9 Aug 2021

சடகோபனின் ‘ரசிகமணி டி.கே.சி.’ – ஓர் எளிய நூலறிமுகம்

சடகோபனின் ‘ரசிகமணி டி.கே.சி.’ – ஓர் எளிய நூலறிமுகம்

            ரசிகமணி என்றும் டி.கே.சி. என்றும் புகழப்பட்டவர் டி.கே. சிதம்பரநாத முதலியார். கம்பரில் கரை கண்டவர் அவர். கம்பர் புகழ் பரவுவதற்காகப் பிறப்பெடுத்தவர் என்று சொல்லத்தக்க வகையில் கம்பரைப் பேசிப் பரவி வாழ்ந்தவர். அந்த உரிமை தந்த உணர்வில் கம்பர் பாடல்களைத் திருத்தமும் செய்ய முற்பட்டவர். தமிழ் உலகால் அது ஏற்கப்படவில்லை என்றாலும் கம்பரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ரசிகமணியைத் தவிர்த்து விட்டுப் பேச இயலாது எனலாம்.

            ரசிகமணி டி.கே.சி. குறித்து அதே தலைப்பில் அமைந்துள்ள நூல் ஒன்றை அண்மையில் படிக்க நேர்ந்தது. அதற்கு முன்பு ரசிகமணியைப் பற்றித் தமிழாசிரியர்கள் புகழ்ந்து பேசியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். சுந்தர ராமசாமியின் ‘கவிமணி’ குறித்த நினைவோடை நூலில் அவரைப் பற்றி அறிந்திருக்கிறேன். ‘ரசிகமணி டி.கே.சி.’ என்ற இந்த நூலை நாவலர் முனைவர் கு. சடகோபன் அவர்கள் எழுதியிருக்கிறார். டி.கே.சி.யை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் அவரோடு பழகிய ஆளுமைகளையும் நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் சடகோபன் அவர்கள் டி.கே.சிக்கான இவ்வறிமுக நூலை எழுத பொருத்தமானவர்.

                        “வெயிற் கேற்ற நிழலுண்டு

                                    வீசும் தென்றல் காற்றுண்டு

                        கையில் கம்பன் கவியுண்டு

                                    கலசம் நிறைய அமுதுண்டு”

எனக் கவிமணி பாடியிருப்பார். அந்தப் பாடல் ‘கலசம் நிறைய அமுது’ என்பதைத் தமிழகாக எடுத்துக் கொண்டால் அப்பாடலுக்கு வெகு பொருத்தமாக வாழ்ந்திருக்கிறார் ரசிகமணி. கவிமணிக்கும் ரசிகமணிக்கும் ‘புணர்ச்சி பழகுதல் வேண்டா’ எனும்படியான நட்பு உண்டாகிப் பின் சந்தித்துப் பழகி ஒருவருக்கொருவர் நட்புக்காக விட்டுக் கொடுக்கும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அதற்கேற்றாற் போல் ரசிகமணி கவிமணியின் பாடல்களில் திருத்தங்களைச் செய்திருக்கிறார்.

                        “தில்லைப் பதியும் கண்டேன் – அங்கு

                                    சிற்றம்பலும் கண்டேன்;

                        கல்லைக் கனி செய்வோனைத் – தோழி

                                    கண்களால் கண்டிலனே.”

என்று கவிமணி பாடியதை மேற்கொண்டு ரசிகமணி பாடலின் பொருள் சிதையாமல் கற்போர் குழம்பி விடாமல்

                        “கண்ணுக்(கு) இனிய கண்டு – மனத்தைக்

                                    காட்டில் அலைய விட்டுப்

                        பண்ணிடும் பூசையாலே – சகியே

                                    பயன் ஒன்றும் இல்லையடி

                        உள்ளத்தில் உள்ளானடி – அதை நாம்

                                    உணர வேண்டுமடி

                        உள்ளத்தில் காண்பாயானால்

                                    உள்ளேயும் காண்பாயடி.”

என்று முடித்திருக்கிறார்.[1]

ரசிகமணி கம்பரின் பாடல்களைச் செய்த திருத்தங்களை முழுமையாகக் கவிமணி ஏற்காவிட்டாலும் நட்பிற்கேற்ற வகையில் பண்பு அறிந்து பாடறிந்து ஒழுகியிருக்கிறார். பண்பு, பாடு ஆகிய இரு சொற்களும் இணைந்து உருவான ‘பண்பாடு’ என்ற சொல்லை உருவாக்கிப் பரவச் செய்தது ரசிகமணி என்பதும் இந்நூலால் அறிய வரும் செய்திகளில் குறிப்பிடத்தக்கது.

ரசிகமணியின் ஒரே மகன் தீர்த்தாரப்பன் 32 வயதில் இறந்த போது அவர் மனம் உடைந்து போனார். அப்போது கவிமணி எழுதிய

            “எப்பாரும் போற்றும் இசைத்தமிழ் செல்வா!

            என் அப்பா!  அழகிய செல்லையா! இப்பாரில்

            சிந்தைக் குளிரச் சிரித்தொளிரும் நின் முகத்தை

            எந்த நாளில் காண்பேன் இனி?”

என்ற பாடலைப் பார்த்ததும் இது போன்ற பாடல் பிறக்கும் என்றால் எத்தனை  பிள்ளைகளை வேண்டுமானால் இழக்கலாம் என்று புத்திர சோகத்திலிருந்து மீண்டு வருகிறார் என்றால் அவர்தான் ரசிகமணி. கம்பரின் பாடல்களில் மட்டுமல்லாது தமிழால் ஈர்க்கும் அத்தனை பாடல்களிலும் தன்னை இழந்தவராகத் தன் மனதைப் பறிகொடுப்பவராக கவிதா ரசிகராக அவர் வாழ்ந்திருக்கிறார்.

            கம்பரின் புகழ் பரவுவதற்காக அவர் உருவாக்கிய வட்டத்தொட்டி, கம்பரை நாடெங்கும் ஊரெங்கும் எடுத்துச் செல்ல காரணமான கம்பன் கழகங்கள் உருவாக முன்னோடியாக அமைந்த விதம், காந்திக்கும் நேருக்கும் வினோபாவேவுக்கும் கம்பனைப் பருக தந்த விதம் என்று இந்நூல் ரசிகமணி பற்றி அறிய வேண்டிய பல விசயங்களைப் பேசுகிறது.

            ரசிகமணியின் ரசிகத்தன்மையை வியந்துப் பாராட்டும் வகையில் கவிமணி எழுதிய

                        “கன்னித் தமிழே போல் கம்பன் கவியே போல்

                        மன்னும் பொதிகை மலையே போல் – பன்னு

                        நம் நாடு மகிழச் சிதம்பரநாத நண்பா!

                        நீடு நீ வாழ்க நிலைத்து.

                        “என்னருமை நண்பா! இனிய கலை ரசிகா!

                        தென்னர் தமிழர் வளர்க்கும் தேசிகா! – நனையச்

                        சீலம் தெரிந்த சிதம்பரநாத வள்ளால்

                        சால நீ வாழ்க தழைத்து!”

பாடல்களை இந்நூலில் சடகோபன் கோடிட்டுக் காட்டுகிறார்.[2] இப்பாடல்களொன்றில் கம்பர் கவியோடு இணைத்து கவிமணி ரசிகமணியை வாழ்த்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

            டி.கே.சி.யைப் பற்றி அனைவரும் எளிமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட இந்நூலில் சடகோபன் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் ஆராயப்பட வேண்டியதாக இருக்கிறது. இக்கருத்துகள் ரசிகமணியை அறிமுகம் செய்யும் விதத்திலான கருத்துகளாக இல்லாததோடு அவரின் சொந்தக் கருத்துகளாக உள்ளதால் இவ்வாராய்வு தேவைப்படுகிறது.

“இன்றைக்கு ஆரம்ப கல்வி ஆசிரியர்களே ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனாலும் அவர்களுக்குத் திருப்தியில்லை. அக்காலத்து ஆசிரியர்கள் சம்பளம் கொடுப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிராமல் பிள்ளைகளுக்கு நிறைவான கல்வி கொடுத்து வந்தார்கள்.”[3]

என்று ரசிகமணியின் இளமைக்கால கல்வியைக் குறிப்பிட வந்த இடத்தில் சடகோபன் பேசுகிறார். மற்றோர் இடத்தில்

“உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகம் இந்துக்களால் நடத்தப்பட்டு வந்தது. மெஷினரிப் பள்ளி இல்லை. ஆகவே சிதம்பரநாதன் படிப்பு தங்கு தடையின்றி நன்றாக நடந்து வந்தது”[4]

என்கிறார். இந்நூலைத் தொடர்ந்து படித்துக் கொண்டு சென்றால் டி.கே.சி. சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றிருக்கிறார் என்ற உண்மை தெரியவரும். அதைத் தொடர்ந்து நூலைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டு சென்றால்

“இன்றைய இட ஒதுக்கீடு திட்டத்தில் வரும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்கி வெளிக்கொணர முடியாமல் திணறுகிறார்கள்.”[5]

என்று ஒரே போடாகப் போடுகிறார். அக்கால ஆசிரியர்களுக்கும் இக்கால ஆசிரியர்களுக்கும் வேறுபாடு இருப்பதைப் பழமையின் மனோபாவமாக எடுத்துக் கொள்ளலாம். இந்துப் பள்ளிகளுக்கும் மிஷினரிப் பள்ளிகளுக்கும் வேறுபாடு இருப்பதாகக் குறிப்பிடுவதை வைதீகத் தன்மையில் ஊறிய மனோபாவமாகப் பார்க்கலாம். இறுதியாக இட ஒதுக்கீட்டின் நம்பிக்கையின்மையைப் புலப்படுத்தும் இடத்தை உயர்சாதி மனோபாவமாகக் கருதவும் இடம் இருக்கிறது. அதே நேரத்தில் ரசிகமணியோடு தமிழுக்கு இருந்த உறவினையும் அதன் பொருட்டு அவருக்கு உயர்ந்த தலைவர்கள் மற்றும் இலக்கியவாதிகளோடு இருந்த தொடர்பினையும் மிக எளிய நடையில் இந்நூல் பேசுகிறது.

நூல் குறிப்பு

நூலாசிரியர்

நாவலர் முனைவர் சடகோபன்

நூல் பெயர்

ரசிகமணி டி.கே.சி.

பதிப்பும் ஆண்டும்

முதல் பதிப்பு, 2019

பக்கங்கள்

168

விலை

ரூ. 145/-

நூல் வெளியீடு

அல்லயன்ஸ் கம்பெனி,

ப. எண் 244, ராமகிருஷ்ணா மடம் சாலை,

தபால் பெட்டி எண் 617,

மயிலாப்பூர், சென்னை – 600 004

தொடர்பு எண் : 91 44 24641314

books@alliancebook.com

 



[1] நாவலர் முனைவர் சடகோபன், ரசிகமணி டி.கே.சி. பக். 111, 112

[2] நாவலர் முனைவர் சடகோபன், ரசிகமணி, டி.கே.சி. ப. 142

[3] நாவலர் முனைவர் சடகோபன், ரசிகமணி டி.கே.சி., ப. 16

[4] நாவலர் முனைவர் சடகோபன், ரசிகமணி டி.கே.சி., ப. 25

[5] நாவலர் முனைவர் சடகோபன், ரசிகமணி டி.கே.சி., ப. 32

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...