உங்கள் அலைபேசிக்குள் இருக்கும் ஒற்றன்
பித்தான் (கீபேட்) அலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் இப்போதும்
இருக்கிறர்கள். தொடுதிரை அலைபேசி என்றால் அவர்களுக்கு ஒரு வித ஒவ்வாமை. எனது தந்தை
இதற்கு ஒரு சான்று. புலனம், முகநூல், கீச்சு என்றில்லாமல் உங்களுக்குச் சிரமமாக இல்லையா
என்றால் அப்படியென்றால் என்ன? அதெல்லாம் எதற்கு? என்று கேட்பவர் அவர்.
மின்சாரக் கட்டணம் கட்ட வேண்டுமா? பணத்தை எடுத்துக் கொண்டு வரிசையில்
நின்று கட்டி விட்டு வந்து விடுவார். அலைபேசிக்குப் பணம் போட வேண்டுமா, பெட்டிக் கடைக்குப்
போய் எண்ணைச் சொல்லி பணம் போட்டதற்கான செய்தி வந்தால் பணத்தைக் கொடுத்து விட்டு வருவார்.
இன்னும் பணம் எடுக்கும் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்காத ஆட்களில் அவர் ஒருவர்.
வங்கிக்குச் சென்று படிவத்தை நிரப்பிக் கையொப்பம் இட்டு பணத்தை எடுத்து வருபவர்.
ஏன் இப்படி என்றால் இப்படியே பழகி விட்டது, இதுவும் நன்றாகத்தான்
இருக்கிறது என்று அழுத்தமாகச் சொல்பவர். நாட்டில் அலைபேசி பெரும் புழக்கத்துக்கு வந்த
பிறகும் மிக நீண்ட நாட்களுக்கு எங்கள் வீட்டில் தரைவழித் தொடர்பிலான தொலைபேசி இருந்தது.
அப்போது அலைபேசியில் பேசுவதை விட தொலைபேசியில் பேசுவதில் வெகு ஆர்வமாக இருந்தார். காலப்போக்கில்
பி.எஸ்.என்.எல். அனுப்பிய கட்டணப் பட்டியல் அதிகமாக அதாவது ஒரு மாதத்திற்கு மூவாயிரம்
என்று வந்த போது அதிர்ந்து போய் நிறுத்த வேண்டியதாகி விட்டது. அதுநாள் வரை அப்போதெல்லாம்
உங்கள் வீட்டில் தரைவழித் தொலைபேசி இருக்கிறதா என்று பலர் ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்த
சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்தன.
இப்போதும் ஒரு சிலர் அலைபேசி எண் இல்லாமல் தொலைபேசி எண் மட்டும்
கொண்ட முகவரி அட்டை கொடுக்கும் போது நம்மை அறியாமல் ஒரு வியப்பு மேலிடத்தான் செய்கிறது.
பித்தான் (கீபேட்) அலைபேசியைப் பயன்படுத்துபவர்களைப் பார்க்கும் போது ஒரு வியப்புதான்
ஏற்படுகிறது.
இந்தப் பித்தான் அலைபேசியில் இருக்கும் பாதுகாப்பும் வசதியும்
தொடுதிரை அலைபேசியில் இல்லை எனும் போது பித்தான் அலைபேசியே பரவாயில்லை என்று தோன்றும்.
குறிப்பாக இப்போது பெரிதாக பேசப்படும் Pegasus பிரச்சனையை எடுத்துக் கொண்டால் அது போன்ற
அசாத்தியங்கள் பித்தான் அலைபேசியில் சாத்தியமில்லை.
இந்த Pegasus பிரச்சனைக்குக் காரணம் தொடுதிரை அலைபேசி இயங்கும்
மென்பொருள் இயங்கதளம்தான். அது ஆன்ட்ராய்டாக இருந்தாலும் ஆப்பிள் வகையறாவாகவோ இருந்தாலும்
இரண்டிலும் புகுந்து Pegasus விளையாடுகிறது. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அலைபேசியை
இயக்குகிறது. நீங்கள் பேசுவதை எல்லாம் போட்டுக் கொடுக்கிறது. நீங்கள் அனுப்பும் தகவல்களையெல்லாம்
ஒற்றனைப் போல் இருந்து கவனித்துக் அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
அலைபேசியின் அலையில் நீங்கள் அடித்துச் செல்லப்படும் ஒவ்வொரு கணத்தையும் கண்கொத்திப்
பாம்பைப் போல் கவனித்துக் கொண்டே உங்களுக்கு எதிரான தரமான சம்பவத்தைச் செய்து கொண்டு
இருக்கிறது.
பெரும் தலைவர்களின் அலைபேசிகள் வரை Pegasus லிருந்து தப்ப முடியவில்லை
என்றால் நம்முடைய அலைபேசிகள் குறித்து சொல்ல என்ன இருக்கிறது? பெருந்தலைவர்கள் தங்கள்
அலைபேசிக்கு அதிகபட்ச பாதுகாப்பைச் செய்து வைத்திருப்பார்கள் அவர்களுக்கு இருக்கும்
கமாண்டாக்களின் பாதுகாப்பைப் போல. அவர்களாலே Pegasus லிருந்து பாதுகாப்பைச் செய்து
கொள்ள முடியவில்லை என்பதை அண்மை கால செய்திகள் காட்டுகின்றன.
முன்னொரு காலத்தில் ஒருவரை உளவு பார்க்க ஒற்றர்களை நியமிக்க
வேண்டும். ஒற்றறிடமிருந்து செய்திகளைப் பெற வேண்டும். இப்போதெல்லாம் ஒருவரை உளவு பார்க்க
மட்டுமல்ல அவரது ஜாதகத்தை அக்குவேறு ஆணி வேறாக அலச அவரது அலைபேசி ஒன்றே போதுமானது.
அலைபேசியை ஒருவர் நண்பனாய்
நினைக்கலாம். நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியாத ரகசியம் இருக்காது என்பது போல உங்களது
அலைபேசிக்கு உங்களைப் பற்றித் தெரியாத ரகசியம் ஏதும் இருக்கப்போவதில்லை. இதில் வினை
என்னவென்றால் உங்களைப் பற்றிய அத்தனை ரகசியத்தையும் உங்கள் அலைபேசிக்குள் Pegasus புகுந்தால்
அது ரகசியமாக உங்களுக்குத் தெரியாமல் அனுப்பிக் கொண்டிருக்கும் என்பதுதான்.
Pegasus ஐ அழிப்பது சாதாரணமில்லை.
ஒரு வகையில் அதுவும் கொரோனா வைரஸைப் போலத்தான். அழிக்க அழிக்க புதிய வகைகளில் கொரோனா
வைரஸ் டெல்டா, லாம்டா என்ற பெயர்களில் புதுப்பரிணாமம் எடுப்பதைப் போல Pegasus ம் புதுப்புது
பரிணாமங்களை எடுத்துக் கொண்டு இருக்கிறது.
Pegasus பற்றி மேலும் விவரங்கள் தாங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் கீழே சொடுக்கவும்.
No comments:
Post a Comment