14 Aug 2021

ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘நாவலும் வாசிப்பும்’

ஆ.இரா. வேங்கடாசலபதியின் ‘நாவலும் வாசிப்பும்’

            அண்மையில் வாசித்தது ஆ.இரா.வேங்கடாசலபதியின் நாவலும் வாசிப்பும்’ என்ற புத்தகம். தமிழகத்தில் மௌன வாசிப்பு எப்படிப் பழக்கத்திலும் புழக்கத்திலும் வந்தது என்பதை ஆய்வுத் தரவுகளோடு பேசுகிறது இப்புத்தகம்.

சரியாகச் சொல்வது என்றால் நாவலின் பிறப்பிற்குப் பின் மௌன வாசிப்பிற்குப் பழக்கப்பட்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கு முன்பு வரை ராகம் போட்டுப் படிப்பதுதான் பழக்கமாக இருந்திருக்கிறது. கி.ரா.வும் தன் எழுத்தில் இந்த ராகம் போட்டுப் படிப்பதைப் பதிவு செய்திருக்கிறார்.

            ஆரம்ப காலத்தில் நாவல் படிப்பது ‘பலான படம்’ பார்க்கும் அளவுக்கும், ‘மசாலா படம்’ பார்க்கும் அளவுக்கு மலினமாக தமிழ்ச் சமூகத்தில் இருந்திருக்கிறது. நாவல் படிப்பதை மட்டரகமானதாகத் தமிழ்ச் சான்றோர்கள் கருதியிருந்திருக்கிறார்கள். இதை மாற்றும் நோக்கில் லட்சிய நாவல்கள் படைக்கும் தமிழ்ச் சமூகத்தில் உண்டாகியிருக்கிறது. மு.வ.நாவல்களில் ஓர் இலட்சிய நோக்கம் இருக்கும். கல்கி, நா.பா., அகிலன் போன்றோர்கள்  இலட்சிய நோக்கத்தை வெகு நேர்த்தியாக அழகியலோடு கையாள்வார்கள்.

            ஒரு காலத்தில் மிக முக்கியமான பொழுதுபோக்குச் சாதனமாக நாவல் இருந்த காலத்தை இப்புத்தகம் மிக முக்கியமாகப் பேசுகிறது. இப்போது இருக்கும் திரைப்படங்கள், சின்னதிரைகளுக்கு நிகராக அசுரத்தனமான பொழுதுபோக்கு அம்சமாக நாவல் புத்தகங்கள் அப்போது திகழ்ந்திருக்கின்றன.

பொதுவாகப் பொழுதுபோக்கு எனும் போது மலினமான அம்சங்களும் அதில் கூடி வருவது இயற்கையாகவோ செயற்கையாகவோ நிகழ்ந்து விடும். அப்படித்தான் மலினமான நாவல்கள் நிறைந்த அந்தக் கால வரலாற்றை இதழியல் சான்றுகளோடு இப்புத்தகம் அலசுகிறது.

            ஆ.இரா. வேங்கடாசலபதியின் புத்தகங்களில் இயல்பாக நிறைந்திருக்கும் ஆய்வு நுணுக்கமும் சுவாரசியமான மொழி நடையும் இப்புத்தகத்தையும் மெருகூட்டுகிறது. நாவல் பிரியர்களும் நாவல் வரலாற்றை அறிய விரும்பும் ஆர்வலர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்றாக இப்புத்தகத்தைக் கொள்ளலாம் எனது கருத்து. காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இப்புத்தகம் குறித்த குறிப்புகள்

நூல் குறிப்பு

நூலாசிரியர்

ஆ.இரா. வேங்கடாசலபதி

நூல் பெயர்

நாவலும் வாசிப்பும்

பதிப்பும் ஆண்டும்

ஏழாம் (குறும்) பதிப்பு, 2020

பக்கங்கள்

136

விலை

ரூ. 150/-

நூல் வெளியீடு

காலச்சுவடு பதிப்பகம்,

669, கே.பி. சாலை,

நாகர்கோயில் – 629 001

publisher@kalachuvadu.com

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...