்லலாம். அப்படியானால் உங்கள் அமைப்பில் இல்லாதவர்களுக்கு அல்லது அதைச் சாராதவர்களுக்கு வேறொருவர் பாடுபட வேண்டி வரும். மேலும் உங்கள் அமைப்போடு தொடர்பில் இல்லாதவர்கள் சமூகத்தோடு தொடர்பற்றவர்களாகவும் அதன் மூலம் ஒரு தோற்றம் உண்டாகி விடும்.

சமூகம் என்பது நீங்கள் நல்லது செய்ய நினைக்கின்ற மற்றும் நீங்கள் செய்ய நினைக்கும் நல்லதைச் செய்ய முடியாத மக்கள் நிரம்பிய தொகுதி என்பதைப் புரிந்து கொண்டால் உங்கள் சமூக அக்கறையின் பலவீனம் உங்களுக்குப் புரிய வரும்.

சமூகத்திற்கென்று ஒரு பொதுவான தேவை இருக்கிறது. அத்தேவைகளை ஒருவரையொருவர் சார்ந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படித்தான் ஒரு சமூகத்தின் அக்கறை என்பது செயல்பட வேண்டும்.

ஒருவரையொருவர் சார்ந்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் போது ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்ட கூடாத எல்லை அல்லது கட்டுபாடு இருக்கிறது. இந்த எல்லையைத் தாண்டுவதோ, கட்டுபாட்டை மீறுவதோ சமூகத் தேவையை மிகுதியாக உறிஞ்சுதலுக்குக் காரணமாகி விடும்.

மிகையான உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்தக் கட்டுபாட்டின் அவசியத்தை விளக்கி உணர வைப்பதும் சமூக அக்கறையில் மிக முக்கியமானது.

நீங்கள் உங்களைக் கரைத்துக் கொண்டு அல்லது உங்களை உருக்கிக் கொண்டு ஆற்றும் சமூக அக்கறை என்பது உங்களுக்குத் தியாகிப் பட்டத்தைப் பெற்றுத் தரலாம். அது ஒரு தட்டையான புரிதலை உண்டாக்கி விடும். சமூகத்திற்காகச் செயல்பட தியாகிகள் தேவை என்ற உணர்வை உண்டாக்கி விடும்.

சமூகத்திற்கெனத் தனிப்பிரிவில் தியாகிகளை உருவாக்கிக் கொண்டிருக்க முடியாது. தேவைப்பட்டால் ஒட்டுமொத்த சமூகத்தில் இருப்பவர்களும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் நிலைமையைத்தான் உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட ஒருவரைப் பலியாக்கி தியாகியாக்க முயற்சிக்க கூடாது. அது ஒரு ஒட்டுமொத்த புரிதல் இல்லாத சமூகத்தைக் காட்டுவதாகும். இப்படி நாம் தியாகிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கினால் அதற்கு ஒரு முடிவு இருக்காது. தொடர் சங்கிலிகளைப் போல முடிவின்றி அது நீண்டு கொண்டிருக்கும்.

குறிப்பிட்ட சில சமூகக் கூறுகளில் சமூகப் புரிதலின்மைக்காகப் பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அது ஒட்டுமொத்த சமூக நலனுக்கானதே தவிர குறிப்பிட்ட ஒருவர் அதனால் பெயர் பெருவதற்கோ, புகழ் பெறுவதற்கோ உரியது ஆகாது. ஆனால் நிலைமை என்பது தியாகிப் பட்டம் என்பது கூட இந்தச் சமூகத்தில் புகழ் பெறுவதற்குரியதும் பெயர் பெறுவதற்கும் உரியதான குறுக்கு வழியாக மாறிக் கொண்டு இருக்கிறது.

சமூக அக்கறை குறித்து மிக அதிகமாக உரையாடவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது. நிலைமை இப்படியிருக்க குறுகிய அமைப்பு சார்ந்தோ அதன் வறட்டுத்தனமான கௌரவம் சார்ந்தோ அதைக் குறுக்கி விடாமல் இருப்பதும் ஒரு வகையில் சமூக அக்கறையைச் சார்ந்ததுதான்.

குறிப்பாக தம் சாதி மக்களுக்காக தாம் செய்யும் நல்லதும் சமூக அக்கறைதான் என்று ஒருவர் சொல்வாரானால் அதை எப்படி சமூக அக்கறை என்று ஏற்க முடியும்? அப்படியானால் அவர் சாதி சாராத மக்கள் எல்லாம் அந்தச் சமூகத்தில் வர மாட்டார்களா என்ன? இப்படித்தான் நம் சமூக அக்கறை பல நேரங்களில் அமைப்பியல் சார்ந்து போலிவாத லட்சியத்தன்மையை உண்மையான லட்சியத்தன்மை என்பது போல காட்டி நம்மை ஏமாற்றி வருகிறது. இது குறித்து நாம் நிறையவே உரையாட வேண்டிய இருக்கிறது. உரையாடுவோம்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...