நீதியின் குரல்
நாங்கள் படித்த 2000 க்கு முற்பட்ட காலங்களில் நீதி போதனை வகுப்பு
என்று வாரத்தில் இரண்டு பிரிவேளைகள் உண்டு. மிகவும் மகிழ்ச்சியான வகுப்பறைகளில் அதுவும்
ஒன்று. மற்றபடி ஓவியம், விவசாயம், உடற்கல்வி என்று வரும் பாட வேளைகளில் குஷியாகி விடுவோம்.
ஓவிய வகுப்பில் வரையும் போது உண்டாகும் மகிழ்ச்சி, விவசாயப்
பாடவேளையில் வயலில் இறங்கும் போது உண்டாகும் மகிழ்ச்சி, உடற்கல்வி பாட வேளையில் விளையாடும்
போது உண்டாகும் மகிழ்ச்சி இவை எல்லாவற்றையும் விட நீதி போதனை வகுப்பில் கதை கேட்ட மகிழ்ச்சி
இன்னும் மனதில் ஒட்டி நிற்கிறது. அந்த வகுப்பிற்காக நாற்பது பக்க நோட்டு ஒன்று உண்டு.
ஆனால் அதில் அப்போது எதுவும் எழுதியதில்லை. இப்போது யோசித்துப் பார்க்கும் போது எழுதியிருக்க
வேண்டும் என்றுதோன்றுகிறது. எழுதாமல் போனாலும் மனதில் அந்த வகுப்புகள் இன்னும் சித்திரங்கள்
போல தங்கியிருக்கின்றன.
நீதி போதனை வகுப்பில் பெரும்பாலும் கதைகள்தான். சிரிக்க சிரிக்க
கதையைச் சொல்லி கதையின் கடைசியாக நீதியைச் சொல்வார்கள். பாரதிதாசனின் இருண்ட வீட்டைக்
கூட அப்படி ஒரு முறை அதில்வரும் குடும்ப சித்திரங்களைச் சிரிக்க சிரிக்க சொல்லி ‘சுறுசுறுப்பாக
இருக்க வேண்டும்’ என்று எஸ்.என். ஐயா சொன்ன நீதி இன்னும் மனதில் இருக்கிறது.
பெரும்பாலும் எல்லா ஆசிரியர்களுக்கும் ஏதேனும் ஒரு வகுப்பிற்காக
இந்த நீதி போதனை வகுப்பை ஒதுக்கியிருப்பார்கள். சிரிக்க சிரிக்க கதைகளைச் சொல்வதோடு
அவர்களின் வாழ்க்கையையும் மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வார்கள். அதிலும் ஒரு சிரிப்பு
இருக்கும். நல்ல நல்ல பழமொழிகளையும்,பொன்மொழிகளையும் அறிஞர்களின் வாழ்வோடு கலந்து சொல்வார்கள்.
நீதிபோதனை வகுப்பில் கேட்ட ஒரு போதனை மொழி இன்னும் மனதில் அப்படியே
பதிந்து கிடக்கிறது. புலியின் வாயில் சிக்கிக் கொண்ட ஒரு கஞ்சன் குறித்த கதையைச் சிரிக்க
சிரிக்க சொல்லி கதையின் நீதியை வித்தியாசமாக இப்படிச் சொன்னதும் ஒரு காரணமாக இருக்கலாம்
என்ற நினைக்கிறேன். அதாவது ‘வாழ்க்கையில் கஞ்சனாக இருக்கக் கூடாதுதான். ஆனால் கோபத்தைச்
செலவழிப்பதில் மட்டும் கஞ்சனாக இருக்க வேண்டும்’ என்று அன்றைய போதனையை முடித்தார் எம்.எம்.
சார். இப்போதும் அந்தக் குரல் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்போது நினைத்துப்
பார்க்கும் போது நீதி போதனை என்ற வகுப்பை அந்த ஆசிரியர்கள் எவ்வளவு சுவாரசியம் செய்திருக்கிறார்கள்
என்று ஆச்சரியமாக இருக்கிறது.
நீதி அல்லது போதனை என்பதற்கான இறுக்கம் எதுவும் இல்லாமல் பிஞ்சு
மனதில் எப்படிச் சொன்னால் நீதிகள் பதியும் என்பதை அறிந்து சொன்ன அந்த ஆசிரியர்களைப்
பற்றி நினைத்துப் பார்க்கும் போது ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களும் நீதிமான்கள்
என்று எண்ணத் தோன்றுகிறது எனக்கு. இதெல்லாம் இப்போதுதான். அப்போதெல்லாம் அந்தக் கதைகளின்
சிரிப்புகளுக்காகத்தான் காத்திருந்தேன். சிரிப்புக்குள் நீதியை நுழைத்துச் சொல்வது
சாதாரணமில்லை என்பது இப்போது புரிகிறது.
*****
No comments:
Post a Comment