13 Sept 2021

விஷம் போல மாறிக் கொண்டிருக்கும் விருந்துகள்

விஷம் போல மாறிக் கொண்டிருக்கும் விருந்துகள்

இன்னைய காலத்துல விருந்தோம்பல்ங்றது விஷம் போல மாறிட்டு இருக்குறதா நினைக்கிறேன். ஒரு வயிறு எவ்வளவு கொள்ளுங்ற கணக்கெல்லாம் இல்லாம விருந்தைப் பரிமாறுறாங்க. விருந்துல இருக்குற அத்தனை வகைகளும் சுவைங்ற ஒண்ண அடிப்படையா கொண்டு தயாரிக்கப்படுறதா இருக்குது.

வருங்காலத்துல விருந்துங்றது இப்படி விஷம் போல மாறிடும்ங்றதெ ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே கணக்குப் பண்ணித்தாம் திருவள்ளுவரு “பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்” (குறள். 580) ன்னு பாடியிருக்காரு போல.

சாப்புடுறப்போ நல்லா இருக்குற விருந்து சாப்புட்ட பிறகு பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிடுது. நம்ம நாட்டுல தொடர்ச்சியா ஒரு வாரத்துல இரண்டு நாள் இது போல விருந்து சாப்பிட்டா போதும் ஒரு வருஷத்துல சாப்புடுற ஆளுக்கு சுகர் வந்துடும், கொலஸ்ட்ரால் வந்துடும், மாரடைப்பும் வந்துடும். நம்ம விருந்தோம்பல் முறைகள ஆரோக்கியமா மாத்திக்குற நேரம் வந்துட்டதாவே நினைக்கிறேன்.

விருந்துகள்ல கொஞ்சம் பழங்களுக்கும், காய்கறிகளால செய்யப்படுற வகைகளுக்கும், நார்ச்சத்து மிகுந்த வகைகளுக்கும் அங்க முக்கிய இடம் இருக்கணும். ரொம்ப முக்கியமா அதிக அளவு உணவுகளைத் தயார் செஞ்சு வீணாகுறதையும் குறைச்சிடணும்.

நிறைய வகைகளைத் தயார் செய்து பரிமாறுறது விருந்து அளிக்கிறவங்களுக்குப் பெருமை தர்றதா இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இலையிலும் மிச்சமாகுற உணவுகளைச் சேகரம் பண்ணா அது போல இன்னொரு விருந்தை வெச்சிடலாம்ங்றது வேடிக்கையான உண்மை.

நாம்ம பெருமையா சொல்ற விருந்தோம்பலுக்குப் பின்னாடி இருக்குற இன்னொரு முகம் இருக்கே. அது ரொம்ப கோரமானது.

அது என்னான்னா…

ஒவ்வொரு விருந்து நடக்குற இடத்துக்கு வெளியில பார்க்கிறப்போ உணவுக்காக ஏக்கத்தோட பசியில வெளியில நிக்குறவங்களப் பாக்க முடியுது. அவங்களுக்கான உணவு கௌரவமான முறையில கொடுக்குற அளவுக்கு இங்க மனசு இன்னும் வளரல. சாதீயச் சமூகத்துல எப்படி உயர்வு தாழ்வோட இழிவா பாக்குற பார்வை இருக்கோ அது போன்ற பார்வைதாம் வெளியில நிக்குறவங்களப் பாக்குறப்போ பல பேருக்கு இருக்குது.

தொப்பையும், ஊளை சதையுமா இருக்குறவங்களுக்கு உள்ளார விருந்து நடக்குறப்போ ஒட்டுன வயித்தோடும் ஒடம்புல பிட்டு சதையில்லாம வெளியில நிக்குற அவங்களப் பாக்குறப்போ பாவமாத்தாம் இருக்குது.

பசிக்கு உணவுங்ற முறைப்பாடு மாறி கௌரவத்துக்கு உணவுங்ற ஒரு முறைப்பாட்டை இந்த விருந்து கொண்டு வந்திடுச்சு. இந்தக் கௌரவ விருந்து ஒவ்வொரு மனுசரையும் ரெண்டு வயித்துக்கான உணவைச் சாப்புட வெச்சிடுது.

அரை வயிறு சாப்புடுறப்போ இருக்குற சுறுசுறுப்பும் கலகலப்பும் முழு வயிறு சாப்புடுறப்போ இருக்காது. லேசா மதமதப்பு இருக்கும். இதே ரெண்டு வயிறு கொள்ளுற அளவுக்குச் சாப்புடுறப்போ உடம்பு கிட்டதட்ட மயக்க நிலைக்கே போயிடும். இப்படியே தொடர்ந்து மயக்க நிலைக்குப் பழக்கப்பட்டுப் போறப்போ உடம்புல இருக்குற சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு எல்லாம் அதிகமாயி சாப்பாட்டாலே நோய் வந்து கிடக்குறவங்க நம்ம நாட்டுல அதிகமா இருக்காங்க.

நாலு வேளை பட்டினி கெடந்தாலும் பட்டினி மனுசரைச் சாவடிச்சிடுறதில்ல. ஆனா இது மாதிரியான உணவை நாலு வேளை சாப்புட்டா போதும் அது மனுஷரைச் சாவடிச்சிடும்.

இது மாதிரியான விருந்துகள்ல அளவா சாப்புட்டு எழும்புறவங்களும் இருக்கத்தாம் செய்யுறாங்க. எல்லாராலயும் அது மாதிரி முடியாது. வாயைக் கட்டுப்படுத்துறது சாமானியம் கிடையாதே.

விஷேசத்துல வந்து கலந்துக்கிட்டு விருந்தைச் சாப்புடாம அளாவளாகிட்டு மட்டும் போறவங்களும் இருக்குறாங்க. விருந்துச் சாப்பாடு நம்ம ஒடம்புக்கு ஒத்துக்காதுங்றதெ ரொம்ப வெளிப்படையா சொல்லிட்டும் போறவங்களும் இருக்காங்க. இதுக்கு மேல ஒரு படி தாண்டி வீட்டுக்குப் போயி சோத்துல தண்ணிய ஊத்திச் சாப்புடுறதுதாம் விருந்துன்னு தைரியமா சொல்லிட்டுப் போறவவங்களும் இருக்காங்க. இப்படி எல்லாராலயும் இருந்துப்புட முடியாது. அது ஒரு சிரமம் இதுல.

அளவா சாப்புடுற பழகிக்கிறதும், விருந்துல அடக்கமா சாப்புட பழகிக்கிறதும் இப்போ ரொம்ப அவசியம். இந்தக் காலத்தைப் பொருத்த வரைக்கும் நாவடக்கம்ங்றது வார்த்தைகள அடக்கமா பேசுறது மட்டுமில்ல, சாப்புடுறதா அடக்கமா சாப்புடுறதும்தாம். இந்த ரெண்டுக்கும் சேத்தாப்புல சொல்றாப்புலத்தாம் “யாகாவார் ஆயினும் நாகாக்க” (குறள். 127)ன்னு திருவள்ளுவர் சொல்றது இருக்குறதா படுது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...